Operation Ajay: இஸ்ரேலிலுள்ள இந்தியர்களை மீட்கும் மத்திய

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக் குழு, கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஹமாஸ் போராளிக் குழுமீது பதில் தாக்குதல் தொடுக்கிறோம் என்று பெயரில், பாலஸ்தீனத்தின் காஸாமீது இஸ்ரேல் போர்தொடுத்து வருகிறது. இந்தப் போரில், ஹமாஸ் போராளிக் குழுவின் செயலை `தீவிரவாதச் செயல்’ என்று கூறிவரும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு போர்க் கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்கி வருகிறது. இதில் இந்தியாவும், இஸ்ரேல் பக்கம் ஆதரவாக நிற்கிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீன் யுத்தம்

அதேசமயம், இரான், இராக், சிரியா, சவூதி அரேபிய போன்ற நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நிற்கின்றன. மேலும், அமெரிக்காவை எதிர்க்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்தப் போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு, கடந்த ஐந்து நாள்களாக நடந்துவரும் இந்த யுத்தத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமான குடும்பங்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றன. இத்தகைய பதற்றமான, நெருக்கடியான சூழலில், இஸ்ரேலில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருவதாக, மும்பையிலுள்ள இஸ்ரேல் கன்சல் ஜெனரல் கோபி ஷோஷானி தெரிவித்திருந்தார். இதற்கிடையில், போர் காரணமாக, இஸ்ரேலிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படும் விமானங்களின் சேவைகளை அக்டோபர் 14-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது ஏர் இந்தியா நிறுவனம். இதனால், அங்கிருக்கும் இந்தியர்கள் யாரும் வர இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறான சூழலில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானம் மூலம் மீட்கும் வகையில், `ஆபரேஷன் அஜய்’ என்ற பெயரில் மீட்புப் பணியை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. ஆபரேஷன் அஜய் திட்டத்துக்கான அறிவிப்பை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அறிவித்திருந்தார். அதற்கேற்றவாறு, டெல்லியில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையையும், டெல் அவிவ் (Tel Aviv – இஸ்ரேல்) மற்றும் ரமல்லாவில் (Ramallah – பாலஸ்தீனம்) தனி அவசர உதவி மையங்களையும் அமைத்து, அங்குள்ள நிலைமையைக் கண்காணிக்கவும், உதவி தேவைப்படும் இந்தியர்களுக்குத் தகவல் மற்றும் உதவி அளிப்பதற்கான ஏற்பாட்டையும் செய்தார்.

ஆபரேஷன் அஜய்

இந்த நிலையில், ஆபரேஷன் அஜய் திட்டத்தின் முதல் விமானம், இஸ்ரேலிய நேரப்படி இன்றிரவு ஒன்பது மணியளவில், டெல் அவிவிலுள்ள பென் குரியன் விமான நிலையத்திலிருந்து இந்தியர்களை ஏற்றிக்கொண்டு டெல்லி நோக்கி புறப்படவிருக்கிறது. முதற்கட்டமாக, முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்திய தூதரகத்தில் பதிவுசெய்திருப்பவர்களில் 230 பேரை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு வரவிருக்கிறது இந்த விமானம். மேலும், இதில் பயணிக்கும் இந்தியர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்றும், முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை `ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு இந்தியாவுக்கு மீட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *