அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று, மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று மாலை 4 மணியளவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகிய அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா குறித்து விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று பேசி பரபரப்பை கிளப்பினார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்ற கருத்தையும் அவர் முன் வைத்திருந்தார்
2022 பிப்ரவரியில், அதிமுக இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்றும், 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணியில் இருக்கும் என்றும் அப்போது கூறியிருந்தாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்கொள்ளும் என்று கூறி இருந்தார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நன்றி
Publisher: 1newsnation.com