ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே குருவரெட்டியூரில் அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசுகையில், “கூட்டணியில் இருக்கவேண்டும் என பா.ஜ.க-வை எவ்வளவோ அனுசரித்துப் பார்த்தோம்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இறங்கிப் போனார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வயது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கைக்கு கூட ஈடாகாது. ஆனால், அவர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றி மிக மோசமாகப் பேசி வருகிறார். அவர்கள் மூவரும் தமிழ்நாட்டுக்கு எவ்வளவோ பல நல்ல காரியங்கள் செய்துள்ளனர்.

ஒரு அளவுக்குத் தான் அண்ணாமலையின் பேச்சைத் தாங்கிக் கொள்ள முடியும். முதலாளியாக இருந்தாலும் வேலைக்காரன் ஓரளவுக்குத்தான் தாங்கிக் கொள்வார். அதற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. 2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜ.க வுடன் கூட்டணியில் இருக்க வேண்டுமாம். அப்போது மோடி பிரதமராக வேண்டும் என்றும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என பா.ஜ.க-வினர் கோரிக்கை வைத்தனர். இதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா?

அவர்களுக்கு எத்தனை பூத்துகளில் ஆட்கள் உள்ளனர். ஒரு பூத்தில் ஐந்து பேர் பத்து பேர் உள்ள கட்சியின் தலைவரான அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என்று சொல்லி இரண்டரை கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியை நிர்பந்தம் செய்கிறார்கள். அதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதன் காரணமாக கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம். பா.ஜ.க. வேண்டாம் என்று சொன்னதால் அ.தி.மு.க-வுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.
முன்னாள் அமைச்சரின் இந்த கருத்து தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
