பாகிஸ்தானில் 10 மாத பெண் குழந்தை கர்ப்பமா? வயிற்றுக்குள் கரு வளர்ந்தது எப்படி?

பாகிஸ்தானில் 10 மாத பெண் குழந்தை கர்ப்பமா? வயிற்றுக்குள் கரு வளர்ந்தது எப்படி?

கருவுக்குள் இருந்த கரு

பட மூலாதாரம், Sheikh Zayed Medical College

படக்குறிப்பு,

குழந்தை ஷாஜியாவின் வயிற்றுக்குள் இருந்தது அவரின் இரட்டை கரு

  • எழுதியவர், சுபைர் அசாம் & அகமது கவாஜா
  • பதவி, பிபிசி உலக சேவை

எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்கள் உங்களை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கலாம்.

10 மாத குழந்தையான ஷாஜியாவின் வயிற்றில் சந்தேகத்திற்குரிய நீர்க்கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் முஸ்தக் அகமது அவளின் வயிற்றுக்குள் இருந்த பாதியே வளர்ச்சி பெற்றிருந்த இரு கால்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

“பல மாதங்களாக வலியால் அழுது கொண்டிருந்த சிறுமிக்கு நீர்க்கட்டி அல்லது வயிற்றில் கட்டி இருக்கும் என எனது குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால், குழந்தையின் வயிற்றை திறந்து பார்த்தபோது, கால் விரல்கள் மற்றும் முதுகுத்தண்டு போன்றவை இருந்ததைக் கண்டு, நான் உறைந்துபோனேன். 15 ஆண்டுகளாக குழந்தை அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறேன். ஆனால், என் அனுபவத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வை எதிர்கொண்டது இல்லை” என்று முஸ்தக் அகமது பிபிசியிடம் கூறினார்.

குழந்தை ஷாஜியாவின் வயிற்றுக்குள் இருந்தது அவரின் இரட்டை கரு (Twin Foetus) என்று விவரிக்கும் முஸ்தக், எட்டு அல்லது ஒன்பது வாரங்களின் அதன் வளர்ச்சி நின்றிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

“நான்கு மூட்டுகளையும் கால்விரல்களை பார்த்தோம். கண்களைப் போன்ற பகுதியையும் தெளிவாக காண முடிந்தது” என்றும் அவர் கூறினார்.

கருவுக்குள் இருந்த கரு

பட மூலாதாரம், Dr Mushtaq Ahmed

படக்குறிப்பு,

மருத்துவ உலகில், இந்த அரிய நிலை “கருவுக்குள் கரு”(Fetus in fetu) என்று அழைக்கப்படுகிறது

குழந்தையின் வயிற்றில் இருந்த கருவை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை பாகிஸ்தானில், தெற்கு பஞ்சாப் பகுதியில் உள்ள ரஹிம் யார் கானில் உள்ள ஷேக் சயீத்தின் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

கருவுக்குள் கரு

மருத்துவ உலகில், இந்த அரிய நிலை “கருவுக்குள் கரு”(Fetus in fetu) என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், தவறுதலாக உருவான கரு ஒட்டுண்ணியாக தனது இரட்டையரின் உடலுக்குள் அமைந்திருக்கும். இவ்வாறு ஏற்படுவதற்கான உடனடி காரணம் என்ன என்பது கண்டறியப்படவில்லை. அதேவேளையில், ஒரு கரு மற்றொன்றைச் சுற்றிக் கொண்டிருக்கும் குழந்தை வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில் இந்த நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு சுற்றிக்கொண்டிருக்கும் கரு முழுமையாக வளர்ச்சி பெறாது, எனினும், ஒட்டுண்ணியாக மாறி தனது இரட்டையை சார்ந்து இருக்கும். பொதுவாக பிறப்புக்கு முன்பாகவே இத்தகைய இரட்டை கருக்கள் உயிரிழந்துவிடும்.

2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அமெரிக்கக் குழந்தை மருத்துவ அகாடமியின் அறிக்கையின்படி, 5,00,000 பிறப்புகளில் ஒருவருக்கு இந்த அசாதாரண நிலை ஏற்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் 200 க்கும் குறைவான எண்ணிக்கையில் இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

கருவுக்குள் இருந்த கரு

பட மூலாதாரம், Sheikh Zayed Medical College

படக்குறிப்பு,

ஷாஜியாவின் தந்தை முகமது ஆசிப்

விடாமல் அழுத குழந்தை

குழந்தை ஷாஜியா பிறந்து ஒரு மாதத்தில் அவளின் வயிறு வீங்கத் தொடங்கியது. அவள் நீண்ட நேரம் அழ ஆரம்பித்தாள் என்றும் அடிக்கடி வலியில் துடித்தாள் என்றும் அவளுடைய பெற்றோர் கூறுகின்றனர்.

“அவளுக்கு என்ன பிரச்னை என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அவளது வயிறு பகுதியை தொடும்போது கடினமாக இருந்தது” என்று ஷாஜியாவின் தந்தை முகமது ஆசிப் கூறினார்.

பண்ணையில் கால்நடைகளை வளர்க்கும் கூலி தொழிலாளியான ஆசிஃப் தனது மனைவி, மற்ற இரண்டு குழந்தைகளுடன் ஷாஜியாவை அவர்களது சொந்த ஊரான சாதிகாபாத்தில் உள்ள பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று காட்டினார். போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாலும், அரிதான நோய் என்பதாலும் அவளது நிலையை அங்குள்ள மருத்துவர்களால் கண்டுமுடிக்க முடியாமல் இருந்தது.

ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று ஷாஜியாவின் உடல்நிலை மிகவும் மோசமடையவே, 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஷேக் சயீத் மருத்துவமனைக்கு அவளை அழைத்து செல்ல பெற்றோர் முடிவு செய்தனர். மருத்துவமனையில் குழந்தையை மருத்துவர் முஸ்தக் பரிசோதித்தார்.

எம்ஆர்ஐ ஸ்கேன் செய்திருந்தால் இன்னும் துல்லியமாக கண்டறிந்திருக்க முடியும் ஆனால் ஷாஜியாவின் பெற்றோரிடம் அதற்கான பணம் இல்லை. அந்த நேரத்தில், அறுவை சிகிச்சை மூலம் நீர்க்கட்டியை அகற்றுவதுதான் சிறந்த வழி என்று மருத்துவர் முஸ்தக் அவர்களிடம் அறிவுறுத்தினார்.

கருவுக்குள் இருந்த கரு

பட மூலாதாரம், Sheikh Zayed Medical College

படக்குறிப்பு,

அறுவை சிகிச்சை செய்யும்போதுதான் ஷாஜியாவின் வயிறுக்குள் இருந்த இரட்டையரை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்

“இதனால் அவர்கள் அச்சமடைந்தனர். சிறிய குழந்தைக்கு ஏன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்.”

எனவே, அறுவை சிகிச்சை செய்யாமல் ஷாஜியாவை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

சில நாட்களிலேயே ஷாஜியாவின் நிலை மோசமடைந்ததால் பெற்றோர் மீண்டும் மருத்துவமனையை நாடினர். அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவர்கள் துணிந்தனர்.

ஷாஜியாவின் பெற்றோர் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தனர். எனவே, அறுவை சிகிச்சைக்கு பணம் செலுத்துவதில் அவர்களுக்கு சலுகையை வழங்கினோம் என்று மருத்துவர் முஸ்தக் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யும்போதுதான் அவளின் வயிறுக்குள் இருந்த இரட்டையரை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதை அகற்றுவதற்கு நுட்பமான சிகிச்சையை தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.

அவளின் வயிறுக்குள் இருந்த கரு ஒரு ஒட்டுண்ணியாக செயல்பட்டது – குழந்தையின் சிறு குடல் ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டு, குழந்தையின் ரத்தத்தை எடுத்து க்கொண்டிருந்தது. இதனால் ஷாஜியாவிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஷாஜியா உடனடியாக குணமடைந்துவிட்டதாகவும், அவள் இப்போது ஆரோக்கியமாக வளர்ந்து வருவதாகவும் மருத்துவர் முஸ்தக் கூறுகிறார்.

“அவள் அழுவதை நிறுத்திவிட்டாள், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை நாங்கள் பார்த்தோம்.”

அறுவை சிகிச்சைக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 4 அன்று ஷாஜியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். குழந்தை மருத்துவக் குழு வரும் வாரங்களில் அவளின் நிலையைப் பின்தொடர்ந்து, இந்த கண்டுபிடிப்பை ஒரு அறிவியல் இதழில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.

கருவுக்குள் இருந்த கரு

பட மூலாதாரம், Mushtaq Ahmed

படக்குறிப்பு,

மருத்துவர் முஸ்தக் அகமது

குழந்தை கர்ப்பமாக இருப்பதாக பரவிய வதந்தி

ஷாஜியாவின் விஷயத்தில் நிகழ்ந்தது மிகவும் அரிதிலும் அரிதானது என்பதால் ஊடகத்தினர் இதில் அதிகம் ஆர்வம் செலுத்தினர். தேவையில்லாத கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருப்பதற்காக அவளின் தந்தை தனது மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

“குழந்தை கர்ப்பமாக இருக்கிறதா என்பதை அறிய செய்தித்தாள்கள், சேனல்கள் அழைத்தன. மேலும் எங்களிடம் எல்லா வகையான ஆபத்தான கேள்விகளையும் கேட்கின்றன,” என்று அவர் கூறினார்.

ஷாஜியா கர்ப்பமாக இருக்கிறாள் என்ற தவறான செய்திகள் மற்றும் கேள்விகளால் மன உளைச்சலுக்கு ஆளான ஷாஜியாவின் பெற்றோருக்கு ஆலோசனைகளையும் உள்ளூர் செய்தியாளர்களுக்கு விளக்கங்களையும் மருத்துவ குழுவினர் வழங்கினர்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (பிஐஎம்எஸ்) குழந்தை அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மருத்துவர் நதீம் அக்தர், கருவில் இருக்கும் கருவுக்கும் கர்ப்பத்துக்கும் தொடர்பில்லை என்பதை வலியுறுத்தினார்.

“பல பத்திரிக்கையாளர்கள் இந்த விவகாரத்தை திரித்து எழுதினர். அவர்கள் நிலைமையை புரிந்து கொள்ளாததால் அதை கர்ப்பத்துடன் இணைத்து கூறினர். இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மேலும் வருத்தமடைகின்றன”என தெரிவித்தார்.

“இந்த கரு போன்ற அமைப்பு எப்போதும் கர்ப்பம் அல்லது கட்டியைப் போன்று உடல் முழுவதும் வளர அல்லது பரவும் திறனைக் கொண்டிருக்காது. பொதுவாக அது உருவாகும் இடத்திலேயே இருக்கும், பெரும்பாலும் அடிவயிற்றில் இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருவுக்குள் இருந்த கரு

பட மூலாதாரம், PA

36 வயது ஆணின் உடலில் ஒட்டுண்ணியாக இருந்த கரு

இந்தியாவில் 36 வயதுடைய ஒருவருக்கு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் அளவுக்கு கட்டி பெரிதாகிவிட்டதாக நம்பப்பட்டது. கடுமையான வயிறு வலி இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவரது இரட்டை சகோதரரின் உடலை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த கரு நீண்ட நாட்களாக அவரின் உடலுக்குள் ஒட்டுண்ணியாக இருந்து தொப்புள் கொடி போன்ற அமைப்பை உருவாக்கி அவரின் ரத்தத்தை எடுத்து உயிர் வாழ்ந்துள்ளது.

மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள கிராமங்கள் அல்லது சிறிய நகரங்களில் வசிப்பவர்கள், அவர்களுக்குள் கரு இருப்பதை அறியாமலேயே இருக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *