இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் போராளிக்குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. மனிதநேயமற்ற இந்தப் போரால் பெரும்பான்மையான அப்பாவி மக்களும், நூற்றுக்கணக்கான குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து பற்றாக்குறையால் காஸாவில் மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகிறார்கள். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆனால், இஸ்ரேல், மருத்துவமனைமீதான இந்தத் தாக்குதலில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்திருக்கிறது. இந்த நிலையில், சிரியாவில் உள்ள இரானிய தூதரகம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “நூற்றுக்கணக்கான ஆயுதமற்ற மற்றும் பாதுகாப்பற்ற மக்களைக் கொன்று குவித்து, பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைமீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு நாம் கொடுத்த நேரம் முடிந்துவிட்டது. இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
நேற்று இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, “காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய அதிகாரிகள் செய்த குற்றங்களுக்காக அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், சிரியாவின் டமாஸ்கஸ் மற்றும் வடக்கு நகரமான அலெப்போவிலுள்ள விமான நிலையங்கள்மீது ஒரே நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி, ஓடுபாதைகளைச் சேதப்படுத்தியதால், அங்கு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளைமுதல் அதன் பணிகள் முடிவடைவதால் வியாழக்கிழமைக்குள் மீண்டும் சேவை தொடங்கப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநரகம் செய்தி வெளியிட்டது. மேலும், லெபனான் எல்லையிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள 28 கிராமங்களில் வசிப்பவர்களை வெளியேற்றும் திட்டத்தை இஸ்ரேல் செயல்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, “காஸா பகுதியில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், எதிர்வரும் நேரங்களில் இஸ்ரேலுக்கு எதிராக முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும்” என இரான் எச்சரித்திருக்கிறது.
இரான் ஆதரவு, லெபனான் குழுவான ஹிஸ்புல்லா அமைப்புடன் இஸ்ரேல், லெபனான்-இஸ்ரேல் எல்லையில் பல நாள்களாகத் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.
இது குறித்துப் பேசிய இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன், “எல்லா வகையான சாத்தியங்களும் ஹிஸ்புல்லாவுக்கு இயற்கையாகவே இருக்கின்றன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கற்பனை செய்யமுடியாதளவில் இருக்கும். நமது தலைவர்கள் இஸ்ரேலை காஸாவில் அது விரும்பியபடி செயல்பட அனுமதிக்கமாட்டார்கள்.
இன்று காஸாவை நாம் பாதுகாக்கவில்லை என்றால், நாளை நமது சொந்த நாட்டின் குழந்தைகள் மருத்துவமனையில், இந்த பாஸ்பரஸ் குண்டுகளுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலை உருவாகும். இஸ்ரேல், பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துகிறது என்ற மனித உரிமைக் குழுக்களின் தகவல் அதை உறுதிப்படுத்துகிறது. இப்போது நமது நாட்டின் தெற்கே இருக்கும் இந்த மோதல் மற்ற இடங்களிலும் பரவுவதற்கான சாத்தியங்கள் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்.
அதை எதிர்கொள்ளத் தயாராகவும் இருக்கிறார்கள். காஸா பகுதியில் குழந்தைகளைக் கொன்றுகுவிக்கும் இஸ்ரேலிய தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. அதனால் சூழல் மிக வேகமாக மோசமாகிவருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
