கணவர் – மனைவி இடையே பிரச்னைகள் ஏற்படும்போது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்போது கணவர் மட்டுமல்லாது அவரது வீட்டில் உள்ள அனைவர் மீதும் புகார் கொடுக்கிறார். சில நேரங்களில், நடக்காததையெல்லாம் நடந்ததாகக் கூறி சில பெண்கள் கணவர் மீது புகார் கொடுப்பதாக குற்றம் சாட்டப்படுவதுண்டு. மேற்கு வங்கத்தில் அதுபோன்று ஒரு பெண், கணவர் வீட்டார் மீது பொய்யான புகார் கொடுத்து நீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறார்.

நித்தியா முகர்ஜி என்ற பெண் தன் கணவர் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து இருந்தார். ஆனால், தன் மனைவியின் புகார்களில் உண்மை இல்லை என்றும், தனக்கு அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்றும் கோரி, அவரின் கணவர் கீழ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நித்தியா மனுத்தாக்கல் செய்தார்.
நித்தியா தனது மனுவில், தன் கணவர் தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னை கவனித்துக்கொண்டதில்லை என்றும், அனைத்து செலவுகளையும் தன் தந்தைதான் கவனித்துகொண்டார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு, குழந்தை பெற்றபோது கணவர் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

கணவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நித்தியா வீட்டில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருப்பார் என்றும், எப்போதும் பணம் கேட்டுக்கொண்டே இருப்பார் என்றும், தனது தந்தை பெயரில் இருக்கும் சொத்தை தன் பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுக்கவேண்டும் என்று கூறி சண்டையிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு வீட்டு வேலை எதையும் அவர் செய்வதில்லை என்றும், உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் தாயாரையும் கவனிக்கவில்லை என்றும், குழந்தை பிறந்த பிறகு எந்தக் காரணமும் இல்லாமல் வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இம்மனு நீதிபதிகள் ஹரீஷ் தண்டன் மற்றும் மதுரேஷ் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கீழ் கோர்ட்டில் நித்தியா கொடுத்திருந்த ஆதாரங்களே அவருக்கு எதிராக மாறின.
கீழ் கோர்ட்டில், தான் பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தபோது தன் கணவரும் அவரது பெற்றோரும் வந்து பார்த்துச் சென்றதாகக் குறிப்பிட்டு இருந்தார். இதனால் நித்தியா உயர் நீதிமன்றத்தில் கொடுத்திருந்த ஆதாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் மீது நீதிபதிகள் சந்தேகம் அடைந்தனர். மேலும் நித்தியாவின் படிப்புக்கு கணவன் வீட்டார் உதவி செய்ததோடு அவர் கர்ப்பமாக இருந்தபோது அவரை கணவர் வீட்டார் நன்றாக கவனித்துக் கொண்டதும், பிரசவத்திற்கு மருத்துவமனையில் அவர்கள் சேர்த்ததும் ஆதாரங்கள் மூலம் தெரிய வந்தது.

இது குறித்து நித்தியாவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கணவர் வீட்டார் மீது தெரிவிக்கும்படி வழக்கறிஞர் ஆலோசனை வழங்கியதாகவும், அதன் அடிப்படையில்தான் 498ஏ/406வது சட்டப்பிரிவின் கீழ் கணவர் மற்றும் அவர்களது வீட்டில் இருப்பவர்கள் மீது புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், கணவர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதும் கொடூரமான செயல்தான் என்று குறிப்பிட்டனர். அதோடு நித்தியாவிடமிருந்து அவரது கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
