‘இப்போதுதான் நான் நீதியை உணர்கிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாகப் புன்னகைக்கிறேன். என் மார்பின் மீது அழுத்தியிருந்த மலை நீங்கியது போல ஆசுவாசமாக மூச்சுவிட முடிகிறது’ – பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வழக்கில், கடந்த ஜனவரி 8-ம் தேதி உச்ச நீதிமன்றம், 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தபோது அவர் கூறிய வார்த்தைகள் இவை. இந்தியாவின் மகள் பில்கிஸ் பானோ அப்படி சொன்னபோது, உங்களுக்கு என்ன தோன்றியது?

2002-ம் ஆண்டு குஜராத், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பின், நாகரிகமான மனித குலம் வெட்கி உடைந்து போகும் அளவிற்கு, மதம் பிடித்த மனிதர்களால், கருவை சுமந்த நிலையில் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட ஒரு பெண், தன் தாய் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலையுற்றதை பார்த்த ஒரு பெண், தனது மூன்று வயது மகள் கொலை செய்யப்படுவதை பார்த்த ஒரு பெண், சமீபத்தில் குழந்தை பெற்ற தன் சகோதரி கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலையுற்றதை பார்த்த ஒரு பெண், தன் சகோதரியின், பிறந்து இரண்டு தினங்களே ஆன குழந்தை கொல்லப்படுவதை பார்த்த ஒரு பெண், சிறார்களான தன் இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உட்பட தனது குடும்பத்தை சார்ந்த 14 நபர்கள் கொலை செய்யப்பட்ட இழப்பை சந்தித்த, நம் இந்திய தேசத்தில் நம்மோடு சக மனிதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்… பில்கிஸ் பானோ!
அவரது மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட போது, உங்களுக்கு என்ன தோன்றியது? அவர் அடைந்த கொடிய துன்பத்திற்கு நியாயம் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியா? அவரது நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்ற பெருமையா? ஒரு சாமான்ய மனிதராக உங்களுக்கு என்ன உணர்வு தோன்றியது?
இந்தியாவில் மனித உரிமைக்காக மகத்தான சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் ஒரு வழக்கில், ’அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் அதன் கீழ் தஞ்சம் அடைய வேண்டும்?’ என்று கேட்ட நீதிபதியிடம், ‘இவ்வாறான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வரும்போது, விசாரணைக்கு வருவது அவர்களது மதிப்பினைகள் அல்ல, நீங்கள் வைத்திருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகளும், அரசின் மதிப்புகளும்தான் சோதனைக்கு உள்ளாகின்றன’ என்றார்.

பில்கிஸ் பானோ வழக்கும் அதுபோன்ற ஒரு வழக்குதான். 28.02.2002 நடந்த குற்றங்களுக்கு 04.03.2002 அன்று அறியப்படாத குற்றவாளிகள் மேல் முதல் தகவல் அறிக்கை பதியப்படுகிறது. குற்றவாளிகளை கண்டு பிடிக்க இயலவில்லை என்று விசாரணையை முடிப்பதாக வழக்கின் விசாரணை அதிகாரி கொடுக்கும் அறிக்கை, நீதித்துறை நடுவரால் 25.03.2003 அன்று ஏற்கப்படுகிறது.
இவ்வறிக்கையை எதிர்த்து பில்கிஸ் பானோ முறையிட்ட உச்ச நீதிமன்ற வழக்கில், இவ்வழக்கு மீண்டும் விசாரிக்க பட வேண்டுமென்று கூறி, விசாரணை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 19.04.2004 அன்று ஆறு போலீஸ் அதிகாரிகள், இரண்டு மருத்துவர்கள் உட்பட 20 பேர் மேல் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. அதீத அழுத்தம் மற்றும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வழக்கு விசாரணை அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டு, 21.01.2008 அன்று இவ்வழக்கில் 11 நபர்கள், மற்றும் வேண்டுமென்றே தவறாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த ஒரு போலீஸ்காரர் குற்றவாளிகள் என்றும், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை என்றும் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது.

இவ்வழக்கின் மேல் முறையீடு பம்பாய் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மிருதுளா பட்கர் மற்றும் வி.க.தஹில்ரமணி முன்பு வரும்போது, குற்றம் சாட்டபட்ட 11 பேரின் தண்டனையை உறுதி செய்ததோடு, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மேலும் ஐந்து போலீஸ் அதிகாரிகள், மற்றும் இரண்டு மருத்துவர்களும் குற்றவாளிகள்தான் என்றும், இவ்வழக்கில் குஜராத் போலீஸ் முதலில் இருந்தே குற்றவாளிகளை தப்பிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எவ்வாறு விசாரணையை திரித்து, திசை திருப்பி, ஒரு வில்லனைபோல் செயல்பட்டது என்ற குறிப்புடனும், 04.05.2017 அன்று குற்றவாளிகளின் தண்டனைகளை உறுதிசெய்த பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதிகள், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 10.07.2017, மற்றும் 20.11.2017 அன்றைய தீர்ப்பின் படி உச்ச நீதிமன்றமும் இவற்றை உறுதி செய்தது.
பில்கிஸ் பானோ தனது நீதிக்கான வழக்கின் தீர்ப்பிற்காக காத்திருந்தது ஐந்து ஆண்டுகள், நான்கு மாதங்கள். அத்தீர்ப்பு உறுதிசெய்யப்படுவதற்காக காலத்தையும் கணக்கில் இட்டால் 15 ஆண்டுகள், ஒன்பது மாதங்கள். இவ்வாறான ஒரு கொடூரமான வழக்கில்தான் குஜராத் அரசு, சிறையில் இருந்த அனைத்து குற்றவாளிகளின் தண்டனைகளையும் நீக்கி, 10.08.2022 அன்று உத்தரவு பிறப்பித்தது.

குற்றவாளிகளில் ஒருவர், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவின் கீழ் தண்டனைக் குறைப்பு வழங்க, குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார். அந்த மனுவில் குஜராத் அரசு முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. தண்டனை குறைப்பு கொள்கையின் கீழ் ஆகஸ்ட் 15 அன்று குஜராத் அரசு, குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்தது. அதற்கு நாடெங்கிலும் இருந்து எதிர்ப்பு எழுந்தது.
தேசத்தின் சுதந்திர தின கொண்டாட்டமான 2022 ஆகஸ்ட் 15-ல் குற்றவாளிகள் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, அவர்களின் குடும்பத்தினராலும், விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்பினராலும் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டனர்.

01.08.2019 அன்று, மனு செய்த ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா என்ற ஒரு குற்றவாளி உட்பட தங்களது தண்டனை காலத்தை நீக்க வேண்டும் என்று பிப்ரவரி, 2021 அன்று மீண்டும் மனு செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை கிடைத்தது… 10.08.2022 அன்று. ஏறக்குறைய வெறும் ஒன்றரை ஆண்டுக்குள். அனைத்து குற்றவாளிகளின் கோப்புகளிலும், குற்றவாளிகளின் தண்டனையை நீக்குதல் முடிவில் மிக முக்கியப் பங்காற்றிய, மும்பையில் வழக்கு விசாரணை செய்த சி.பி.ஐயும், வழக்கில் தீர்ப்புரைத்த சிறப்பு நீதிபதியும், அனைத்து குற்றவாளிகளின் மனுக்களிலும் தண்டனை கால குறைப்பு வேண்டாம் என்று தொடர்ந்து எதிர்மறை கருத்து தெரிவித்திருந்தும், குற்றவாளிகளால் விடுதலை பெற முடிந்தது.
பில்கிஸ் பானோ இந்தியாவின் மகள் அல்லவா..?! அதீத மனபலம் இருந்தால் மட்டும்தானே உயிர் வாழவே முடியும்! மீண்டும் ஒரு சட்டப் போராட்டத்தை அவர் கையில் எடுத்துதான், தற்போது நீதியை உணரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்து உள்ளது.

இத்தீர்ப்பு, சட்டத்தின் பார்வையில் மிக முக்கியமான தீர்ப்பு.
பல்வேறு காரணங்களுக்காக வேறு மாநிலத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் பட்சத்தில், தண்டனை பெற்ற குற்றவாளிகளின் விடுதலையில் முடிவெடுக்க வேண்டிய சரியான அதிகாரம் பெற்ற அரசாங்கம் எது? இவ்வாறான குற்றவாளிகளின் விடுதலையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் வழக்கு நடைபெற்று தீர்ப்பளித்த நீதிமன்ற நடுவரின் கருத்து, வழக்கிற்குத் தொடர்புடைய விஷயங்களை மறைத்து, திரித்து பெறப்பட்ட முந்தைய நீதிமன்ற தீர்ப்பை செயலிழக்கச் செய்வது…
மேலும் இவ்வாறான வழக்கில் அரசின் அதிகாரம் தன்னிச்சையாக செயல்படுத்த கூடாததாக இருக்க வேண்டும் என்றும், அறிவாற்றல், தீய எண்ணம், சட்ட வழிமுறைகளுக்கு பொருத்தமற்ற உத்தரவு தடை செய்யப்பட வேண்டியது என்றும், குஜராத் அரசு குற்றவாளிகளுடன் கூட்டாக இணைந்து அவர்களுக்கு உடந்தையாக இருந்து, வரம்பை மீறி அதிகார அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் அனைவரும் தண்டனையின் அபராதத் தொகையைக் கூட கட்டாதவர்கள் என்ற உண்மையைகூட சிறை ஆலோசனைக் குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும்…
சட்டத்தின் ஆட்சி நிலவும்போது மட்டுமே அரசியலமைப்பின்படி உள்ள உரிமைகள் நிலைநிற்கும் என்றும், நீதிமன்றங்கள் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த தவறினால் நமது ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அரசியலில் ஓர் ஆபத்தான நிலையை உருவாக்கும் என்று கூறியும்… பில்கிஸ் பனோ வழக்குக் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலை உத்தரவை ரத்து செய்தனர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பெ.வெ. நாகரத்தினா மற்றும் உஜ்ஜல் புயன் அமர்வு.
இவ்வழக்கின் வெற்றிக்குப் பின் பில்கிஸ் பானோவோடு தொடர்ந்து 20 ஆண்டுகள் பயணித்த அவரின் வழக்கறிஞர் ஷோபா குப்தா கூறும்போது, தனது சட்டப் போராட்டத்திற்கு சக்தி அளித்தது பில்கிஸ் பானோவின் அசாத்திய நம்பிக்கைதான் என்கிறார். தீர்ப்பிற்குப் பின் பில்கிஸ் பானோ அளித்த அறிக்கையில், ஆகஸ்ட் 15, 2022-ல் தனது குடும்பத்தை அழித்த குற்றவாளிகள் முன்னதாகவே விடுதலை ஆனபோது, தான் உடைந்து போய்விட்டதாகவும், தனது தைரியத்தின் ஊற்று முழுவதும் வற்றிவிட்டதாக உணர்ந்ததாகவும், ஆனால் லட்சக்கணக்கான மனிதர்கள் தனக்கு ஆதரவு தெரிவித்ததாலும், ஆயிரக்கணக்கில் சாமான்ய மனிதர்களும், பெண்களும் தனக்காக முன் நின்றதாலும், தனக்காகப் பேசியதாலும், உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்ததாலும், பத்தாயிரம் நபர்கள் திறந்த கடிதம் எழுதியதாலும், நாற்பதாயிரம் பேர் தனக்காக கோரிக்கை வைத்ததாலும் தன்னால் மீண்டு எழ முடிந்ததாக நன்றி கூறினார்.

பில்கிஸ் பானோவுக்கு உடன் நின்று உச்ச நீதிமன்றம் கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்கியபோது, ஒரு சாமான்ய மனிதியாக நான், நீதியின் பக்கம் நின்ற, பில்கிஸ் பானோவிற்காக தெருக்களில் பல போராட்டங்கள் நடத்திய மனிதர்களையும், பெண்கள் அமைப்பினரையும், பெண்கள் சமமாக அதிகார பகிர்வில் அமரும்போது அது எவ்வாறு தேசத்தின் நீதியையும், நிலைத்தன்மையும் காக்கிறது என்பதையும் வெகுவாக உணர்ந்தேன்.
ஒரு சாமான்ய மனிதராக உங்களுக்கு என்ன உணர்வு தோன்றியது?!
– வழக்கறிஞர் ஜோதிலெஷ்மி
நன்றி
Publisher: www.vikatan.com
