மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு நாளும் எதாவது நெருக்கடி ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. கூட்டணியில் காங்கிரஸ் அல்லாத ஏழு முதல்வர்களில், மேற்கு வங்க முதல்வர் மம்தா தன்னுடைய மாநிலத்தில் (42 தொகுதிகள்) தனித்துப் போட்டியிடப்போவதாகத் தெரிவித்துவிட்டார். ஆம் ஆத்மியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும், மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் (13 தொகுதிகள்) தனியாகக் களமிறங்குவதாக அறிவித்துவிட்டார். இதனால், டெல்லியிலும் (7) காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி சீட் ஒதுக்குமா என்பது சந்தேகம்தான். போதாக் குறைக்கு, அமலாக்கத்துறை சம்மனால் கெஜ்ரிவாலுக்குத் தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

அதேபோல், பீகார் (40 தொகுதிகள்) முதல்வர் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியிலிருந்தே வெளியேறிவிட்டார். மேலும், பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை, ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை பின்தொடர்ந்து வருகிறது. தமிழ்நாடு (39) மற்றும் கேரளாவில் (20) ஆளுங்கட்சிக்கு எதிராக ஆளுநர்கள் தொடர்ந்து முரணாக செயல்பட்டுவருகின்றனர்.
அந்த வரிசையில், தற்போது ஜார்கண்ட் (14 தொகுதிகள்) முதல்வர் ஹேமந்த் சோரனை, நிலமோசடி விவகாரம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன்கள் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கின்றன. இதுவரையில் மட்டும் அமலாக்கத்துறையின் ஏழு சம்மன்களை ஹேமந்த் சோரன் புறக்கணித்திருக்கிறார். இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ஹேமந்த் சோரனை விசாரிக்க ஜார்கண்ட் பவன் மற்றும் மோதிலால் நேரு மார்க்கிலுள்ள அவரின் தந்தை இல்லத்துக்குச் சென்றனர்.

ஆனால், அவர் அங்கு இல்லாததால், டெல்லியில் அவரது முதல்வர் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கும் ஹேமந்த் சோரன் இல்லை. அதேசமயம், சோதனையில் சில ஆவணங்களைக் கண்டறிந்த அதிகாரிகள், சட்டவிரோத நிதியைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாக ஹேமந்த் சோரனின் BMW காரை பறிமுதல் செய்தனர். இன்னொருபக்கம், அமலாக்கத்துறையின் சம்மனை நாளை உச்ச நீதிமன்றத்தில் அவர் எதிர்கொள்ளவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுவரையில், ஹேமந்த் சோரன் எங்கு இருக்கிறார் என்ற தகவல் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க தலைவர் பாபுலால் மராண்டி, “அமலாக்கத்துறை மீதான பயம் காரணமாக, டெல்லி முதல்வர் இல்லத்திலிருந்து ஹேமந்த் சோரன் 18 மணிநேரமாகத் தலைமறைவாகிவிட்டார். ஊடக தகவலின்படி, இரவு நேரத்தில் ஹேமந்த் சோரன் காலணி போட்டுக்கொண்டு, முகத்தை மூடிக்கொண்டு, திருடனைப் போல நடந்தே வீட்டை விட்டு ஓடிவிட்டார். அவருடன் டெல்லி சென்ற சிறப்பு பிரிவு பாதுகாப்பு அதிகாரி அஜய் சிங்கையும் காணவில்லை.

அரசமைப்புச் சட்டப் பதவியை வகிக்கும் மாநில முதல்வர் ஒருவர், தன்னுடைய பதவிக்கான நெறிமுறைகளை மீறி, திருடனைப் போல தலைமறைவாகியிருப்பதை விட வேறென்ன அவலம்… முதல்வர் தலைமறைவானால் மாநிலத்தின் தலைவர் யார்… ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இதை உணர்ந்து மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ட்வீட் செய்திருக்கிறார். முன்னதாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, தனக்கெதிராக பெரிய சதி தீட்டப்பட்டிருப்பதாக ஹேமந்த் சோரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com
