நாடாளுமன்றம் தொடங்கி தமிழகம் உட்பட வேறெந்த மாநிலத்தின் அரசியல் மேடைகளில் ஏறினாலும், `தி.மு.க ஒரு குடும்பத்துக்கான கட்சி’ எனவும் `ஊழல் கட்சி’ எனவும் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார் பிரதமர் மோடி. தன் பங்குக்கு அண்ணாமலையும் தி.மு.க என்றாலே ஊழல்தான் எனப் பேசி வருகிறார். பதிலடியாக தற்போது சி.ஏ.ஜி அறிக்கையை முன்வைத்து மாபெரும் ஊழல் செய்திருக்கிறது பா.ஜ.க எனப் பேச ஆரம்பித்துவிட்டனர் தி.மு.க-வினர். முதலமைச்சர் ஸ்டாலினே சி.ஏ.ஜி அறிக்கையை மேற்கோள் காட்டிப் பேசுவதென இரு தரப்பும் மாற்றி மாற்றி ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொள்ளும் நிலையில், எந்த தரப்பின் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் மன்றத்தில் எடுபடப்போகிறது?

“தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகவே பா.ஜ.க-வினர் தி.மு.க-வை இப்படித்தான் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வராமல் போய்விட்டதா அல்லது மக்களவைத் தேர்தலில்தான் தோற்றுவிட்டோமா?” என்ற கேள்வியுடன் பேசத் ஆரம்பித்தார் தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன். தொடர்ந்து, “மக்கள் தி.மு.க-வை நம்புகிறார்கள், பா.ஜ.க-வை புறக்கணிக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டிலேயே அவர்களது பேச்சு எடுபடவில்லை என்கிறபோது, வேறு மாநிலங்களிலும் தி.மு.க-வை அவர்கள் விமர்சிப்பதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.
பிரதமர் மோடி தி.மு.க-வை தொடர்ச்சியாக விமர்சித்துப் பேசக் காரணம் இந்தியக் கூட்டணியில் நாங்கள் முக்கிய அங்கம் வகிக்கிறோம் என்பதால்தான். வரக்கூடிய தேர்தலில் தி.மு.க நாற்பதிலும் வெல்லும். பாஜக மட்டுமல்ல பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியையே மக்கள் புறக்கணிக்கப்போவதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்றார் சுருக்கமாக.
“தி.மு.க குடும்பக் கட்சி, ஊழல் கட்சி எனப் பிரதமர் மோடியும் அண்ணாமலையும் உண்மையைத்தான் மக்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்கள்” என்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கார்த்தியாயினி. “தி.மு.க செய்யும் அட்டூழியங்கள் அனைத்தையும் பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.

ஏற்கனவே இரு அமைச்சர்கள் அமலாக்கத்துறையின் பிடியில் இருக்கிறார்கள், அதில் ஒருவர் சிறையில் இருக்கிறார். பல அமைச்சர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. பல்லாயிரம் கோடிகளை ஸ்டாலின் குடும்பத்தினர் வைத்திருப்பதாக ஒரு அமைச்சர் வெளிப்படையாகவே பேசிவிட்டார். இதற்குமேல் என்ன சாட்சியங்கள் வேண்டும் திமுக ஊழல் கட்சி எனச் சொல்வதற்கு… தி.மு.க மீதான மக்களின் கோபம் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். தமிழ்நாடு பா.ஜ.க தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்டது,
அண்ணாமலையின் நடைப்பயணத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பே தக்க சாட்சி. ஒன்பது ஆண்டுக்கால பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார் அண்ணாமலை. திமுக-வின் வீழ்ச்சியையும் பாஜக-வின் எழுச்சியையும் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்துகொள்வீர்கள். சி.ஏ.ஜி அறிக்கையில், ஊழல் நடந்திருப்பதாக எந்தக் குறிப்பும் இல்லை. மத்திய அரசின் நிதிச் செலவினங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, கணக்கீடு செய்திருக்கிறது சி.ஏ.ஜி” என்றார்.

காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “பா.ஜ.க அரசின் மாபெரும் ஊழலை சி.ஏ.ஜி-யின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மத்திய அரசின் ஏழு திட்டங்களில், பெரும் முறைகேடுகளைத் திட்டமிட்டு பா.ஜ.க அரசு நிகழ்த்தியிருப்பதை அந்த அறிக்கையைப் படிக்கும் சாமானியர்கள்கூடப் புரிந்துகொள்ள முடியும்.
மாபெரும் ஊழலைச் செய்திருக்கிற பா.ஜ.க, தமிழகம் மட்டுமல்ல நாடு முழுக்க நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோற்றுப் போகும்.” என்கிறார்கள்.

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் சிலர் “ தி.மு.க ஒரு ஊழல் கட்சி என நிறுவ பா.ஜ.க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுகிறார், அதனை மையப்படுத்தியே நடைப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கு வலுசேர்க்கும் வகையில் நடைப்பயண துவக்க நிகழ்வுக்கு அமித் ஷா வருகிறார். தி.மு.க.-வினர் சொல்வது போல அரசியல் ரீதியாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் ரெய்டு, கைது, சிறை, குற்றப்பத்திரிகை தாக்கல் போன்ற விவகாரங்களை மக்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY
நன்றி
Publisher: www.vikatan.com
