குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரேணுகா, “மாநகராட்சியே சிறப்பாக நடத்திவரும் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு கொடுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல, மற்ற இடதுசாரி வார்டு கவுன்சிலர்களும் எழுந்து எதிர்ப்புக் குரலெழுப்பினர். அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “சென்னை தவிர தமிழ்நாட்டிலுள்ள அத்தனை மாநகராட்சிகளிலும் வெளிநிறுவனம் மூலம்தான் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது; திட்டம் ஆரம்பிக்கும்போதே அவுட்சோர்சிங்குக்குதான் கொடுக்கப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சியும் இப்போது இணைந்திருக்கிறது” எனக் கூறினார். இதை ஏற்காமல் தொடர்ந்து இடதுசாரி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசிக்கொண்டிருக்கும்போது, மாமன்ற கூட்டத்தில் ஒரு பெண் வார்டு கவுன்சிலர் மயக்கமடைந்தார். இதனால் விவாதம் திசைதிரும்பியது. வழக்கமாக தீர்மானம் நிறைவேற்றப்படும்போது மேயரால் முன்மொழியப்படும், “தீர்மானத்தை ஏற்போர் ஆம் என்க, எதிர்ப்போர் இல்லை என்க!” என்று கேள்வியே கேட்கப்படாமல், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாமன்றக் கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

தீர்மானத்தில் இருக்கும் விவரங்கள்:
தேவைப்படும் நிதி எவ்வளவு?
ஒரு வருடத்திற்கு தோராயமாக ஒரு பள்ளி செயல்படும் நாள்கள் 230 என்றும், ஒரு நாளைக்கு ஒரு மாணவனுக்கு காலை உணவு திட்டத்திற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.12.71 என்றும் கணக்கிடப்பட்டு, ஒட்டுமொத்தமாக 350 பள்ளிகளுக்கும், 65,030 மாணவ மாணவிகளுக்கும் சேர்த்து சுமார் 19 கோடி ரூபாய் (ரூ.19,102,198) ஆண்டு நிதியாக ஒதுக்கப்படவிருக்கிறது.
ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்ன?
மத்திய வட்டாரத்தில் 13 சமையல் கூடங்கள் வழங்கப்படும். அதன் கட்டடத்தின் பராமரிப்பு செலவு, குடிநீர் வசதி, சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், மின்சார வசதிகள், சமையல் எரிவாயு இணைப்பு போன்ற பல சலுகைகளை சென்னை மாநகராட்சியே ஒப்பந்ததாருக்கு இலவசமாகக் கொடுக்கும்.

ஒப்பந்ததாரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்ன?
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான காலை உணவு வழங்கப்பட வேண்டும். உணவு வகை பட்டியலை எந்த காரணம் கொண்டும் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன் அனுமதியின்றி மாற்றக்கூடாது. காலை 8.00 மணிக்கு பள்ளியில் காலை உணவு வழங்கப்பட வேண்டும். காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப்பொருள்கள் (Extraneous substance) கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொண்டு சமைக்கக்கூடாது உள்ளிட்ட 41 கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நன்றி
Publisher: www.vikatan.com
