தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானைத்தைக் கொண்டு வந்தார், எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா. அப்போது பேசிய அவர், “20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனைப் பெற்றிருக்கக்கூடிய இஸ்லாமிய சிறைவாசிகளை 161வது விதியின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் நீண்டகால சிறைவாசிகள் விடுதலை கோரி அல்லது விடுப்புக் கோரி மனுதாக்கல் செய்யும்போது, தமிழக அரசின் குற்றவியல் வழக்கறிஞர்கள், “49 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு, தமிழக முதல்வர் பரிந்துரை செய்து ஆளுநருக்கு அனுப்பிவிட்டார். ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை” என்ற வாதத்தை வைத்துள்ளனர்.

எனவே, இந்த விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் மொத்தம் 35 இஸ்லாமிய ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு தமிழக முதல்வர் விதி எண் 161-ன் கீழ் பரிந்துரை செய்தார்?, அனைவரும் விடுதலை செய்யப்பட்டால், மகிழ்ச்சி, இல்லாதபட்சத்தில் எஞ்சியவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். ஆளுநரிடம் இந்த கோப்புகள் சென்றிருக்கிறது. அவர் எப்போது கையெழுத்திடுவார் என்பது யாருக்கும் தெரியாத புதிர். காரணம், இதே சட்டப்பேரவையில் இயற்றப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகள் இன்னும் ஆளுநர் மாளிகையில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே, ஆளுநர் ஒப்புதல் தருவதற்கு முன்பாக, தமிழக முதல்வர் இந்த 35 சிறைவாசிகளுக்கும் நீண்டநாள் விடுப்பு பரோல் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனையும், 20 பேர் பல்வேறு சமூக குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்று 36 இஸ்லாமியர்கள் சிறையில் உள்ளனர். 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இவர்கள் முன்விடுதலையாவது திமுக ஆட்சியில் 15.11.2021 அன்று போடப்பட்ட அரசாணையால் தடைபட்டது என்று இஸ்லாமிய அமைப்புகள் தங்களது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

எங்களிடம் இவர்கள் கோரிக்கை வைத்தபோது, இவர்களில் சிலர் உடல்நலக்குறைவால் சிறையிலேயே உயிரிழந்துள்ளனர். தற்போது ஆயுள் தண்டனைப் பெற்று சிறையில் இருக்கும் 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். வயதுமூப்பு, உடல்நலக்குறைவு, மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில், விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழக சிறைவாசிகளில் பத்து ஆண்டுகள் மற்றும் இருபது ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் இருக்கக்கூடிய உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் ஆகியோரின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு ஆராய வேண்டுமென்பதற்காகத்தான், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையின்கீழ் 6 பேர் அடங்கிய ஒரு குழு 22.12.2021-ல் இந்த அரசால் அமைக்கப்பட்டது.
இந்தக் குழு தன்னுடைய அறிக்கையினை 28.10.2022 அன்று அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையில் 264 ஆயுள்தண்டனை சிறைவாசிகள் மட்டுமே குழுவால் முன்விடுதலைக்கு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளினை முன்னிட்டு, “ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்விடுதலை செய்வதற்கு பரிசீலனை செய்யும் பொருட்டு” 11-8-2023 அன்று முதற்கட்டமாக தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, தொடர்புடைய கோப்புகள் 24.8.2023 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவார்கள். ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன், அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்துக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மீதமுள்ள ஆயுள் தண்டனை சிறைக்கைதிகள் விடுதலை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பாக அரசின் சார்பாக மேலும் சில கருத்துக்களை இந்த அவையில் நான் முன்வைக்க விரும்புகிறேன். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மறைந்த முதல்வர் கருணாநிதி ஆகியோரது வழியில் என்றென்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசின் சார்பில், நான் 13.9.2021-ல் அறிவித்தவாறு, அண்ணாவினுடைய 113-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறையில் நீண்ட கால சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைத்து நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் முன் விடுதலை செய்ய உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதேபோல், அறிவுரைக் கழக (Advisory Board) திட்டத்தின்கீழ் 14 ஆயுள் தண்டனை சிறைவாசிகளும், மருத்துவக் காரணங்கள் மற்றும் நீதிமன்ற ஆணைகளின்படி 15 ஆயுள்தண்டனை சிறைவாசிகளும் ஏற்கெனவே முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், 566 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் பரிசீலனை செய்யப்பட்டு, 8.10.2023 வரை 335 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவார்கள். “இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை; அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை” என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் சட்டரீதியான முறைப்படி தமிழக அரசு உரிய வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த அவைக்கு நான் தங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கே எதிர்க்கட்சித் தலைவர் மிகுந்த அக்கறையோடு இந்தப் பிரச்னை குறித்து எடுத்துப் பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை பற்றி அதிமுக பேசுவதால், நான் அவர்களைப் பார்த்து ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.
நீங்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்? அதை நான் இப்போது அறிய விரும்புகிறேன். தருமபுரியில் பேருந்தில் பயணித்த மாணவிகளை உயிரோடு பட்டப்பகலில் எரித்தவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்விடுதலை செய்த உங்களுடைய ஆட்சியில், ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் ஆணவத்தோடு அல்ல; அடக்கத்தோடு நான் கேட்க விரும்புகிற கேள்வி. ஆட்சியில் இருந்த போது இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை பற்றி துளியும் நடவடிக்கை எடுக்காமல், அதுமட்டுமல்ல; குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எல்லாவற்றையும் கண்மூடி ஆதரித்த அதிமுக, இப்போது இஸ்லாமிய சிறைவாசிகள் மீது காட்டக்கூடிய திடீர் பாசம் ஏன் என்று இங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும்; எங்களுக்கும் தெரியும். அதைவிட சிறுபான்மை சகோதர, சகோதரிகளுக்கு மிக நன்றாகவே தெரியும்” என்றார்.

இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க, சபாநாயகர் வாய்ப்பு தரவில்லை எனக்கூறி அதிமுக-வினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதல்வரின் கேள்விக்கு நான் பதிலளிக்க முற்பட்டேன். ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதைக் கண்டித்து நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம். முதல்வர், இஸ்லாமியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று கூறுகிறார். பாதுகாப்பாக இருப்பதை குறைகூறவில்லை. ஆனால், எங்கள் மீது ஏன் முதல்வர் எரிச்சல்படுகிறார்? கோபம் கொள்கிறார்? இஸ்லாமியர்கள் எங்களைச் சந்தித்து, 36 இஸ்லாமிய சிறைவாசிகள் பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில்தான் நாங்கள் பேசினோம்” என்றார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “இது எடப்பாடியின் சந்தர்ப்ப வாதம். சிஏஏவை ஆதரிக்கும் பொழுது சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார். இன்று கூட்டணியில் இருந்ததால் ஆதரித்தோம் என்கிறார். அன்று ஆட்சி நடத்துவதற்கு பாஜகவின் உதவி தேவையாக இருந்தது. அதனால் அவர்கள் கொண்டுவந்த அனைத்தையும் ஆதரித்தீர்கள். அப்போது உடன்பாடு இல்லை என்று தெரிவித்திருக்கலாம். வெளிநடப்பு செய்திருக்கலாம். இன்று பாஜகவில் இருந்து வெளியில் வந்துவிட்டதால் சிறுபான்மையினர் எப்படி உங்களை நம்புவார்கள். சிறைவாசி விடுதலைக்கு ஒரு துரும்புவது எடுத்து போட்டிருக்கிறீர்களா?. திமுக எடுத்த நடவடிக்கைகளை சட்ட பேரவையில் தெளிவாக தெரிவித்திருக்கிறது. மீதம் உள்ளவர்களை விடுதலை செய்வதற்கான கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே அவரை சந்தித்து எடப்பாடி கோரிக்கை வைக்க வேண்டும். முன்னதாக பலமுறை ஆளுநரை சந்தித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் இதுகுறித்து எதுவும் பேசவில்லை” என கொதித்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, “அதிமுக ஆட்சியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சமூக வழக்கு தொடர்புடைய திண்டுக்கல் மீரான் என்ற கைதியை விடுதலை செய்தார்கள். அப்போது இதே கோரிக்கையை திமுகவும் வலியுறுத்தியது. அவர்களின் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வோம்’ என்றார். இந்த இரண்டரை வருட திமுக ஆட்சியில் அவர்கள் யாரையும் விடுதலை செய்யவில்லை. இதற்கு 15.11.2021-ல் திமுக அரசு வெளியிட்ட அரசாணையில், ‘மதக்கலவர வழக்குகள், வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை முன்விடுதலை இல்லை’ என தெரிவித்திருக்கிறது. அந்த திருத்தத்தால்தான் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை ஆகமுடியவில்லை. எனவே அந்த அரசாணையை திருத்த வேண்டும்.
திமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகள் இவர்களுக்கும் தேவை. அந்த அடிப்படையில் 161-வது சட்ட பிரிவை பயன்படுத்தி திமுக அமைச்சரவையில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்காக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றினால் கவர்னருக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அவர் அதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார் என்பது நமக்கு தெரியும். ஆனால் அந்த தீர்மானத்தை பயன்படுத்தி சம்மந்தப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி விடுதலை பெற முடியும். பேரறிவாளன் விஷயத்தில் இதுதான் நடந்தது. இந்த சிக்கல் தீரும் வரையில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களுக்கு நீண்டகால சிறைவிடுப்பு வழங்க வேண்டும்” என்றார் சூடாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
