#Sorry_Pakistan: குஜராத் ஸ்டேடியத்தில் `ஜெய் ஶ்ரீராம்'

இதிகாச கதைகளில் போர் வெற்றிக்காக சொல்லப்படும் `ஜெய் ஶ்ரீராம்’ என்ற கோஷம், இப்போது இஸ்லாமிய மத வெறுப்புணர்வைத் தூண்டுவதற்காகச் சொல்லப்படும் அளவுக்கு தன்மை மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தொடக்கத்தில் பா.ஜ.க ஆளும் வட மாநிலங்களில் மாட்டுக்கறி விற்கும் இஸ்லாமிய ஆண்களுக்கு எதிராகவும், ஹிஜாப் அணியும் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராகவும் `மத அடிப்படைவாதிகளால்’ பொதுவெளியில் ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டு வந்தது. அதன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தின. இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக `ஜெய் ஶ்ரீராம்’ கோஷம் போடும் அளவுக்கு `தேசபக்தி’ எனும் பெயரிலான இஸ்லாமிய வெறுப்புணர்வு மிதமிஞ்சிப் போயிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

இந்தியா – பாகிஸ்தான்

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 14-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், மைதானத்திலிருந்து வெளியேறி பெவிலியனுக்குச் நடந்து சென்றார். அப்போது இந்திய ரசிகர்கள் சிலர் ரிஸ்வானுக்கு எதிராக `ஜெய் ஶ்ரீராம்’ கோஷத்தை சத்தமாக எழுப்பினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அங்கிருந்த இந்திய ரசிகர்கள்தான் இப்படியென்றால், ஸ்டேடியத்தின் DJ-க்களும் சொல்லிவைத்தார்போல, ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்ற `ஜெய் ஶ்ரீராம்’ பாடலை ஒவ்வொரு ஓவருக்குமிடையில் ஒலிக்கவிட்டுக்கொண்டிருந்தனர். வெற்றிக்களிப்பில் தேசபக்தியை வெளிப்படுத்த `ஜெய் ஹிந்த், இந்தியா, வந்தே மாதரம்’ என்ற கோஷங்களை முன்பு இந்திய ரசிகர்கள் எழுப்பிவந்த நிலையில், இப்போது திட்டமிட்டு மத அடிப்படையிலான `ஜெய் ஸ்ரீராம், கணபதி பாபா மோரியா’ என்ற கோஷங்களை எழுப்பும் வகையில் மடைமாற்றப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், “நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தப் போட்டி ஒரு ஐசிசி தொடர் போலவே இல்லை. ஏதோ பிசிசிஐ நடத்தும் இருதரப்பு தொடர் போலத்தான் இருந்தது. ஒருமுறை கூட `தில் தில் பாகிஸ்தான்’ பாடல் ஒலிக்கப்படவில்லை. அது உளவியல் ரீதியாக எங்களைப் பாதித்தது. மேலும், இந்த விஷயத்தில் நான் இப்போதைக்கு எதுவும் பேச முடியாது. அப்படி பேசி எனக்கு அபராதம் விதிக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை!” எனத் தெரிவித்தார்.

மிக்கி ஆர்தர்

இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக இந்திய ரசிகர்கள் எனும் பெயரில் மத அடிப்படைவாதிகளால் எழுப்பட்ட `ஜெய் ஶ்ரீராம்’ கோஷத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். அதேபோல, பாகிஸ்தான் வீரர்களிடம் வருத்தம் தெரிவிக்கும் விதமாக #Sorry_Pakistan என்ற ஹேஷ்டேகை `எக்ஸ்’ தளத்தில் இந்திய மக்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின்

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்தியா அதன் விளையாட்டுத்தன்மைக்கும், விருந்தோம்பலுக்கும் பெயர்பெற்ற நாடு. இருப்பினும் நரேந்திரமோடி மைதானத்தில் பாகிஸ்தான் வீரருக்கு நேர்ந்தது ஏற்புடையதல்ல. அது மிகவும் கீழ்த்தரமானது. விளையாட்டு என்பது தேசங்களுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருக்க வேண்டும். சகோதரத்துவத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டும். அதை வெறுப்பைப் பரப்பப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது!” என தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியான சாகேத் கோகலே, “2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடந்த வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். ஆனால், பாகிஸ்தான் வீரருக்கு எதிராக `ஜெய்ஸ்ரீராம்’’என முழக்கமிடும் பார்வையாளர்களை பா.ஜ.க உருவாக்கியிருக்கும் நிலையில், சர்வதேச போட்டிகளை நடத்தும் அளவுக்கு நாம் தகுதி பெற்றிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. நரேந்திர மோடி மைதானத்தில் இப்படியான சம்பவம் நடைபெறுவது ஆச்சரியப்படுவதற்கில்லை!” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதேபோல மேலும், பல இந்திய ரசிகர்கள், அரசியல் விமர்சகர்கள் தங்கள் வலைதளப்பக்கங்களில், `1999-ம் ஆண்டு சென்னை ஸ்டேடியத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வென்றபோது சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி மரியாதை செய்த வீடியோவையும், இப்போதைய குஜராத் ஸ்டேடிய ஜெய்ஶ்ரீராம் சம்பவத்தின் வீடியோவையும்’ இணைத்து, ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை

இந்த நிலையில், #Sorry_Pakistan என்ற ஹேஷ்டேகுக்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் #JaiShreeRam என்ற கோஷத்தை மத அடிப்படைவாதிகள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். அதேநேரம் இந்த சம்பவம் குறித்து பேசியிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும் என்றால், தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும். அவர் (உதயநிதி ஸ்டாலின்) சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று கிளம்பினார். சென்னை போல, இந்தியாவின் பல இடங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு நாம் மரியாதையும் வரவேற்பும் கொடுத்திருக்கிறோம். தற்போது ஒரு பாகிஸ்தான் வீரர் நடந்து செல்லும்போது `ஜெய் ஶ்ரீராம் என கோஷம் போட்டிருக்கின்றனர். அதை பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக நான் பார்க்கவில்லை. அவர்கள் ஒரு கோஷம் போடுகின்றனர் அவ்வளவுதான். பாகிஸ்தான் வீரர்கள் இந்திய விமானநிலையத்தில் வந்து இறங்கியதிருந்தே மிகப் பெரிய வரவேற்பை கொடுத்துவருகிறோம். சில நேரங்களில் `எமோஷன்ஸ்’ வெளிப்படலாம்! அதேசமயம் `விளையாட்டை விளையாட்டாகப் பாருங்கள்’ என உதயநிதி ஸ்டாலின் சொல்வதற்கு அருகதையில்லை!” எனத் தெரிவித்திருக்கிறார்.

நஜம் சேத்தி

முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நஜம் சேத்தி, “இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என நாங்கள் கருதும் ஒரே நகரம் அகமதாபாத்தான். அங்குதான் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் போட்டி நடைபெற இருப்பதாக செய்தி வெளியானதும், `இந்தியாவுக்கு வந்துவிடாதீர்கள்’ என இதற்குமேல் மறைமுகமாக சொல்லமுடியாது என எங்களுக்குத் தோன்றியது! சென்னை அல்லது கொல்கத்தாவில் போட்டி நடைபெற்றால் நியாயமாக இருக்கும்!” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk



Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *