அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 2016 முதல் 2021 வரை சென்னை தி.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த சத்யா என்கிற சத்ய நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் சோதனை நடத்திவருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கலின்போது, சத்யா தனது சொத்துமதிப்பைக் குறைத்துக் காட்டியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கின் விசாரணையில், சத்யா சட்டத்துக்குப் புறம்பாக தனது சொத்துக்கணக்கை மறைத்து தனது சொத்துமதிப்பை சுமார் இரண்டு கோடி ரூபாய் என வேட்புமனு தாக்கல் செய்ததும், பின்னர் மனுதாரரின் கோரிக்கையின் பேரில் கிடைத்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அறிக்கையில், சத்யாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் 13 கோடி ரூபாய் என்றும் தெரியவந்தது. அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில், இரண்டு மாதங்களில் ஆரம்பகட்ட விசாரணைகளை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
நன்றி
Publisher: www.vikatan.com
