பட மூலாதாரம், Getty Images
வரி ஏய்ப்பு செய்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் ஒன்பது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
இதுகுறித்த 56 பக்க குற்றப் பத்திரிகையில் அவர் 2016-19 வரை இந்திய ரூபாய் மதிப்பில் 11.67 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்த ஹண்டர் பைடன் இந்த வரி ஏய்ப்பு குற்றங்களில் பெரும்பாலானவை அவரது தந்தை ஜோ பைடன், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் ஆட்சியில் துணை அதிபராக இருந்தபோது நிகழ்ந்தது எனக் குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜோ பைடன் மீது தவறு செய்ததாகக் குற்றம் சாட்டப்படவில்லை. சமீபத்திய குற்றப் பத்திரிகையில் அவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை.
யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த ஹண்டர் பைடன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் 17 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். ஹண்டர் பைடன் மீது சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக கடந்த செப்டம்பரில் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
4 ஆண்டுகளில் ரூ.58 கோடியை ஹண்டர் பைடன் எப்படி சம்பாதித்தார்?
கடந்த 2016இல் இருந்து 2020 வரையிலான காலகட்டத்தில் ஹண்டர் பைடன் 58 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை எப்படி சம்பாதித்தார் என்பதை குற்றப்பத்திரிகை கோடிட்டுக் காட்டுகிறது.
அவர் தனது நிறுவனமான Owasco, PC மூலம் அவர் உருவாக்கிய வணிகக் கணக்குகளுக்கு பெரும்பாலும் பணம் செலுத்தப்பட்டது. மேலும், அவர் 75% பங்குகளை வைத்திருந்த Skaneateles என்ற நிறுவனத்தின் மூலமாகவும் அந்தப் பணம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் பணம் ஈட்டியதை மூன்று வழிகள் மூலமாக வழக்கறிஞர்கள் விளக்குகிறார்கள்
- சீன ஆற்றல்: 2015ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு ஹண்டர் பைடன் சீன எரிசக்தி நிறுவனமான CEFC China Energy என்ற நிறுவனத்தோடு வணிக உறவில் இருந்தார். 2017ஆம் ஆண்டில், CEFC நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஹாங்காங்கை சேர்ந்த ஸ்டேட் எனர்ஜி எச்கே என்ற நிறுவனம் உடனான ஒப்பந்தத்தின் மூலம் 8.3 கோடி ரூபாய் அவருக்குக் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டது. ஹண்டர் பைடன் ஒரு சீன ஈக்விட்டி நிதி நிறுவனத்தோடும் வணிகம் செய்தார்.
- புரிஸ்மா: ஹண்டர் பைடன் யுக்ரேனிய தனியார் எரிசக்தி நிறுவனமான புரிஸ்மா ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஏப்ரல் 2014இல் பணிபுரியத் தொடங்கினார். 8.3 கோடி ரூபாய் அவருக்கு ஆண்டு வருமானமாக நிர்ணயம் செய்யப்பட்டது. மார்ச் 2017இல், அவரது சம்பளம் ஆண்டுக்கு 4.16 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டில் 2016இல் 8.3 கோடி ரூபாய், 2017இல் 5.2 கோடி ரூபாய், 2018இல் 4.1 கோடி ரூபாய் மற்றும் 2019இல் 1.3 கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹண்டர் பைடன் பிபிசியிடம் பேசுகையில் நான் அமெரிக்க துணை அதிபரின் மகன், எனவே தனது நிறுவனத்தோடு உறவு வைத்திருக்க வேண்டும் என்பதால்தான் என்னை புரிஸ்மா நிறுவனம் வேலைக்கு எடுத்தது என்று கூறினார்.
- ருமேனிய தொழிலதிபர்: 2015இல் பெயரிடப்படாத ருமேனிய தொழிலதிபர் ஒருவர் தனது சொந்த நாட்டில் எதிர்கொள்ளும் லஞ்சக் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரைக் காப்பாற்ற ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்திற்குள் ஹண்டர் பைடன் நுழைந்தார். நவம்பர் 2015 முதல் மே 2017 வரை அவரது இந்தப் பணிக்காக, அவருக்கும் அவருடைய இரண்டு வணிகக் கூட்டாளிகளுக்கும் தோராயமாக 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் மூவரும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர்.
ஹண்டர் பைடன் பணத்தை எவ்வாறு செலவிட்டதாகக் கூறப்படுகிறது?
பட மூலாதாரம், Getty Images
அதிபரின் மகன் தனது பணத்தை போதைப் பொருள்கள், காவலர்கள், பெண்கள், சொகுசு ஹோட்டல்கள், கவர்ச்சியான கார்கள், ஆடைகள் மற்றும் இன்னும் சில தனிப்பட்ட பொருள்களிலும் செலவு செய்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்படுகிறது. சுருக்கமாக, அவரது வரிகளைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் அவர் பணத்தை செலவு செய்ததாக குற்றச்சாட்டு கூறுகிறது.
அவரது செலவு 2016இல் சுமார் 8.3 கோடி ரூபாய், 2017இல் 11 கோடி ரூபாய், 2018இல் 15 கோடி ரூபாய் மற்றும் 2019இல் 5 கோடி ரூபாய் என குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், அவர் ஏடிஎம்-இல் இருந்து மட்டுமே 13 கோடி ரூபாய் பணத்தை எடுத்திருக்கிறார்.
அதே காலகட்டத்தில் அவர் பல்வேறு பெண்களுக்காக 5.6 கோடி ரூபாயும், ஆபாச படங்களுக்காக 1.5 கோடி ரூபாயும், ஆடை மற்றும் அணிகலன்களுக்காக 3.3 கோடி ரூபாயும், உடல்நலம், அழகு மற்றும் மருந்துகளுக்கு 1.9 கோடி ரூபாயும் செலவு செய்ததாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
ஹண்டர் பைடன் தங்கியிருந்த பல ஆடம்பர ஹோட்டல்களை வழக்கறிஞர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டி.சி. ஆகிய நகரங்களில் இருந்தன.
அவர் ஹோட்டல்களை தொடர்ச்சியான பார்ட்டிக்காக பயன்படுத்தினார் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மற்ற பணம் லம்போர்கினி காரை வாடகைக்கு எடுக்கவும் போர்ஷே காரை வாங்கவும் பயன்படுத்தப்பட்டது.
ஒரு ஸ்ட்ரிப் கிளப்பில் ஒரு கவர்ச்சியான நடனக் கலைஞருக்கு 1.25 லட்சம் ரூபாய், அவருடன் இரண்டு இரவுகளைக் கழிக்க ஒரு பாதுகாவலருக்கு 9.5 லட்சம் ரூபாய், ஆன்லைன் ஆபாச இணையதளத்திற்கு 2.2 லட்சம் ரூபாய் என்று செலவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டில் குறிப்பிடபட்டுள்ளது.
அவர் எப்படி வரி ஏய்ப்பு செய்தார்?
பட மூலாதாரம், Getty Images
அதிக வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, அவர் பல தனிப்பட்ட செலவுகளை வணிக விலக்குகளாகக் கூறியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆடம்பர கார்களுக்கு வாடகைகள் மற்றும் ஹோட்டல்கள், பயணம், போக்குவரத்து மற்றும் பிற செலவுகளை வணிக செலவுகளாக அவர் கணக்கு காட்டியதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அவர் தனது மகளுக்கான கல்வி கட்டணத்தை “சட்டத் தொழில் மற்றும் ஆலோசனை” எனக் குறிப்பிட்டார் என்றும் “அலுவலகம் மற்றும் இதர” என பாதுகாப்பு மற்றும் நடனக் கலைஞர்களுக்காக செலவு செய்த பணத்தை கணக்கு காட்டியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டில் அவருடன் காதல் அல்லது பாலியல் உறவு கொண்ட மூன்று பெண்களுக்கும், மேலும் ஒரு பெண்ணுக்கும் சம்பளம் கொடுத்து அவர்களுக்கான மருத்துவ செலவுகளையும் செலுத்தியுள்ளார்.
அவர்களில் ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவர் குழந்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொக்கைன் போதைக்கு அவர் 2018இல் அடிமையாக இருந்தபோது எந்தவித பயணங்களும் செய்யாதபோதும் பல வணிகரீதியான பயணங்களைச் செய்ததாக அவர் கணக்கு காண்பித்தார்.
ஹன்டர் பைடனுக்கு எதிராக அவர் எழுதிய புத்தகமே திரும்பியது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
ஹண்டர் பைடனின் நினைவுக் குறிப்புகளில் அவரே தெளிவாக அவர் எந்தெந்த விஷயங்களில் செலவு செய்தார் எனக் கூறியுள்ளார் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அவர் 2018இல் ஏராளமான வணிக பரிவர்த்தனைகளைக் கொண்டிருக்கவில்லை. அதற்குப் பதிலாக தனது பணத்தைப் பல மாதங்களாக போதைப்பொருள், மது ஆகியவற்றில் செலவு செய்தார்.
அவரது நினைவுக்குறிப்பு புத்தகத்தில் ஹண்டர் கூறுகையில், ஒரு நாளைக்கு 24 மணிநேரமும், கொக்கைன் பயன்படுத்தியதாகவும் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு சிகெரெட் என வாரத்தில் ஏழு நாட்களும் புகைப்பிடித்தாகவும் அவர் கூறியுள்ளார்.
போதைப்பொருள் பயன்பாடு பற்றி கணக்காளர்களுக்குத் தெரிந்திருந்தால், வணிகச் செலவுகள் என அவர் செலவு செய்த பணத்தைப் பற்றி இன்னும் உன்னிப்பாக ஆராய்ந்திருப்பார்கள் என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஏப்ரல் 2018 முதல், அடுத்த சில மாதங்களுக்கு, ஹண்டர் பைடன் அவரை சுற்றித் திருடர்கள், போதை அடிமைகள், போதைப்பொருள் வியாபாரிகள், ஆபாச நடனம் ஆடும் பெண்கள் உள்ளிட்டவர்களே சூழ்ந்து இருந்தார்கள் என்று அவர் தனது நினைவுக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.
குற்றப் பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சொகுசு ஹோட்டல்கள், ஹண்டர் பைடன் தனது நினைவுக் குறிப்பில், அவர் மாதக்கணக்கில் போதைப்பொருள் மற்றும் மது அருந்திய இடங்களாக அடையாளப்படுத்திய அதே ஹோட்டல்களுடன் ஒத்துப் போவதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
ஹண்டர் பைடன் இந்த சொகுசு ஹோட்டல்களில் எதிலும் வியாபாரம் செய்ததாக எழுதவில்லை அல்லது எந்தவொரு வணிக நோக்கத்திற்காகவும் அவரைச் சந்தித்த நபர்களை அவர் குறிப்பிடவில்லை என்று வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
