கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப காலமாக சூடு பிடித்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த வழக்கினை, மீண்டும் பரபரப்பாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் பேட்டி அளித்து வருகிறார்.
இந்த நிலையில் தான், “கொடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி முக்கிய குற்றவாளிகளான எடப்பாடி பழனிசாமியையும், அவரின் ஆதரவாளரான ஆத்தூர் இளங்கோவனையும் விசாரிக்காமல் இருந்து வருகிறது. இதனால் சிபிசிஐடி விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை சிபிசிஐடி அழைத்து விசாரித்தால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பல தகவல்களை வழங்க தயாராக இருக்கிறேன்” என்று கூறி வந்தார். இந்நிலையில்தான் கடந்த 06.09.2023 அன்று கோவை சிபிசிஐடி கனகராஜின் அண்ணன் தனபாலுக்கு வருகின்ற 14.09.2023 அன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் தான் தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வி சேலம் மாவட்ட எஸ்.பி இடம் புகார் ஒன்று அளித்துள்ளார். புகார் அளித்துவிட்டு வெளியே வந்த அவர் ஜூனியர் விகடனுக்கு ஒரு பிரத்தியோக பேட்டி கொடுத்தார். அதில், “தனது கணவரால் எனது உயிருக்கும், பிள்ளைகள் உயிருக்கும் பாதிப்பு உள்ளது. இவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததிலிருந்து பலரின் தூண்டுதலின் பேரில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதனால் அவருக்கு லாபமாக இருந்தாலும் கூட இதனால் பல பிரச்னைகள் மீண்டும் எங்களை வந்து சேரும். ஆகையால் அவரை கொடநாடு தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என்று கூறி இருந்தேன். ஆனால் தேவையில்லாத பொய்களை கூட்டியும் குறைத்தும் பேசி வருகிறார். இவர் சிறையில் இருந்த போது ஓபிஎஸ் தரப்பில் இருந்து குருமூர்த்தி என்பவர் நேரில் சந்திக்க வந்திருந்தார். அவர், அண்ணனிடம் எல்லாம் பேசி விட்டேன் உங்களுக்கு எல்லா உதவியும் செய்து கொடுக்க கூறியுள்ளார்” என்று மேலும் கொளுத்திப் போட்டார்.
மேலும் `அவர் ஒரு மன நோயாளி. அவர் சொல்வதெல்லாம் பொய் மட்டுமே அதில் உண்மை கொஞ்சம் கூட இல்லை’ என்று போட்டு உடைத்தார்.
தனது மனைவி புகார் கொடுத்தது தெரியவந்த உடனே தனபால் மீண்டும் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அதன் பின்னர் ஜூனியர் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “எனது மனைவியை எடப்பாடி பழனிசாமி பின்னிருந்து இயக்கி வருகிறார். இதற்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். எடப்பாடி பழனிசாமிக்கு பயம் வந்துவிட்டது. எங்கடா சிபிசிஐடியில் எல்லா உண்மைகளையும் சொல்லிவிடுவானோ என்று பயத்தில் என்னை எப்படி ஆஃப் செய்வது என்று தெரியாமல், தற்போது எனது மனைவியை தூண்டிவிட்டு இதுபோலெல்லாம் பேச வைத்து வருகிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேரடியாக தொடர்புடைய 45 பேரின் லிஸ்ட் எனது கையில் உள்ளது. இதை தான் சிபிசிஐடியில் ஒப்படைக்க போகிறேன்.

இதில் என் தம்பி கனகராஜின் இறப்புக்கு காரணமாக இருந்த எனது உறவினர்களின் பெயர்களும் உள்ளது” என்றார்.
இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான இளங்கோவன் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அந்த மனுவில், `கடந்த சில நாள்களுக்கு முன்பு கொடநாடு கொலை மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கனகராஜன் அண்ணன் தனபால் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவர் ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டவர் என நீதிமன்றமும் பதிவு செய்துள்ளது. அதேபோல அரசு மருத்துவர்களும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் அவர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவது ஏற்றுக்கொள்ள முடியாது, கண்டிக்கத்தக்கது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் இளங்கோவனிடம் கொடுக்கப்பட்டதாக கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கனகராஜின் அண்ணன் தனபால் கலந்த சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார். தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவரும் தனபாலை திமுகவும் ஓபிஎஸ் அணியும் பின்புறம் இருந்து இயக்குகிறது. ஏற்கனவே அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் தான் என அவரின் மனைவி கூறியுள்ளதோடு, தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.” என்றார்.
மேலும், கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், இது குறித்து தான் மேலும் பேச முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com
