அதைத் தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், “மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த சி.பி.ஐ, தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை என்ற காவல்துறை அதிகாரியை மட்டும் வழக்கில் சேர்த்திருக்கிறது. ஆனால், துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு, அதனடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை!” எனக் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான பணிகளை சட்டத்துறை செய்து வருகிறது!” எனத் தெரிவித்திருக்கிறார்.
“கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சம்பவத்தில், தி.மு.க அரசே அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி, தவறுசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசுக்கு என்ன தயக்கம்?” என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
