விளையாட்டுப் பயிற்சிகள், போட்டிகள் என எப்போதும் பிஸியாகவே இருக்கும் இந்த விளையாட்டு மைதானம் இப்போது மழைநீர் வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்படும் சாக்கடை மண், உடைந்த கான்கிரீட் இடிபாடுகளைக் கொட்டும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் நடபெற்றுவரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகளையும் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டிருக்கிறது மாநகராட்சி. அந்த வகையில், கோபாலபும், அருகிலுள்ள அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்டப் பகுதிகளின் சாலையோரங்களில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் குழிகள் வெட்டப்பட்டு கால்வாய் தோண்டப்படுகின்றன. அதிலுள்ள சாக்கடை கலந்த மண், கான்கிரீட் இடிபாடுகள், சேதமடைந்த தார்சாலை, மரத்தின் அடிவேர்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் என ஒட்டுமொத்த கழிவுகளும் லாரிகளில் ஏற்றப்பட்டு, நேராக கோபாலபுரம் விளையாட்டு மைதானத்துக்கு கொண்டுவந்து தற்போது கொட்டப்பட்டு வருகின்றன.
மேலும், மைதானத்தில் வைத்துதான் மழைநீர் வடிகால் பணிகளுக்கான கான்கிரீட் மூடிகள், ஸ்லாப்புகள் உருவாக்கும் பணிகளும் வடமாநிலத் தொழிலாளர்களைக்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மைதானமே குப்பைமேடாகி, இனி விளையாடவே முடியாத அளவுக்கு மோசமாக மாறியிருக்கிறது.
இதுகுறித்து அந்த மைதானத்தில் எஞ்சியிருக்கும் இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களிடம் பேசியபோது, “இந்த ஒரு கிரவுண்டை நம்பித்தான் நாங்கள் அனைவரும் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து என பல விளையாட்டுகளை விளையாடி வருகிறோம். தற்போது இதையும் கல், மண் என்று கொட்டினால் நாங்கள் எங்கு சென்று விளையாடுவது? மண்மேடாக இருந்தால்கூட பரவாயில்லை, அதையும் தாண்டி பாறைகற்களும், உடைந்த மதுபாட்டில்களும் முக்கியமாக கான்கிரீட் இடிபாடுகளிலிருந்து துருபிடித்த கம்பிகளும் நீட்டிக்கொண்டிருக்கின்றன. இதில் விளையாடினால், தவறுதலாக கால்வைத்தால், விழுந்தால் எங்கள் நிலைமை என்னவாகும்? புதிதாக கிரவுண்டை மேம்படுத்துவார்கள் என்றுபார்த்தால், நன்றாக இருப்பதையும் நாசமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்!” என வேதனை தெரிவித்தனர்.
நன்றி
Publisher: www.vikatan.com