திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாயக்கனேரி மலைக் கிராம ஊராட்சியில், பழங்குடிப் (எஸ்.டி) பிரிவினர் பெரும்பான்மை வாக்காளர்களாக இருக்கின்றனர். கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியல் (எஸ்.சி) சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், பழங்குடிப் பிரிவினர் கொதிப்படைந்து, போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். ஆனாலும், கடும் எதிர்ப்பை மீறி, நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்துமதி (ஆதி திராவிடர்) என்ற ஒரேயொரு இளம்பெண் மட்டும், வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்துமதியைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனால், கோபமடைந்த பழங்குடியினச் சமூக மக்கள் கிராமப் பஞ்சாயத்தைக் கூட்டி, இந்துமதியையும், அவர் குடும்பத்தையும், இவர்களுக்கு ஆதரவாக இருந்த எட்டுக் குடும்பங்களையும் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்க முடிவுசெய்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்தபோதும், இந்துமதியை ஊராட்சி மன்றத் தலைவராக ஏற்காமல், மிரட்டல் விடுத்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ‘இந்துமதியை திடீரென காணவில்லை’ என்று ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில் அவரின் கணவர் பாண்டியன் நேற்று புகாரளித்தார். அவரின் மனுவில், ‘‘கடந்த 9-ம் தேதி மாலை 5 மணியளவில் என் மனைவி இந்துமதி, பால் வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. முன்னாள் தலைவர் சிவகுமார், நாராயணன், நாகராஜ், பூபதி, பாபு, செல்வராஜ் ஆகிய ஆறு பேர் மீதுதான் சந்தேகம் இருக்கிறது. அவர்கள்தான் எங்களை எதிர்த்துச் செயல்பட்டவர்கள். எனவே, காணாமல்போன என் மனைவி இந்துமதியைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம், நேற்றைய தினம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகி, பெரும் பேசுப்பொருளானது. இந்த நிலையில், மாயமானதாகச் சொல்லப்பட்ட இந்துமதி, நேற்று இரவு தாமாகவே ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்துக்கு வந்து ஆஜரானார். ‘‘மன உளைச்சலில் இருந்ததால், வீட்டில் இருந்து வெளியேறியதாகவும், தன்னை யாரும் கடத்தவில்லை’’ எனவும் போலீஸாரிடம் அவர் எழுதி கொடுத்துவிட்டு, கணவர் பாண்டியனுடன் வீடு திரும்பினார்.
நன்றி
Publisher: www.vikatan.com
