புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். புதுச்சேரி மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, “படிக்கும் பள்ளிப் பருவம் முதல் உலகளவில் பல இடங்களில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று பேசியிருக்கிறேன்.
ஆனால் அப்போதெல்லாம் வராத பெருமை இப்போது புதுவையில் இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையை திறந்து வைப்பதில் என் வாழ்நாளில் பெற்ற பெரும் பேராக பெருமையாகக் கருதுகிறேன். திராவிட தத்துவம் இன்னும் 100 ஆண்டுகளையும் தாண்டி செல்வதற்கான அடித்தளத்தை தந்த தத்துவத் தலைவராக இன்று அவர் உயர்ந்திருக்கிறார். அதனால்தான் அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். அவருக்கு சிலை வைத்திருக்கிறோம். ஒரு தனி மனிதருக்கான சிலை அல்ல இது. ஒரு சித்தாந்தத்தை வலியுறுத்துகின்ற தத்துவத்திற்கான சிலை.
அப்படி திராவிட தத்துவத்தின் அடையாளமாக இன்னும் 500 ஆண்டுகளுக்கு தேவைப்படுகின்ற தலைவரின் சிலையை இங்கு திறந்திருக்கிறோம். தபால் அலுவலகம்கூட இல்லாத திருக்குவளையில் பிறந்து சாதி பலம், பணபலம் இல்லாமல் தந்தை பெரியாரின் கொள்கையை கடைப்பிடித்து, உலகமே கொண்டாடும் தலைவராக இருந்தவர் கலைஞர். கண்ணுக்குத் தெரியாத புரட்சி எல்லாம் தலைவர் கலைஞர் கொடுத்திருக்கிறார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கை ரிக்ஷா ஒழிப்பு என பல திட்டங்களைக் கொண்டு வந்த மகத்தான தலைவர் கலைஞர்.

திராவிட மாடல் என்னவென்று சிலர் நையாண்டி செய்கின்றார்கள். திராவிட மாடல் என்னெவென தெரியவில்லையா… ஓர் ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த கிராமத்தில் பிறந்த ஆ.ராசாதான் திராவிட மாடல். இன்று உலகத்தில் இருக்கின்ற 6 செம்மொழிகளில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிற மொழி தமிழ்மொழி. தன்னுடைய அறிவால் ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால், அர்ப்பணிப்பால் தமிழ்நாட்டு முதல்வராகி இந்திய அரசியலில் எண்ணற்ற பணிகளை ஆற்றியிருக்கிறார் கலைஞர்.
நிறைய தலைவர்கள், ஜனாதிபதிகளை உருவாக்கி இந்தியாவுக்கே வழிகாட்டும் தலைவராக விளங்கியவர் கலைஞர் அவர்கள். வெளிநாடுகளில் எல்லா தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அங்கு சாதி இல்லை. அங்கு தொழிலை பிரித்தார்கள். இங்கு தொழிலைப் பிரித்து குலத்தொழிலாக மாற்றினார்கள். அம்பேத்கரின் தடைசெய்யப்பட்ட புத்தகத்தை கொண்டு வந்து பாரதிதாசன் முழங்கிய மண் இந்த புதுவை. இப்படிப்பட்ட மண்ணில்தான் இன்று கலைஞர் சிலையை திறந்திருக்கிறோம். ஏற்றத்தாழ்வை சொல்வது சனாதனம்.

பெண்ணுக்கு உரிமை இல்லை என்று சொல்வது சனாதனம். சொத்து இல்லை என்று சொல்வது சனாதனம். கணவன் இறந்துவிட்டால் நீயும் அந்த சிதையில் செத்து விடு என்று சொல்வது சனாதனம். இதெல்லாம் நமக்கு தேவையா… பிராமணியத்தால் எல்லா சாதிக்கும் இழிவுதான் இருந்தது. எல்லாவற்றையும் எதிர்த்து தாண்டித்தான் வந்திருக்கிறோம். இந்த சனாதனத்தை ஏற்றுக் கொண்டால் பெரியாருக்கு விரோதி, அண்ணாவுக்கு விரோதி, கலைஞருக்கு விரோதி, சக மனிதனுக்கு நான் விரோதி. சனாதனத்தை ஏற்றுக்கொண்டால் நான் மனிதனே அல்ல. பா.ஜ.க-வுக்கு நான் சவால் விடுகிறேன்.
டெல்லியில் திறந்தவெளியில் போராட்டத்தை வைத்துக் கொள்ளலாம். ஒரு லட்சம் பேர் கூடட்டும். சனாதனம் பற்றி நீயும் பேசு, நானும் பேசுகிறேன். சனாதனம் குறித்து மக்கள் தீர்மானிக்கட்டும். நான் தயார். நீங்கள் தயாரா? சனாதனத்தை அழித்ததால்தான் அமித் ஷா உள்துறை அமைச்சராகியிருக்கிறார். தமிழிசை இன்று கவர்னராகியிருக்கிறார். வானதி சீனிவாசன் வழக்கறிஞராகியிருக்கிறார். அண்ணாமலை ஆடு மேய்க்காமல் ஐ.பி.எஸ் படித்தார். நாங்கள் ஒழித்த சனாதனத்தால் வளர்ந்துவிட்டு, சனாதனம், சனாதனம் இன்று சொல்கிறீர்கள்.
உங்களுக்கு மனசாட்சி இல்லையா… அமித் ஷாவைவிட, மோடியைவிட, பா.ஜ.க அமைச்சர்களைவிட, ஆர்.எஸ்.எஸ் நபர்களைவிட வெள்ளைக்காரர்கள் நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள். மனிதனை மனிதனாக நேசிக்காத ஆட்சி இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஊழலும், மதவாதமும் இருக்கும் இந்த ஆட்சியை தூக்கி எறிவதற்கு இந்த மகத்தான மனிதரின் சிலைக்கு முன்பாக அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
