பிரிந்து சென்ற மனைவியிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது. முன்னதாக, 1994-ல் உமர் அப்துல்லா – பாயல் ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், 2009-ல் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ ஆரம்பித்தனர்.

இன்றுவரை இருவரும் தனித்தனியாக வாழ்ந்துவரும் சூழலில், தன்னுடைய மனைவியால் கொடுமைக்குள்ளானதாக 2016, ஆகஸ்ட் 30-ம் தேதி விவாகரத்து கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார், உமர் அப்துல்லா. பின்னர் இந்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம், `விவாகரத்து பெறுவதற்காக உமர் அப்துல்லா கூறிய காரணங்களான கொடுமை உள்ளிட்டவற்றை, அவரால் நிரூபிக்க முடியவில்லை’ என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தது.
அதைத் தொடர்ந்து, விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை உமர் அப்துல்லா, தாக்கல் செய்தார். இந்த நிலையில், உமர் அப்துல்லாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்திருக்கிறது.

மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, “மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தெளிவற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று 2016-ல் நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவில், எந்த குறையையும் நாங்கள் காணவில்லை. அதோடு, தனக்கு உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ ஏற்பட்ட கொடூரமான செயல் என்று கூறக்கூடிய எந்தவொரு செயலையும் மனுதாரர் நிரூபிக்கத் தவறிவிட்டார்” என்று கூறி, உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
நன்றி
Publisher: www.vikatan.com
