
பட மூலாதாரம், BBC/Getty Images
ஒடிஷாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் பாண்டியன் அமைச்சருக்கு நிகரான பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த, ஒடிஷா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி. கார்த்திகேயன் பாண்டியன், தனது ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் அந்தஸ்தில் பதவியேற்றுள்ளார். கார்த்திகேயன் பாண்டியனை ஒடிஷா முதல்வர் இந்த அளவுக்கு நம்புவது ஏன்? அவருடைய பின்னணி என்ன?
கடந்த 2000ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த ஒடிஷா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி. கார்த்திகேயன் பாண்டியன், ஐ.ஏ.எஸ். பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக கடந்த திங்கள் கிழமையன்று செய்திகள் வெளியாகின.
அதற்கு அடுத்த நாளே, அதாவது செவ்வாய்க் கிழமையன்று, கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்துடன் நவீன ஒடிஷா மற்றும் 5T எனப்படும் Transformational Initiatives-இன் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Team work, Technology, Transparency, Transformation, Time ஆகியவையே இந்த ஐந்து T-க்கள். இவற்றை முன்வைத்து, மாநிலத்தில் உள்ள திட்டங்களை மதிப்பீடு செய்து வருகிறது ஒடிஷா அரசு.
‘அம ஒடிஷா நபீன ஒடிஷா’ என்ற திட்டம், உள்கட்டமைப்பை மேம்படுத்தி வளர்ச்சியைத் துரிதப்படுத்தி கிராமப்புறங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.

இதற்காக ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திற்கும் 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும். 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக, அம கோவான், அம பிகாஷ் என்ற பெயரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த இரு திட்டங்களுக்குமான தலைவராகவே தற்போது வி. கார்த்திகேயன் பாண்டியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலராக வி. கார்த்திகேயன் பாண்டியன் இருந்தபோது, அம்மாநில அரசில் மிகவும் சக்தி வாய்ந்த நபராகக் கருதப்பட்டார்.
யார் இந்த வி. கார்த்திகேயன் பாண்டியன்
ஒடிஷா அரசின் முக்கியமான முடிவுகள் எதுவும் இவரது ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதில்லை. இவ்வளவு சக்தி வாய்ந்த நபரான வி. கார்த்திகேயன் பாண்டியனின் பின்னணி என்ன?
வி. கார்த்திகேயன் பாண்டியன் மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள கூத்தப்பன்பட்டியில் 1974இல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை அழகர் கோவிலுக்கு அருகில் உள்ள வெள்ளாளபட்டி அரசுப் பள்ளியில் முடித்தார். பிறகு நெய்வேலியில் உள்ள ஸ்போர்ட்ஸ் பள்ளியில் படித்தார். படிக்கும் காலத்தில் தடகளப் போட்டிகளில் மிகத் தீவிரமாக பங்கேற்றார்.
அதன் பின், இளநிலை விவசாயப் படிப்பை மதுரையில் உள்ள விவசாயக் கல்லூரியிலும் முதுகலைப் படிப்பை இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்திலும் முடித்தார்.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக 2000வது ஆண்டில் தேர்வுபெற்ற இவர், ஒடிஷாவில் பணியில் சேர்ந்தார். முதலில் பஞ்சாப் கேடர் அதிகாரியும், சக ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுஜாதா ரௌத்தை திருமணம் செய்துகொண்ட பிறகு, அவரும் ஒடிஷாவுக்கு தனது பணியை மாற்றிக் கொண்டார்.

கார்த்திகேயன் பாண்டியனுக்கு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு எப்போதும் தொடர்கிறது.
முதன்முதலில் ஒடிஷாவில் உள்ள கலஹந்தி மாவட்டத்தின் தரம்கரில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தரம்கரில் துணை ஆட்சியராக இருந்தபோதே விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கச் செய்தது, நெல் கொள்முதல் செய்வதை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பணிகளால் அரசின் கவனத்தை ஈர்த்தார்.
மயூர்பஞ்சில் 2005லிருந்து 2007வரை, கஞ்சம் மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டிலிருந்து 2011வரை ஆட்சித் தலைவராகப் பணியாற்றினார் வி. கார்த்திகேயன் பாண்டியன்.
மயூர்பஞ்ச் ஒடிஷாவிலேயே மிகப் பெரிய மாவட்டம். இங்கு ஆட்சித் தலைவராக இருந்தபோது, மாவட்டத்தின் தொலைதூர கிராமங்களுக்கு பயணம் மேற்கொண்டு வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிட்டது, அவற்றை துரிதமாகச் செயல்படுத்த உதவியது.
இந்த மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக இவர் ஆற்றிய பணிகளுக்கு ஹெலன் கெல்லர் விருதும் அவருக்குக் கிடைத்தது.
இந்தக் காலகட்டத்தில் அந்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் அங்கிருந்த நக்சல் பிரச்னைகள் குறைய ஆரம்பித்தன.
ஒடிஷாவிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள கஞ்சம் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் அங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினார்.
தொழிலாளர்களுக்கு நேரடியாக பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறையையும் இவர் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக கார்த்திகேயன் பாண்டியன் பணியாற்றி வந்தார்.
இந்த மாவட்டத்தில்தான் நவீன் பட்நாயக்கின் தொகுதியான ஹிஞ்சிலி தொகுதி அமைந்திருக்கிறது.
இங்கு அவருடைய செயல்பாடுகளைக் கவனித்த நவீன் பட்நாயக், 2011ஆம் ஆண்டில், தன்னுடைய அலுவலகத்தில் அவரை இணைத்துக் கொண்டார்.
அப்போது முதலமைச்சரின் தனிச் செயலர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. மிக விரைவிலேயே நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உருவெடுத்தார் கார்த்திகேயன் பாண்டியன்.
இவருடைய மேற்பார்வையின் கீழ் மோ சர்க்கார் திட்டம், வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட இடங்களை மாற்றியமைக்கும் திட்டம், புரியில் பாரம்பரிய வளாகத் திட்டம், மேல்நிலைப் பள்ளிகளை மாற்றியமைக்கும் திட்டம், ஒடிஷாவை இந்தியாவின் விளையாட்டு மையமாக மாற்றும் திட்டம் ஆகியவை முன்னெடுக்கப்பட்டன.
கடந்த 2018ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் மாற்றியமைக்கும் 5T திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
எழுபது லட்சம் பேருக்கு மருத்துவக் காப்பீட்டை அளிக்கும் பிஜுஸ்வதிய கல்யாண் திட்டம், இரண்டு ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகளை ஒடிஷாவில் நடத்தியது, மிகப் பெரிய ஹாக்கி மைதானத்தை ஒடிஷாவில் அமைத்தது ஆகியவற்றின் பின்னணியில் வி. கார்த்திகேயன் பாண்டியனின் கரங்கள் இருந்ததாக அங்குள்ள மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில், விமர்சனங்களும் இல்லாமல் இல்லை.
ஒடிஷா அரசியலில் கார்த்திகேயன் பாண்டியனின் செல்வாக்கு

ஒடிஷா அரசியலில் கார்த்திகேயன் பாண்டியனின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முதலமைச்சரின் செயலகத்தில் இணைந்த சில ஆண்டுகளிலேயே, ஒடிஷா அரசுக்குள் கார்த்திகேயன் பாண்டியனின் செல்வாக்கு வெகுவாக அதிகரித்தது. எப்போதும் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நிழலாக வலம்வர ஆரம்பித்தார் அவர்.
முழுக்கை சட்டை, இறுக்கமான பேண்ட் அணிந்து செருப்புடன் வலம் வரும் கார்த்திகேயன் பாண்டியன், ஒரு கட்டத்தில் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து, வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பார்வையிடத் தொடங்கினார்.
அவர் அப்படிப் பயணம் செய்தபோது அமைச்சருக்கான மரியாதை அவருக்கு வழங்கப்பட்டது. பல தருணங்களில் அதைவிடக் கூடுதலான முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது.
வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிடுவதற்காக கடந்த ஜூன் மாதம் கார்த்திகேயன் பாண்டியன் மாநிலம் முழுவதும் எல்லா மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டது, பல்வேறு மட்டங்களிலும் கேள்விகளை எழுப்பியது.
அந்தத் தருணத்தில்தான் கார்த்திகேயன் பாண்டியன் குறித்த கட்டுரைகள் ஒடிஷாவிலிருந்து வெளியாகும் ஊடகங்களிலும் தேசிய ஊடகங்களிலும் வெளியாக ஆரம்பித்து, அனைவரின் கவனத்தையும் கவரத் தொடங்கின.
இந்தப் பயணத்தின்போது பொதுமக்கள் அவரது கால்களில் விழுந்தது, பெண்கள் அவருக்கு மாலையிட்டது தொடர்பான செய்திகளும் வெளியாயின.
பணியில் உள்ள ஒரு அதிகாரிக்கு இம்மாதிரி கிடைத்த இந்த வரவேற்பு சற்று ஆச்சரியத்தைத்தான் அளித்தது.
அதேபோல, கட்சியின் முக்கியமான பொறுப்புகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதிலும் கார்த்திகேயன் பாண்டியனின் செல்வாக்கு உண்டு எனச் சொல்லப்படுகிறது.
பிஜு ஜனதா தளத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கார்த்திகேயன் பாண்டியன் குறித்து எந்தப் பதிவும் வெளியிடப்படுவதில்லை என்றாலும், அக்கட்சியின் சமூக ஊடக பிரிவின் தலைவரான ஸ்வயம் பிரகாஷ், தொடர்ந்து கார்த்திகேயன் பாண்டியன் குறித்து, புகழ்ச்சியான பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.
கார்த்திகேயன் பாண்டியனுக்கென பல ரசிகர் பக்கங்களும் சமூக ஊடகங்களில் இயங்கி வருகின்றன. இந்தப் பக்கங்களில் தொடர்ச்சியாக அவரைப் பற்றிய செய்திகள், வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன.
நவீன் பட்நாயக்கின் வாரிசு ஆகிறாரா கார்த்திகேயன் பாண்டியன்?
நவீன் பட்நாயக் 2000வது ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஒடிஷாவின் முதலமைச்சராக இருந்து வருகிறார். அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்பதோடு, கட்சியில் இருந்து வேறு தலைவர்கள் யாரும் அவருக்கு அடுத்த சக்தி வாய்ந்த தலைவர்களாகவும் இல்லை.
இந்த நிலையில், கார்த்திகேயன் பாண்டியன் அவருடைய வாரிசாக வளர்த்தெடுக்கப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்கும் கார்த்திகேயன் பாண்டியன், பிஜு ஜனதா தளத்தின் தலைவராகி, மாநிலத்தின் முதல்வராவது என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அடுத்த அரசில் அமைச்சராக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இவையெல்லாம் இப்போதைக்கு யூகங்கள்தான்.
வரவுள்ள 2024 சட்டமன்றத் தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் வெற்றி பெறும் வாய்ப்பே தென்படுகிறது என்பதால், அடுத்த ஆட்சிக் காலத்திலும் கார்த்திகேயன் பாண்டியனின் செல்வாக்கு நீடிக்கும் வாய்ப்புதான் காணப்படுகிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்