கர்நாடகாவில் இந்தாண்டு மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க என இரண்டு கட்சிகளையும் எதிர்த்து தனித்துக் களமிறங்கி தோல்வியடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், 2024 லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைத் தோற்கடிக்க பா.ஜ.க-வுடன் தற்போது கைகோத்திருக்கிறது. “ `மதச்சார்பற்ற ஜனதா தளம்’ என்று பெயரை வைத்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்வதா..?” என்றெல்லாம் காங்கிரஸ் இதை விமர்சித்து வந்தது.

அதன் தொடர்ச்சியாக, தீபாவளியன்று மின்கம்பத்திலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக, முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமியை `மின்சாரத் திருடன்’ என்று காங்கிரஸ் சாடியது. அதன் பிறகு, சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தியதற்காக ரூ.68,526 அபராதம் செலுத்திய குமாரசாமி, “இனி காங்கிரஸ் என்னை மின்சாரத் திருடன் என்று அழைக்கக் கூடாது” என்று கூறியிருந்தார்.
இருப்பினும், குமாரசாமியும், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரும் தொடர்ச்சியாக தங்களுக்குள்ளே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துச் சாடிவருகின்றனர். இப்படியான சூழலில்தான் குமாரசாமி, “சிவக்குமாரிடம் என்ன கண்ணியம் இருக்கிறது. போஸ்டர் ஒட்டுவதுதான் அவருடைய கண்ணியம்.

தொட்டலஹள்ளி, சாத்தனூரில் திரைக் கூடாரங்களில் இவர் ஆபாச படங்களைத் திரையிட்டுக் கொண்டிருந்தார். இதுவே, அவர் எங்கிருந்து வருகிறார் என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் இப்போதும் அவர் போஸ்டர் ஒட்டுகிறார்” என்று சிவக்குமாரை விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ஆபாசப் படங்களைத் திரையிட்டதாகக் கூறும் குற்றச்சாட்டைக் குமாரசாமி நிரூபித்துவிட்டால், தான் அரசியலிலிருந்தே விலகத் தயாராக இருப்பதாக சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், “மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி இவ்வாறு பேசுவது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். அவர் இப்படிப் பேசுவது வெட்கக்கேடானது. ஆபாச படங்களைத் திரையிடுவதற்காகத்தான் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சிவக்குமாரைத் தேர்ந்தெடுத்தீர்களா என்று என்னுடைய தொகுதிக்குச் சென்று, மக்களிடம் அவர் கேட்கட்டும். இது போன்ற சட்ட விரோதச் செயல்களில் நான் ஈடுபட்டதாக அவர் நிரூபித்தால் அல்லது வேறு யாராவது நிரூபித்தால், அரசியலிலிருந்து விலகத் தயார்” என்று கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com
