‘சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்’டில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, ‘டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா ஆகியவற்றைப் போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது’ என்றார்.

அதற்காக, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றத்திலும், சனாதன தர்மம் பற்றிய பேச்சுக்காக உதயநிதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. சனாதனத்துக்கு எதிரான பேச்சுக்கு பதிலடி கொடுக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியதாக செய்திகள் பரபரத்தன.
இந்த நிலையில்தான், ‘சனாதன தர்மம் அழிவில்லாதது’ என்று பேசியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது, ‘சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது’ என்ற உதயநிதியின் பேச்சுக்கு பதில் கொடுப்பதுபோல அமைந்திருக்கிறது. சென்னை அண்ணாநகரில் ‘சனாதன உற்சவம்’ என்ற தலைப்பில் செப்டம்பர் 29-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி பேசினார். அப்போது, ‘சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. நாம் அனைவரும் சமம் என்று நமது வேதம் கூறுகிறது. தமிழகத்தில் சனாதன தர்மம் வளம்பெற்று இருந்தது. சனாதன தர்மத்தின் அடிப்படைக் கூறுகள் தமிழகம் முழுவதும் உள்ளன’ என்றார்.

மேலும், ‘தமிழகத்திலுள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளில் சனாதனத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர், திருநெல்வேலி மாவட்டம் மானூர் உள்ளிட்ட இடங்களில் கிடைத்த கல்வெட்டுகளில் சனாதனம் பற்றிய குறிப்புகளைக் காணலாம். சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முடிந்தால் முதலில் இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் அழித்துப் பாருங்கள். சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்துவிட்டனர். யாராலும் அதை அழிக்க முடியவில்லை’ என்றார் ஆர்.என்.ரவி.
அத்துடன், ‘இன்று சிலர் சுயநலத்துக்காக சனாதன தர்மத்தைத் திரித்துக் கூறுகிறார்கள். ஆனால், சனாதனம் அழியாது. யாரெல்லாம் சனாதனத்தை அழிக்கப் பார்க்கிறார்களோ, எதிர்க்கப் பார்க்கிறார்களோ, அவர்கள் நாட்டை உடைக்கப் பார்க்கிறார்கள். சனாதனம் எனும் அடிப்படையை உடைக்க முயல்வது, நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி’ என்ற கடுமையான விமர்சனங்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்தார்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு, சனாதனம் பற்றி அதிகமாக அவர் பேசிவந்தார். அதையடுத்துத்தான், சனாதனம் பற்றிய சர்ச்சை தமிழ்நாட்டில் எழுந்தது. சனாதனம் தொடர்பான ஆளுநரின் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. ஆனாலும், தொடர்ச்சியாக அவர் சனாதனம் தொடர்பான கருத்துகளைப் பேசிவந்தார்.
வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘பத்தாயிரம் ஆண்டுகால பாரம்பர்யத்தைக் கொண்ட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம்தான் வள்ளலார். காழ்ப்புணர்ச்சியாலும் அறியாமையாலும் சிலர் சனாதன தர்மத்தைப் பற்றி தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். பிஷப் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் நூல்களை மொழிமாற்றம் செய்தபோது, நூல்களில் இருந்த இறைக் கருத்துகளை நீக்கினார்கள். காரல் மார்க்ஸ், ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்வதற்காகப் பல கட்டுரைகளை எழுதினார். காரல் மார்க்ஸ் போன்றவர்கள் நம்மைப் பற்றி மோசமாகப் பேசிக்கொண்டிருந்தபோதுதான், வள்ளல் பெருமான் என்ற ஞான சூரியன் தோன்றினார்’ என்றார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் அந்தப் பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
அதன் தொடர்ச்சியாகவே, `சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார். அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் வந்த பிறகும், சனாதன எதிர்ப்பு நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவே உதயநிதி கூறினார். இது, சனாதன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஆளுநர் ரவிக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம். ஆகவேதான், சனாதன தர்மம் அழிவில்லாதது என்று உதயநிதிக்கு பதில் கொடுப்பதுபோல அவர் பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com