விவசாயிகள்மீதான காவல்துறையின் நடவடிக்கைக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. அது, எல்லா ஆட்சியாளர்களும் செய்யக்கூடியதுதான்.
ஆனால், தங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் விளைநிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று போராடும் விவசாயிகள்மீது, குண்டர் தடுப்புச் சட்டத்தை ஏவுவதை ஏற்க முடியாது என்பதுதான் பொதுவான கருத்தாக எழுந்திருக்கிறது. அதனால்தான், ‘விவசாயிகள்மீது குண்டர் சட்டமா?’ என்று எல்லோரும் அதிர்ந்துபோனார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள்மீது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது.
அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற அந்த அராஜகத்துடன், இதை ஒப்பிட முடியாதுதான் என்றாலும், விவசாயிகள்மீது குண்டர் சட்டம் போடுவதை ஏற்க முடியாது. கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்த அரசு, விவசாயிகள் விவகாரத்தில் ஏன் குண்டர் சட்டம் வரை போகிறது என்ற கேள்வியை சமூகச் செயற்பாட்டாளர்கள் எழுப்பினர்.
இந்த நிலையில்தான், நேற்றைய தினம் குண்டர் சட்டத்தின்கீழ் சிறைப்படுத்தப்பட்ட ஏழு விவசாயிகளில், 6 பேர் மீதான நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக ரத்துசெய்து, உத்தரவுப் பிறப்பித்திருக்கிறார். 6 பேர்மீதான குண்டர் தடுப்புக்காவல் ரத்துசெய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் அருள் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை மட்டும் ரத்துசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.vikatan.com
