தேசியக் கட்சிகள் கோலோச்சும் கர்நாடக அரசியலின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ம.ஜ.த) கட்சியின் ராஜதந்திரங்களைப் புரிந்துகொள்ள முடியும். தொங்கு சட்டமன்றம் ஏற்படும் சமயங்களில், சொற்ப உறுப்பினர்களைக் கொண்டு இரண்டு முறை முதல்வர் அரியணை ஏறிய பெருமை ம.ஜ.த-வையே சாரும். அன்று கூட்டணி அமைத்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய ம.ஜ.த, இன்று அதேபோல ஒரு கூட்டணியால் இரண்டாக உடையும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
என்.டி.ஏ கூட்டணியில் ம.ஜ.த!
ம.ஜ.த தலைவரும், முன்னாள் கர்நாடக முதலமைச்சருமான ஹெ.டி.குமாரசாமி, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, என்.டி.ஏ கூட்டணியில் ம.ஜ.த இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ம.ஜ.த-வின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகெளடா ஒப்புதல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, `கட்சியின் பெயரிலேயே `மதச்சார்பற்ற’ என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பதா?’ என்று முக்கிய நிர்வாகிகள் கேள்வி எழுப்ப, கட்சிக்குள் கலகம் வெடித்தது. விளைவு, குமாரசாமியின் நெருங்கிய வட்டாரத்திலிருந்த முன்னாள் எம்.எல்.ஏ அஷ்வத் உள்ளிட்ட சில நிர்வாகிகள் காங்கிரஸில் இணைந்தனர். குறிப்பாக, சிறுபான்மையினர் அணியைச் சேர்ந்தவர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகினர். இதில், ம.ஜ.த-வின் மாநிலத் துணைத் தலைவர் சையத் ஷஃபிஉல்லாவும் (Syed Shafiulla) அடக்கம். “மதச்சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்ட ம.ஜ.த, இந்துத்துவா கொள்கையுடன் சமூகங்கள், சாதிகளுக்கிடையே பிளவை உண்டாக்கும் கட்சியுடன் கைகோத்திருப்பதை என் மனம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என்றார் சையத்.
`தேவகெளடாவின் குடும்பச் சொத்தல்ல கட்சி!’
கூட்டணி முடிவு அறிவிக்கப்பட்ட சமயத்திலேயே கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களின் ம.ஜ.த தலைவர்கள், தலைமையின் முடிவுக்கு எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தனர். கர்நாடக மாநில ம.ஜ.த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான இப்ராஹிமும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, மாநிலத் தலைவர் என்ற முறையில் சில நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டமும் நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு தலைமைக்கு எதிராக இப்ராஹிம் கொந்தளிக்க, கர்நாடக அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது.
“மதச்சார்பற்ற கொள்கைகளால்தான் தேவகெளடா பிரதமரானார் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. குமாரசாமி எம்.எல்.ஏ ஆனது எப்படி… இஸ்லாமியர்கள் வாக்களிக்காவிட்டால், அவர் வீட்டில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும். மதச்சார்பின்மைதான் நமது கொள்கை… பா.ஜ.க-வின் கொள்கையே வேறு. அவர்களுடன் கூட்டணி அமைக்கக் கூடாது. ம.ஜ.த, காங்கிரஸ் கட்சியைத்தான் ஆதரிக்கிறது. நாங்கள்தான் உண்மையான ம.ஜ.த. இந்தக் கட்சி ஒன்றும் தேவகெளடாவின் குடும்பச் சொத்தல்ல. பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் என்னுடன் தொடர்பிலிருக்கிறார்கள்” என்று தேவகெளடா குடும்பத்துக்கு எதிராகக் கொந்தளித்திருக்கிறார் இப்ராஹிம். எம்.எல்.ஏ-க்கள் பலரும் தன்னுடன் இருப்பதாக இப்ராஹிம் கூறியிருப்பதால், ம.ஜ.த இரண்டாக உடையும் என்ற பேச்சு கர்நாடக அரசியல் களத்தைச் சூடாக்கியிருக்கிறது.

இதற்கு பதிலளித்த குமாரசாமி, “கட்சியினர் அவர் (இப்ராஹிம்) பக்கம்தான் என்றால், `நான்தான் ஒரிஜினல்’ என்று போர்டு வைத்துக்கொள்ளட்டும். அவரை இப்போது யார் தடுத்தது… இது போன்ற முட்டாள்தனமான விஷயங்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. கட்சிக்குத் தேவையான முடிவுகளைத் தலைமை எடுக்கும்” என்றார். இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து இப்ராஹிமை நீக்கிவிட்டு, குமாரசாமியை நியமித்தார் தேவகெளடா.
இதனால் ஆத்திரமடைந்த இப்ராஹிம், “என்னை அவர்களால் தலைவர் பதவியிலிருந்து நீக்க முடியாது. ம.ஜ.த கட்சி விதிப்படி, முதலில் எனக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்; பின்னர், கட்சிக் கூட்டத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துதான் என்னை நீக்க முடியும். நாங்கள் உயர் நீதிமன்றத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சென்று இதற்குத் தடை வாங்குவோம். கேரளா, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலுள்ள ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு, அடுத்த கட்ட முடிவுகளை எடுப்பேன்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் எனக்கு எந்தவித தனிப்பட்ட பகையும் இல்லை. ஆனால், அவர்களது சித்தாந்தத்தை நான் எதிர்க்கிறேன். எனவே, தேவகெளடாவிடம், பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்து மீண்டும் பரிசீலிக்குமாறு கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.
வலுவிழக்கும் ம.ஜ.த?!
1996-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது 46 இடங்களில் மட்டுமே வென்றிருந்த ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகெளடா பிரதமரானார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தொடங்கிய பிறகு, தேவகெளடாவின் யோகம் அவரது மகன் குமாரசாமிக்கும் அடித்தது. 2006, 2018 ஆகிய ஆண்டுகளில் 50-க்கும் குறைவான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் கொண்டு கர்நாடகத்தின் முதல்வரானார். பெரும்பான்மையில்லாமலேயே பிரதமர், முதல்வர் பதவிகளைக் கைப்பற்றிய அப்பா, மகனுக்கு எதிராக இன்று ம.ஜ.த-வுக்குள் குரல்கள் கிளம்பியிருக்கின்றன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலேயே ம.ஜ.த-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், கர்நாடக மக்களுக்கு அந்தக் கட்சியின்மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாக விவாதங்கள் கிளம்பின. இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணி விவகாரத்தால் கட்சிக்குள் வெடித்திருக்கும் மோதல், மேலும் ம.ஜ.த-வை வலுவிழக்கச் செய்யும் என்றே தெரிகிறது.

பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்த இந்தியாவின் முக்கியக் கட்சிகள் சில இரண்டாக உடைந்து கிடக்கின்றன. அந்த வரிசையில் ம.ஜ.த-வும் இணையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
நன்றி
Publisher: www.vikatan.com
