செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்
“மறுக்க முடியாத உண்மை. நாடாளுமன்றம், நீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் பலவீனமடையச் செய்து, தனக்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுகிறார் மோடி. விசாரணை அமைப்புகளை அவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு நாடாளுமன்றத்துக் குள்ளேயே எதிர்க்கட்சியினரைப் பார்த்து, ‘உங்கள் வீட்டுக்கு இ.டி ரெய்டு வரும்’ என்று பா.ஜ.க-வினர் மிரட்டுவதே சாட்சி. அதானியின் ஊழலைப் பற்றிப் பேசிவிடுவாரே என்று அவசர அவசரமாக ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறித்த கூட்டம்தான் இது. என்னைக் கேட்டால், மத்திய பா.ஜ.க அரசை, `சர்வாதிகார அரசு’ என்றுகூடச் சொல்ல முடியாது. அதைவிடக் கேவலமாக, சொந்த நாட்டு மக்களையே சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிரித்தாண்டு ரத்தம் குடிக்கிற அரசு இது. இப்போது எந்த முன்னறிவிப்பும், விவாதமும், கருத்துக்கேட்புமின்றி நாட்டின் பெயரையே ‘பாரத்’ என்று மாற்றியிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது என்கிற கடுப்பில், நாட்டின் பெயரையே மாற்றிய கோமாளிக் கூட்டத்தை உலகம் இப்போதுதான் பார்க்கிறது. இருள் அதிகரித்துக்கொண்டே போனால் விரைவில் விடியல் ஆரம்பமாகப்போகிறது என்று அர்த்தம். இந்தச் சர்வாதிகாரக் கூட்டத்தை வரும் தேர்தலில் மக்கள் மொத்தமாகத் துடைத்தெறிவார்கள்.”
நன்றி
Publisher: www.vikatan.com
