சென்னை வெள்ளம்:
டிசம்பர் முதல் வாரம் பெய்த கனமழை காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. அரசு இயந்திரம் முழுவதுமாக முடக்கிவிடப்பட்டிருந்தாலும் வெள்ள பாதிப்புகளில் சென்னை வாசிகள் சிக்கித் தவித்தனர். பெருமழை விட்ட பிறகும் தேங்கிய மழைநீர் வடிய மூன்று நாள்கள் ஆனது. குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மாநில பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்புக் குழு தொடங்கி மாநகராட்சி நிர்வாகம் முழுவதும் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தது. மத்திய அமைச்சர்கள் நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்றனர். முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் பலரும் களத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி கவர்னர் மாளிகையிலிருந்து வெளியேறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் அவர் மத்திய அரசிடம் பேசி கூடுதல் உதவிகளைக் கூட வாங்கித்தர முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
தென்மாவட்ட பெருமழை:
தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் 90 செ.மீ-க்கும் அதிகமான கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆறுகளிலிருந்து நீர் ஊருக்குள் புகுந்தது. பல கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. அந்த பகுதி மக்கள் முழுவதும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வெள்ளப் பாதிப்புகள் பெரிதாக இருக்கும் இந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தமிழக ஆளுநர் காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொள்வதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு மீட்புப்பணிகள் குறித்து மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை ராஜ் பவனில் கூட்டியிருந்தார்.
ஒருங்கிணைப்பு இல்லை:
இந்த கூட்டம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட அறிக்கையில், ” இந்திய ராணுவம், கடற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை (என்.டி.ஆர்.எஃப்), ரயில்வே, பிஎஸ்என்எல், இந்திய வானிலை மையம் (ஐஎம்டி), இந்திய விமான போக்குவரத்துத்துறை ஆணையம் (ஏஏஐ) மற்றும் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்பட்டபோதும் மாநில அரசின் எந்தவொரு பிரதிநிதியும் வரவில்லை. மழை பாதிப்பால் குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நிலைமை மோசமாக உள்ளது.

மத்திய அரசுத் துறையின் அமைப்புகள் மாநில அரசு அழைத்தவுடன் பணியாற்றும் வகையில் தயாராக வைத்துள்ளன. மேலும் மாநில அரசால் கோரப்படும்போது அவை பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகள், ‘போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஒட்டுமொத்த நிலைமையை போதிய வகையில் மதிப்பிடாதது போன்ற காரணங்களால் எத்தனை அமைப்புகள் சரியாகத் தேவை மற்றும் எங்கெல்லாம் படையினரை அனுப்ப முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவற்று உள்ளதாக’ கவலை தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
முதல்வர் நிவாரண பணிகளைச் செய்திருக்க வேண்டும்:
வெள்ளப்பாதிப்புகள் தொடர்பாக மாநில அரசு கட்டமைப்பு தொடங்கி பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் மாநில அரசுக்குப் போட்டியாக ஆளுநர் தனியாக ஒரு அரசு நடத்துவதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “ஆளுநர் என்ன பேசவேண்டும், எப்படி, யாரிடம் பேசவேண்டும் என்பதற்கு எதுவும் சட்ட விதிகள் இருக்கிறதா என்ன… தமிழ்நாடு அரசின் தலைவராக இருக்கும் ஆளுநர் மாநிலத்தின் நன்மைக்காக யாரிடமும் ஆலோசனை செய்யலாம். சட்டவிதிமுறைகளுக்கு முரணாக அவர் நடக்கின்றாரா என்பதே கேள்வி… ஆளுநர் இப்படித்தான் நடக்கவேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.
அதேபோல முதல்வரின் பயணம் முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று. இன்று டெல்லி சென்றவுடன் நான் பிரதமரைத்தான் பார்க்க வந்திருக்கிறேன் என்று சொல்வது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. முதல்வர் பிரதமரைச் சந்திப்பதில் தவறேதும் இல்லை. நேற்று இரவோ, இன்று காலையோ நேரம் கேட்டுச் சந்தித்து தமிழகம் திரும்பியிருக்கலாம். கூட்டணிக் கட்சி நிகழ்ச்சி முக்கியமா அல்லது மக்கள் நலன் முக்கியமா என்பதை முதல்வர் உணர்த்திவிட்டார். தென்மாவட்டங்களில் இந்தளவுக்கு வெள்ள பாதிப்புகள் இருக்கும் நிலையில் அவர் இங்கிருந்து வெள்ள நிவாரண பணிகளைச் செய்திருக்க வேண்டும். இதனைப் பொறுப்பற்ற செயலாகவே நான் பார்க்கிறேன்” என்றார் விரிவாக.
ஆளுநரின் அரசியல் நாடகம்:
இந்த விவகாரம் தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னாவிடம் பேசினோம், “ஆளுநர் அரசியல் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். இது திசை திருப்பும் செயல். மாநில அரசின் தினசரி நிகழ்வுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்பதை நீதிமன்றங்கள் பலமுறை சொல்லியிருக்கின்றன. அடிமைகள் ஆட்சி செய்த அதிமுக ஆட்சிக் காலத்திலும் ஆளுநர் ஆய்வு செல்கிறேன் என்ற போது அதனை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டியது திமுகதான். அதிகாரிகள் மக்களின் உயிரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நேரம் அவர்களை ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பது முட்டாள்தனமாக இல்லையா.
வரலாறு காணாத பெருமழை பெய்திருக்கிறது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிகாரிகள் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் களத்தில் மக்களை மீட்கும் பணியில் இருக்கிறார்கள். முதல்வர் டெல்லி சென்றபோதும் அங்கிருந்து அனைத்து பணிகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறார். அவர் டெல்லியிலிருந்தாலும் உள்ளம் அனைத்துமே தென் மாவட்ட மக்களை நினைத்துக்கொண்டுதான் இருக்கிறது. பிரதமரைச் சந்தித்துப் பாதிப்புகள் குறித்துப் பேசிவுள்ளார். இந்த சமயத்தில் மக்களைப் பாதுகாக்காமல் ஆளுநர் நடத்தும் அயோக்கிய அரசியல் நாடகத்துக்கு அதிகாரிகள் வரவேண்டியது இல்லை” என்றார் காட்டமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
