
’’தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
“தமிழ்நாட்டு மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் எந்தப் பிரச்னையிலும், எந்தக் காலத்திலும் தி.மு.க மௌனம் காத்த வரலாறே கிடையாது. காவிரி விவகாரம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்காலப் பிரச்னை. காவிரி நடுவர் மன்றம் அமைக்க, டெல்லிக்கு நடையாக நடந்து தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்டியவர் தலைவர் கலைஞர்தான். இப்போதுகூட ஒன்றிய அமைச்சரைச் சந்தித்துப் பேசி, நீதிமன்றத்தில் போராடி, தமிழகத்துக்கான நீரை வழங்க உத்தரவு பெற்றிருக்கிறோம். கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்தால், அதையும் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியும் வெற்றி காண்போம். அம்மையார் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு, ஊழல் வழக்கில் கைதாகி கர்நாடக சிறையிலடைக்கப்பட்டபோது, ‘காவிரியை வெச்சுக்கோ, அம்மாவைக் குடு’ என்று போஸ்டர் அடித்த அ.தி.மு.க-வினருக்கு காவிரி விவகாரம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது… அ.தி.மு.க ஆட்சியில் ஆறு ஆண்டுகளாகக் காவிரிநீர் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவில்லை. சட்ட அறிவின்றி, மாநில உரிமையையும் அவர்கள் விட்டுக் கொடுத்ததால், செயற்கை வறட்சி ஏற்பட்டு டெல்டா விவசாயிகள் 217 பேர் தற்கொலை செய்துகொண்டதும், எலிக்கறி தின்றதும், கஞ்சித் தொட்டி திறந்ததும் தமிழ்நாட்டில் நடந்தது. அ.தி.மு.க-போலன்றி, தி.மு.க அரசு எல்லாச் சூழலிலும் விவசாயிகளுடன் துணை நிற்கும், விவசாயிகள் உரிமை காக்கும். காவிரி நீருக்காக அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எடுக்கவேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் தி.மு.க அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது!’’
நன்றி
Publisher: www.vikatan.com
