2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வியூகங்கள் பரபரக்க தொடங்கிவிட்டன. அந்த வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதியை வைத்து போடப்படும் அரசியல் கணக்குகளால், தி.மு.க கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது கோவை சிட்டிங் எம்.பி-யாக பி.ஆர்.நடராஜன் (சி.பி.எம்) உள்ளார். இதனிடையே சமீபத்தில் கோவை வந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவதை சூசகமாக அறிவித்துள்ளார்.
“எனக்கு மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை, மருந்து போட்டுவிட்டு வந்து மீண்டும் கோவையில் போட்டியிடுவேன்.” என்று கமல் பேசினார். ஏற்கெனவே 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு அவர் நூலிழையில் தோல்வியடைந்தார்.

சமீபகாலமாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோருடன் நெருக்கமாக உள்ள கமல், அதன்மூலம் மீண்டும் கோவையில் போட்டியிட்டு 2021-ம் ஆண்டில் விட்டதை 2024-ம் ஆண்டு பிடிக்க திட்டமிட்டு வருகிறார்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “கோவை, மதுரை தொகுதிகளை இந்த தேர்தலிலும் கேட்டு பெற்று போட்டியிடுவோம்.” என்றவர், கமல் குறித்த கேள்விக்கு, “கமல்ஹாசன் இந்தியா கூட்டணிக்கு வருவதை வேண்டாம் என சொல்லவில்லை.

அது நாளை முடிவாகும் என சொல்ல முடியாது.” என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம் தி.மு.க கூட்டணியில் கோவை நாடாளுமன்ற தொகுதியை வைத்து இப்போதே குழப்பம் தொடங்கிவிட்டது.
“கோவை இல்லாவிடின் நமக்கு எந்தத் தொகுதி.” என கம்யூனிஸ்ட்டுகளிடையே விவாதம் எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன், “கலைஞர் என்னை தி.மு.க-வுக்கு அழைத்தார்.

அப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போகிறேன் என்று சொல்லியிருக்க வேண்டும்.” என்று பேசியிருந்தார். எந்த கம்யூனிஸ்ட் கட்சியில் சேர நினைத்தாரோ, தற்போது கூட்டணி விவகாரத்தில் அதே கம்யூனிஸ்ட்களுடன் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
