ஒருநாள் உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி குஜராத்தின் அகமதாபாத்திலிருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து, வெற்றிபெற்றது. இந்திய அணி இந்தப் போட்டியில் தோல்வியுற்றது, இந்திய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி சில நேரங்களில் டி.வி-யில் இந்து முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசுவார். சில நேரங்களில் கிரிக்கெட் பார்க்கச் செல்வார். இந்திய அணி இந்தப் போட்டியில் உலகக் கோப்பையை வென்றிருக்க வேண்டும். ஆனால் பி.எம் மோடி சென்றதால், வெற்றிபெற முடியவில்லை. பி.எம் என்றால் பனாட்டி – அபசகுனம் எனப் பொருள்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பா.ஜ.க தலைவர்கள், “இந்தியாவின் பிரதிநிதியான பிரதமர் மோடியை `அபசகுனம்’ என எப்படிக் கூறலாம்… அதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “2023-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி லக்னோவில் நடந்திருந்தால், இந்தியா அணிக்குப் பலரின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கும்…

போட்டி லக்னோவில் நடந்திருந்தால், இந்திய அணி விஷ்ணு, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் ஆசீர்வாதங்களைப் பெற்றிருந்தால், வெற்றி பெற்றிருக்கும். மேலும், இந்தியா அணி விளையாடிய மோடி ஸ்டேடியத்தில் சில சிக்கல்கள் இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. அதனால்தான் வெற்றி கை நழுவியது” எனத் தெரிவித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
