ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது நூற்றாண்டு பழைமை வாய்ந்த நகராட்சி சந்தை. ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஊட்டி நகராட்சிக்குச் சொந்தமான இந்த கடைகள், வணிகர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், நூற்றாண்டு பழைமை வாய்ந்த கடைகளை இடித்துவிட்டு, வணிகர்களுக்கு இரண்டு கட்டங்களாக புதிய கடைகளைக் கட்டிக் கொடுப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும் மற்றொரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஊட்டி நகராட்சிக் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் பேசிய ஆளுங்கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற துணைத் தலைவர் ரவிகுமார், “ஊட்டி நகராட்சிக்குச் சொந்தமான பழைய கடைகளை இடித்துவிட்டு, வணிகர்களுக்கு புதிய கடைகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சிப் பணிகள் குறித்து தவறாக மக்களிடம் பரப்பி வருகிறார்கள். சிலர் இந்த செயலை பின்னணியிலிருந்து தூண்டிவிடுகிறார்கள்” என இழிவான வார்த்தை ஒன்றைச் சொல்லி, கட்டமாகப் பேசியிருக்கிறார்.

அந்த வார்த்தையைக் கேட்டு கொந்தளித்த தி.மு.க கவுன்சிலர் முஸ்தபா, “வளர்ச்சிப்பணி என்ற பெயரில் 400 குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவரும் வேலையைச் செய்து வருகிறார்கள். உங்களுக்கு கமிஷன் கிடைத்தால் போதும். கட்டுக்கட்டாகப் பணத்தை வாங்கி வைத்துக்கொண்டு போவீர்கள்” என கடுகடுக்கப் பேசியிருக்கிறார்.
ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் ஒருமையில் வசைபாடிக் கொண்டனர். இதைக் கண்டு முகம்சுளித்த சக கவுன்சிலர்கள், அவர்களைச் சமாதானம் செய்தனர்.
இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய ஊட்டி நகராட்சி கவுன்சிலர்கள் சிலர், “இருவரும் நீண்டநாள் நண்பர்கள். கட்சி மற்றும் நகராட்சி விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்து பேசியே முடிவெடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் இருவரும் கட்சியில் ஒரே கோஷ்டி.

புதிய கடைகளை கட்டுவதற்கு துணைத் தலைவர் ஆர்வம் காட்டி வருகிறார். மார்கெட் வணிகர்கள் சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் முஸ்தபாவுக்கு, கடைகளை இடிப்பதில் விருப்பம் இல்லை. இருவருக்குமான இந்த முரண் நகராட்சிக் கூட்டத்தில் வெடித்திருக்கிறது” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
