“அண்ணாமலை ஒரு ஊசி பட்டாசு; வயது பத்தாது..!” – கொதிக்கும்

 “நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படும் 5 மாநில தேர்தலில் ‘வெற்றி உறுதி’ என்கிறார்களே, பா.ஜ.க தலைவர்கள்?”

“பா.ஜ.க-வை பொறுத்தவரையில், இனி ஆப்பிரிக்காவில் நின்றால்தான் வெற்றி பெறும். வரவுள்ள 5 மாநில தேர்தல் முடிவில் பஞ்சபாண்டவர்கள் எப்படி போர்க்களத்தில் வெற்றி பெற்றார்களோ, அப்படி காங்கிரஸ் வெற்றி பெரும்”

பா.ஜ.க – காங்கிரஸ்

“தமிழக காங்கிரஸ் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டதா?”

“இந்தியா முழுவதும் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை நாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோம். இங்கு காங்கிரஸ் சுறுசுறுப்பாக இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். இதைப்பற்றி மேலிடத்துக்கு சொல்லியிருக்கிறோம். அவர்களும் விரைவில் சரிசெய்து, காங்கிரஸ் தொண்டர்களை உற்சாக்கப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகிறேன்”

“சுணக்கத்துக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள்?”

“ஆளே இல்லாத கட்சிகள் கூட ஊடகங்களில் தினந்தோறும் பெரிய பரப்புரைகளை செய்கிறார்கள். அவர்கள் செய்வதில் 90% பொய்யாக இருந்தாலும் கூட, பெரிய சத்தம் போடுகிறார்கள். ஆனால் காங்கிரஸ் கொஞ்சம் அமைதியாக இருப்பது போல் தோன்றுகிறது. எனவே அந்த அமைதியை கலைத்துவிட்டு, நாங்களும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்க வேண்டும்”

சத்தியமூர்த்தி பவன்

“எனவே தலைமையில் மாற்றம் வேண்டும் என நினைக்கிறீர்களா?”

“இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்கேவிடமும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடமும் தெரிவித்திருக்கிறோம். நிச்சயமாக காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் டெல்லி நடவடிக்கை எடுக்கும்”

கே.எஸ்.அழகிரி

“பதவிக்காலம் முடிந்த பிறகும் கே.எஸ்.அழகிரி தொடர்கிறாரே?, அவரை மாற்ற டெல்லி தயங்குகிறதா?”

“அப்படி சொல்ல முடியாது. அவர் பதவியில் நீடிக்க வேண்டுமா?, வேண்டாமா? என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விரைவில் முடிவு செய்வார்கள் என நம்புகிறேன்”

 “கே.எஸ்.அழகிரி மர்ம கூட்டம் நடத்தியதாக கூறியிருக்கிறீர்களே?”

“தேர்தல் நேரத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தால் அனைவரையும் அழைப்பார்கள். ஆனால் இந்த கூட்டத்துக்கு சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்வப்பெருந்தகை, இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் என யாரையும் அழைக்கவில்லை. எனவேதான் மர்ம கூட்டம் நடத்துகிறார் என கூறினேன். இப்படி பலரை ஒதுக்கிவைத்துவிட்டு தனக்கு வேண்டிய 10 பேரை வைத்து கூட்டம் நடத்தினால், அது எந்த விதத்தில் காங்கிரஸின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்?”

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

“ஆனால் அழகிரி தரப்பில் முறையாக அழைத்தோம் என்கிறார்களே?”

“வேறு என்ன அவர்களால் சொல்ல முடியும்?. யாருக்கும் கடிதமும் அனுப்பவில்லை. தொலைபேசி மூலமாகவும் தெரிவிக்கவில்லை. தெரிந்தால் தானே செல்ல முடியும்?”

திருநாவுக்கரசர்

 “மகன்களுக்கு சீட் வாங்க வேண்டும் என்றால் யாரும் அழைக்காமலேயே முன்னாள் தலைவர்கள் வந்துவிடுவார்கள் என விமர்சனம் செய்கிறார்களே அழகிரியின் ஆதரவாளர்கள்?”

“இதுபோல் சொல்பவர்கள் முதலில் உத்தம சீலர்களாக இருக்க வேண்டும். ரஞ்சன்குமார் மாவட்ட தலைவரா? அல்லது எஸ்.சி அணி தலைவரா? என எனக்கு தெரியவில்லை?. நான் தலைவராக இருக்கும் போதே அவரை பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்தது. கட்சி காரார் என்பதால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அவர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இன்றைக்கும் தொடர்ந்து இருக்கிறது. குறிப்பாக மாநகராட்சி தேர்தலின் போது பலரிடம் கவுன்சிலர் ஆக்கிவிடுகிறேன் என கூறி சலுகைகள் பெற்றதாகக்கூட தகவல்கள் உண்டு. நான் அதுகுறித்து போக விரும்பவில்லை”

ஸ்டாலின்

“தி.மு.க.வின் தூண்டுதலின் பேரிலேயே நீங்கள் அழகிரியை விமர்சனம் செய்ததாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்ச்சாட்டுகிறார்களே?”

“அந்த அவசியம் தி.மு.க.வுக்கு கிடையாது. காங்கிரஸின் உட்கட்சி விவகாரங்களில் அவர்கள் எப்போதும் இறங்கியது இல்லை. அவர்கள் தேர்தல் களத்தில் ஏற்கெனவே இறங்கிவிட்டார்கள். பூத் கமிட்டி கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். உதயநிதி ஒருபுறம் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். மறுபுறம் முதல்வர் உடல்நலம் சரியில்லாத போதும் பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்”

“ஒவ்வொரு தேர்தலிலும் குறிப்பிட்ட சிலருக்கே காங்கிரஸில் வாய்ப்பு கிடைக்கிறது. இளைஞர்களுக்கு மூத்த தலைவர்கள் விட்டு கொடுப்பார்களா?”

“யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு சீட் கொடுக்கப்படும். கடந்த தேர்தலில் என்னை தவிர அனைவரும் வெற்றி பெற்றுவிட்டார்கள். இருந்தாலும் ஈரோடு கிழக்கில் நடந்த தேர்தலில் மக்கள் என்னை வெற்றி பெற வைத்தார்கள்”

மாநில தேர்தல் ஆணையம்

“சமீபத்தில் நடத்த கூட்டத்தில் தி.மு.க கூட்டணியில் 15 சீட்டுகளை பெற வேண்டும் என மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்களே?”

“இது தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தாது. மாறாக பலவீனப்படுத்தும். எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸால் வெற்றி பெற முடியும் என்பது இருகட்சி தலைமைக்கும் தெரியும். எனவே அந்த இடங்களை கொடுப்பார்கள். எங்களது கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணி. கொள்கையால் ஒன்றுபட்ட கூட்டணி. ஆகவே எங்களுக்கு எண்ணிக்கைகள் முக்கியமல்ல. நாங்கள் எடுத்துக்கொண்ட கொள்கைகள்தான் முக்கியம். எனவே அது 20, 15, 10, 5 சீட்டா என்பதெல்லாம் முக்கியம் இல்லை. பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்”

“ஒருவேளை கடந்த முறையைவிட சீட் குறைவாக கொடுத்தால் கூட ஏற்றுக்கொள்வீர்களா?”

“சூழ்நிலையை பொறுத்துதான் முடிவு செய்யப்படும். மற்ற கட்சிகளும் இந்த கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே எத்தனை தொகுதிகள் என்பதை காங்கிரஸ் மேலிடமும், தி.மு.க தலைவர் ஸ்டாலினும் முடிவு செய்வார்கள். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் தமிழக காங்கிரஸார் அதை ஏற்றுக்கொள்வார்கள்”

தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடர்

“நடந்து முடித்த சட்டசபை கூட்டத்தொடரில் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் என்ன பேசியிருப்பீர்கள்?”

“பா.ஜ.க கூட்டணியில் இல்லை என அ.தி.மு.க சொல்கிறது. ஆனால் கூட்டத்தொடரில் முதலில் பா.ஜ.க வெளிநடப்பு செய்கிறார்கள். பிறகு எடப்பாடி பழனிசாமியினுடைய கோஷ்டி வெளியேறினார்கள். ஆகவே இன்னும் அவர்கள் பா.ஜ.க.வின் கொத்தடிமைகளாகதான் இருக்கிறார்கள் எனபதற்கு, இதுதான் சான்று என பேசியிருப்பேன்”

“ஆளுநர் குறித்து என்ன பேசியிருப்பீர்கள்?”

“சங்கரையாவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு நடுவில் நந்தியாக நின்ற இந்த ஆளுநரை கடுமையாக விமர்சனம் செய்திருப்பேன். கவர்னருக்கு தமிழ்நாடு குறித்த பொது அறிவு கிடையாது. பூணூல், அரைஞாண் கயிறு போடுவதிலும்தான் நாட்டம் கொண்டிருக்கிறார். மக்கள் நலனுக்கான நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை”

ஆளுநர் ரவி

“நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு அதிமுக அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு ஆளுநர் அனுமதி கொடுத்திருக்கிறாரே?”

“இதை ஆளுநர் முதலிலேயே செய்திருக்க வேண்டும். கழுதைக்கு எப்படி கற்பூர வாசனை தெரியாதோ, அதுபோல சுதந்திர போராட்ட வீரர், மாமனிதர் சங்கரய்யா பற்றி  ஆளுநருக்கு தெரியவில்லை. அவருக்கு டாக்டர் பட்டம் தர வேண்டும் என முதல்வர் கேட்கும் போது மறுத்திருப்பது நியாயமா?. தமிழ்நாட்டில் அரசியல் அப்படி இருக்கிறது என்கிற அரிச்சுவடியை, அவர் கற்றுக்கொள்ள வேண்டும். நினைவு தடுமாறி இருந்தால் குற்றாலத்துக்கு சென்று ஒருமாதம் சிகிச்சை எடுத்துவிட்டு வரலாம்”

“பா.ஜ.க.வுடன் உறவு முறிந்துவிட்டதாக எடப்பாடி கூறும் நிலையில் உள்நீரோட்டம் இருக்கிறது என்கிறாரே துரைமுருகன்”

“உண்மைதான். இன்னும் பா.ஜ.க.வின் கொத்தடிமையாக அ.தி.மு.க இருக்கிறது. கொடநாடு வழக்கு இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வின் பிடியில் இருந்து தப்ப முடியாது.

எடப்பாடி பழனிசாமி

“ஆனால் அவர் மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்கிறாரே?”

“அவர் வேட்டி கட்டியிருக்கும் பொழுது பார்த்தால் கொஞ்சம் பெரிதாகத்தான் இருக்கிறது. அது மடியில் கனமா? அல்லது வயிறு கொஞ்சம் பெருத்திருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை”

“தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?”

“அவர் ஒரு ஊசி பட்டாசு. அவர் கூறுவதில் கிட்டத்தட்ட 80% தவறான தகவல். அவருக்கு வயது பத்தாது என நினைக்கின்றேன். பழைய விஷயங்களை பேசும் போது உண்மைக்கு மாறான தகவல்களை தந்து கொண்டிருக்கிறார்”

அண்ணாமலை

” ‘பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை’ என்று கூறி காலேல்கரின் அறிக்கையைக் குப்பைக்கூடையில் தூக்கி எறியுங்கள் என நேரு கூறியதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறாரே?”

“அதுகுறித்து முழுமையாக நான் படிக்கவில்லை. ஆனால் ஜவகர்லால் நேரு சாதிகளுக்கு அப்பாற்பட்டு மாமனிதனாகத்தான் இருந்தார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நாத்திகனாகத்தான் இருந்தார்”

 “நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறதே?”

“இது புதிதாக நடக்கவில்லை. மோடி ஆட்சிக்கு வந்ததுமே செய்துவிட்டார். நேஷனல் ஹெரால்டு என்பது நேருவின் சொத்துக்களை வைத்து ஆரம்பித்த பத்திரிகை. அதை தவறாக பயன்படுத்தி விட்டார்கள் என்று கூறுவது பழி வாங்கும் நடவடிக்கை. மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் தேர்தலில் மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார்”

ராகுல் காந்தி

 ” ‘பிரதமர் நரேந்திர மோடி அதிர்ஷ்டமில்லாதவர்’ என ராகுல் விமர்சனம் செய்திருக்கிறார். மறுபுறம் ராகுல்தான் ராசியில்லாதவர் என்கிறார்களே பா.ஜ.க.வினர்? “

“ராகுல் வந்த பிறகு தான் இமாச்சல், கர்நாடகாவில் வெற்றி பெற்றிருக்கிறோம். மோடியின் ராசி என்ன என்பதை நடந்து முடித்த கிரிக்கெட் போட்டியில் பார்த்தோம். இது பாராளுமன்ற தேர்தல் வரையில் தொடரும்”

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *