சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா கசிவால் பாதிப்புக்குள்ளான எண்ணூர் கிராம மக்கள் 10-வது நாளாகப் போராடிவருகின்றனர். மக்களின் கோரிக்கை என்ன… போராட்டக் களத்தில் என்ன நடக்கிறது என கள ஆய்வு செய்தோம்.
கடந்த டிசம்பர் 26-ம் இரவு 11:30 மணிக்கு கோரமண்டல் உரத்தொழிற்சாலையிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டு, எண்ணூர் சுற்றியுள்ள பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுக்கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. உடனடியாக மக்கள் தங்கள் பகுதிகளைவிட்டு இரவோடு இரவாக வேறு பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

அதிர்ஷ்டவசமாக அமோனியா கசிவு 10-15 நிமிடங்களுக்குள்ளேயே கண்டறியப்பட்டு நிறுத்தப்பட்டதால், பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. விசாரணையில் அமோனியா கடத்தப்படும் பைப்பில் ஏற்பட்ட கசிவே சம்பவத்துக்குக் காரணமென தெரியவந்தது. ஏற்கெனவே எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து வாடும் எண்ணூர் பகுதி மீனவர்களுக்கு, அடுத்த பேரிடியாகிவிட்டது.
இந்தச் சம்பவத்தால் கொதித்தெழுந்த மக்கள், `எண்ணூர் மக்களின் உயிர் அவ்வளவு மலிவாகிவிட்டதா?’ என டிசம்பர் 27-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர்.
இந்த விவகாரத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியம் விசாரணை நடத்திய நிலையில், கோரமண்டல் ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. ஆனால், தற்காலிகமாக அல்ல, நிரந்தரமாக ஆலையை மூட வேண்டும் என்பதே எண்ணூர் கிராம மக்களின் கோரிக்கை. எண்ணூர் பெரியகுப்பத்திலுள்ள கோரமண்டல் ஆலை நுழைவுவாயிலில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்கிய போராட்டம், 10-வது நாளாகத் தொடர்கிறது.

போராட்டக் களத்திலுள்ள மணி என்பவரிடம் பேச்சு கொடுத்தோம்… நம்மிடம் பேசியவர், “எண்ணூரைச் சுற்றி 33 கிராமங்கள் உள்ளன. எங்கள் அனைவரின் ஒருமித்தக் கோரிக்கை, கோரமண்டல் ஆலையை மூட வேண்டும். எங்களுக்கு நிவாரணம் வேண்டாம், நிதி வேண்டாம், நிறுவனத்தில் வேலை வேண்டாம், ஆலையை மூடினால் போதும்.
டிசம்பர் 26-ம் தேதி நிலைமை கைமீறியிருந்தால், பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கும், இப்போதுகூட அமோனியாவை சுவாசித்த எங்களுக்கு வாழ்நாள் பிரச்னை வரக்கூடும் என எச்சரிக்கிறார்கள். இனியும் அந்த கோரமண்டல் நச்சு ஆலையைச் செயல்பட அனுமதிக்க மாட்டோம். இன்று 10-வது நாள், ஆலையை முடும்வரை ஓயமாட்டோம். சாகும்வரை போராடுவோம். தமிழ்நாடு அரசு விரைந்து ஆலையை மூட உத்தரவிட வேண்டும்” என்றார் கொதிப்புடன்.
நன்றி
Publisher: www.vikatan.com
