சேலம் புத்தகத் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநருக்குச் சட்டம் தெரிகிறதா… அவர் சட்டம் தெரிந்தவர்களைக் கேட்டுத்தான் பதில் சொல்கிறாரா என்று தெரியவில்லை. அவர் இப்படி நடந்துகொள்வதால், சந்தி சிரிக்கிறது. உச்ச நீதிமன்றம், `சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு அனுமதி தருவதற்கு என்ன கஷ்டம்?’ எனக் கேட்கிறாது. அதற்கு ஆளுநர் தரப்பில், `சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க வேண்டியிருக்கிறது’ எனக் கூறியிருக்கிறார்கள். நீதிமன்றம், `ஒரு வருடம் தேவைப்படுகிறதா?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது. பின்னர் ஆளுநர், 10 மசோதாக்களை திருப்பியனுப்பியிருக்கிறார். ஆனால், தமிழக அரசு மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, அவற்றை ஆளுநருக்கு அனுப்பிவைத்திருக்கிறது. சட்டத்தை இயற்றக்கூடிய சட்டமன்றங்கள் கொண்டுவரக்கூடிய மசோதாவுக்கு, இசைவு தர மாட்டேன் என்று சொன்னால், யார் சொல்வது சரி என நாம் கவனிக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்
ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும், ஒவ்வொரு தமிழருக்கும் சட்டம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். ஆளுநர் சொல்வது சரியா, முதல்வர் சொல்வது சரியா என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தலைமை நீதிபதி, `மறுமுறை சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் அதற்குக் கையெழுத்துப் போட வேண்டும்’ என்கிறார். தலைமை நீதிபதி சொன்னால்தான் இதைச் செய்ய வேண்டுமா… அவர்களுக்கென வக்கீல் இல்லையா… சட்டத்தைப் படித்துப் புரிந்து கொள்வதற்கான போதுமான தகுதி இல்லையா… ஞானம் இல்லையா என்று தெரியவில்லை. சட்டம் தெளிவாகத்தான் இருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்கள் அனைவரும் `சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க மாட்டோம்’ என முடிவை எடுத்திருக்கின்றனர். ஐந்து மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்கள் `சட்டவரைவுகளுக்கு இசைவு கொடுக்க மாட்டோம்’ எனக் கூறுவது சரியா… தவறா எனக் கேள்வி எழுந்திருக்கிறது. ஒருமுறை ஆளுநர் மறுத்தால், மறுக்கப்பட்ட சட்ட மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பினால், அதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.

சட்டம் தெளிவாக இருக்கிறது. மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்றால், பின்னே ஒரு சக்தி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு மட்டும் தகுதியே கிடையாது. அதற்கு என்ன தகுதி என்றால், 35 வயது இருந்தால்போதும், இந்தியக் குடிமகனாக இருந்தால்போதும். ஆனால், மற்ற எல்லா பதவிகளுக்கும் தகுதி இருக்கிறது. தகுதியே இல்லாமல் இருக்கக்கூடிய ஆளுநர் பதவியை ஏன் உருவாக்கினார்கள் என்பதனை யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாநிலத்தை ஆளுவது சட்டமன்றம், அமைச்சரவைதான். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், தொடர்ச்சியாக ஒரு மாநிலம் மட்டும் அல்ல… ஐந்து மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது.
மாநிலங்களுக்கு ஆளுநரை அனுப்புவது, உள்துறை அமைச்சரின் வேலை. அந்த ஆளுநர், குடியரசுத் தலைவர் விருப்பப்படிதான் பதவியில் இருக்க முடியும். மற்ற பதவிகளுக்குப் பதவிக்காலம் உள்ளது. ஆனால், ஆளுநர் பதவிக்குப் பதவிக்காலம் இல்லை. என்றைக்கு சீட்டைக் கிழிக்கிறார்களோ, அன்றைக்குப் போக வேண்டும். தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக… குறிப்பாகத் தென் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்குகின்றனர். சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, ராஜ் பவனில் பல்வேறு கூட்டங்கள் நடத்துவது எனத் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள்.
சட்டவிரோதமாகச் செயல்படும் இவர்களை, சட்டப்படி செயல்பட அறிவுறுத்த வேண்டும். ஆனால், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள், `இந்த அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் தொடர்வதற்கான வேலைகளைச் செய்யுங்கள்’ என்கிறார்கள். ஆளுநரின் அதிகார எல்லை என்ன என்பதைச் சொல்லக்கூடிய கடைமை, உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கவிருக்கிறது.

இதனால் முன்னதாகவே சில ஆளுநர்கள், அவசர அவசரமாக ஒப்புதல் கொடுக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அந்தக் கோப்புகளைத் தூங்கவிட்டுவிட்டு, இப்போது திடீரென இவர்களுக்கு எங்கிருந்து ஞானம் வந்தது… நாள்கள் செல்லச் செல்ல, மேலும் மேலும் ஆளுநரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மாநிலங்களில் நடைபெறக்கூடிய ஆட்சிக்குக் குந்தகம் விளைவிக்கப் பார்க்கிறார்கள். அதற்காக எடுத்திருக்கும் ஆயுதம்தான் பல்கலைக்கழகத்தின் வேந்தர் யார் என்பது. ஜனநாயக நாட்டில் வேந்தர் என்பதற்கு அர்த்தமே கிடையாது. 1923-ம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டது வேந்தர் பதவி. மாநிலப் பல்கலைக்கழகத்தால் மூன்று விதமான அதிகாரங்கள் மட்டும் கொண்டுவரப்பட்டன. ஆட்சிக் குழு, கல்விக் குழு… அதற்கு மேல் வேந்தர் எனக் கொண்டுவரப்பட்டது.
இங்கே மன்னர் கிடையாது, ராணி கிடையாது, ராஜா கிடையாது. ஏனென்றால் ராஜா, ராணியை 1968-ம் ஆண்டு அவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி, ஓய்வூதியம் கொடுத்துவிட்டோம். இப்போது இங்கு யாரும் ராஜா எனப் போட்டுக் கொள்ள முடியாது. ஆனால், பல்கலைக்கழகச் சட்டத்திலேயே `வேந்தர்’ என்ற பதவிக்கு, அன்றைக்கு சென்னை மாகாணத்தின் தலைவராக இருந்தவர் கவர்னர். அதனால்தான் அவருக்கு வேந்தர் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டது. பின்னர் குடியரசு சட்டம், அரசியலமைப்புச் சட்டங்கள் வந்த பிறகு, நம்முடைய பல்கலைக்கழகச் சட்டங்களையெல்லாம் மாற்றியபோது, அந்தப் பதவியை அப்படியே விட்டுவைத்தனர். பின்னர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்கள். ஆனால் இப்போது உள்ள ஆளுநர்கள், எல்லா விஷயங்களிலும் தலையிடுவோம் எனக் கூறுகிறார்கள். சமீபத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் விஷயத்தில், ஆளுநர் தலையிட்டதற்கு, நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

மறைந்த சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். சங்கரய்யா தற்போது நம்முடன் இல்லை. ஆனால், அவரை அவமானப்படுத்தியவர், இன்றைக்கும் ஆளுநராக இருந்து வருகிறார். நேற்றைய தினம் தமிழக முதல்வர் இசைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாறியிருக்கிறார். இதற்கு முன்பு முதலமைச்சர் ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இல்லை. பட்டப்பளிப்பு விழாவில் பேசிய முதல்வர், `இன்றைக்கு ஜனநாயக அமைப்பு இருக்க வேண்டும் என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரே தலைவராக இருக்க வேண்டும். அதற்கான ஆரம்பம்தான் இது’ எனக் கூறினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, மேலும் பல பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர்கள்தான் வரப் போகிறார்கள்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
