ஐரோப்பிய ஒன்றியம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சில புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய விவசாய உற்பத்தி நாடாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் விவசாயிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக, பிரான்ஸ் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பிரான்ஸில் விவசாயிகளுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொண்டுவரும் உக்ரைனின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், அந்த நாட்டுக்கு பிரான்ஸ் தரப்பில், கடந்த ஆண்டு வரிவிலக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உக்ரைனின் அளவற்ற ஏற்றுமதியும் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக பிரான்ஸ் விவசாயிகள் தெரிவித்தனர். இந்தப் பிரச்னைகளை, பிரான்ஸ் மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அனைத்து வேளாண் உற்பத்தியாளர்களும் சந்திக்கின்றனர்.
எனவே, புதிய கட்டுப்பாடுகள், குறைவான ஊதியம், வாழ்வாதார பாதிப்பு, உள்நாட்டு விவசாயிகளைப் பெருமளவில் பாதிக்கும் வகையில் குறைந்த விலையில் கிடைக்கும் வெளிநாட்டு இறக்குமதிகள் ஆகியவற்றால் விவசாயிகள் கடும் அதிருப்தியிலிருந்தனர். இந்த நிலையில்தான் இவற்றை எதிர்த்து, பிரான்ஸில் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 23-ம் தேதி பிரான்ஸின் பெமியர்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்திற்குள், அத்துமீறி நுழைந்த கார் ஒன்று, 36 வயது பெண் விவசாயியையும், அவரின் 16 வயது மகளையும் பலி கொண்டது. இது நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த தினம் முதல் நாட்டின் முக்கிய சாலைகள் அனைத்தையும், விவசாயிகள் தங்கள் டிராக்டர் அணிவகுப்பால் திணறடித்தனர். இன்னும் இந்தப் போராட்டத்துக்கான தீர்வுகள் எட்டப்பட்டத நிலையில், விவசாயிகள் நேற்று முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர்.
மேலும், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளை முடக்கி தலைநகரை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்திருக்கின்றனர். இதைத் தடுக்கும் நோக்கில், 15,000 காவல்துறையினரையும், துணை ராணுவப் படையினரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்துப் பேசிய உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மான், “காவல்துறை, ராணுவப் படைகளிடம் மிதமான போக்கை விவசாயிகள் கடைப்பிடிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
அரசின் முக்கிய விவகாரங்களில் விவசாயிகள் தலையிட வேண்டாம். அரசு கட்டடங்கள், வரி வசூல் கட்டடங்கள், மளிகைக் கடைகள், வெளிநாட்டுப் பொருள்களைக் கொண்டு செல்லும் லாரிகளைச் சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார். பாரிஸின் சார்லஸ் டி கோல், ஓர்லி விமான நிலையம், ருங்கிஸ் சர்வதேச மொத்த உணவுச் சந்தை ஆகிய இடங்களில் கவச உடையில், காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.
டிராக்டர் அணிவகுப்பு, சாலை மறியல், தொடர் போராட்டம் எனப் பல்வேறு வகையில் அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகள் முயன்றுவருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, `Riposte Alimentaire’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பெண் ஆர்வலர்கள், உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின்மீது பூசணிக்காய் சூப்பை ஊற்றி, “எது முக்கியம்… கலையா அல்லது ஆரோக்கியமான, நிலைத்தன்மையுடன் உணவுப் பொருள்களை உண்பதற்கான உரிமையா… பிரெஞ்சு விவசாயம் பொய்த்துப்போய் விட்டது. ஆரோக்கியமான, நல்ல திடமான நிலையான உணவு எங்களுக்கு வேண்டும்” எனப் போராடினர்.
இந்தப் போராட்டங்கள் குறித்துப் பேசிய முக்கிய விவசாயச் சங்கங்களில் ஒன்றான எஃப்.என்.எஸ்.இ.ஏ-வின் தலைவர் அர்னாட் ரூசோ, “எங்கள் போராட்டத்தின் மூலம், மக்களை சிரமப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. அரசின் பணிகளை முடக்கும் நோக்கமுமில்லை. எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது, பிரான்ஸின் அண்டை நாடான பெல்ஜியத்திலும், இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கின்றனர். பிரான்ஸ் விவசாயிகள் போராட்டம் ஐரோப்பாவின் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com
