
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் நடந்த விபத்தால், உள்ளே சிக்கியுள்ள 40 இந்திய தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சிறப்பு டிரில் இயந்திரம் ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது.
முன்னர், மற்றொரு இயந்திரத்தைப் பயன்படுத்தி இடிபாடுகளின் ஊடாகத் துளையிடும் முயற்சி தோல்வியடைந்ததால், இந்த இயந்திரம் புதன்கிழமை (நவம்பர் 15) தில்லியில் இருந்து வரவழைக்கப்பட்டது.
இந்த இயந்திரம் இடிபாடுகளில் துளையிட்டு ஒரு பாதையை உருவாக்கும், அதில் ஒரு குழாய் நுழைக்கப்படும், அதற்குள் ஊர்ந்து சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் வெளியே வர முடியும்.
கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நிலச்சரிவு காரணமாக இடிந்து விழுந்ததால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) அதிகாலை முதல் அவர்கள் உள்ளே சிக்கியுள்ளனர்.
சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, அதன் வாயிலிலிருந்து 200மீ தொலைவில், தொழிலாளர்கள் உள்ளே இருந்தபோது இடிந்து விழுந்தது. இடிபாடுகள் மூடியதால் தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் தடைபட்டது.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜனை குழாய்கள் மூலம் வழங்கி, வாக்கி-டாக்கிகள் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், அவர்களில் சிலர் தலைவலி, பதட்டம் மற்றும் குமட்டல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சில செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், பிபிசியிடம் பேசிய அதிகாரிகள், இதை மறுத்துள்ளனர்.
தொழிலாளர்களை மீட்பதற்கான திட்டம் என்ன?
கடந்த புதன்கிழமை, மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான பூபேந்திர சிங், இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளிடம், உள்ளே சிக்கியுள்ளவர்களுக்குத் தகவல் தொடர்புக்கு உதவவும், உணவு மற்றும் ஆக்ஸிஜனை வழங்கவும் இடிபாடுகள் வழியாக மற்றொரு 12மிமீ குழாய் நுழைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மீட்புப் பணிகளுக்கான புதிய இயந்திரம் மூன்று பகுதிகளாக ராணுவ விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.
ஒரு மணிநேரத்திற்கு 5மீ வரை தோண்டும் அளவுக்கு இந்த இயந்திரம் சக்தி வாய்ந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்போதைய திட்டத்தின்படி, 900மிமீ விட்டம் கொண்ட உலோகக் குழாயைப் பொருத்தும் அளவுக்கு அகலமான துளையிடுவார்கள். அதன் பிறகு தொழிலாளர்கள் குழாய் வழியாக ஊர்ந்து சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வரலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர, மீட்பு அதிகாரிகள் பூமியைத் தோண்டி இடிபாடுகளை அகற்ற முயன்றனர். ஆனால் இந்த முயற்சிகளும் தோல்வியடைந்தன.
சிக்கலாகும் மீட்புப் பணிகள்
ஆனால் உண்மையில் இது கடினமான செயல்முறை.
புதன்கிழமை பயன்படுத்தப்பட்ட மற்றொரு இயந்திரம் போதுமான வேகத்தில் குப்பைகள் மற்றும் இடிபாடுகளைத் தோண்டுவதில் தோல்வியடைந்தது.
இடிபாடுகள் அகற்றப்பட்ட பகுதிகளில் தளர்வான மண் மற்றும் பாறைகள் விழுந்துகொண்டே இருப்பதால், செயல்பாடு தடைபடுகிறது. அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால், பணி மேலும் கடினமாகிவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
துளையிடும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர, மீட்பு அதிகாரிகள் பூமியைத் தோண்டி இடிபாடுகளை அகற்ற முயன்றனர், ஆனால் இந்த முயற்சிகளும் தோல்வியடைந்தன.
பிபிசியிடம் பேசிய அதிகாரிகள், குப்பைகளை அகற்றும் பணி எவ்வளவு காலம் எடுக்கும் என்பது பற்றி ஊகிக்க விரும்பவில்லை என்றனர். ஆனால் வியாழன் மாலைக்குள் ‘ஒரு முன்னேறத்தை’ எதிர்பார்ப்பதாகக் கூறினர்.

இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த தரம் சிங்கின் மகன் விஜய் குமார் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளார்.
தொழிலாளர்களைக் குறித்து அதிகரிக்கும் கவலைகள்
நேரம் செல்லச் செல்ல, தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலை அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே அதிகரித்து வருகிறது.
சில தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிபிசியிடம் தங்கள் உறவினர்களின் உடல்நிலை குறித்து கவலையடைவதாகத் தெரிவித்தனர்.
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தனது மகன் விஜய் குமார், விரைவில் மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்திப்பதாக இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த தரம் சிங் கூறினார். சுரங்கப்பாதை இடிந்து விழுந்த செய்தி கிடைத்தவுடன் அவர் இமாச்சலத்தில் தனது வீட்டிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்ததாகக் கூறினார்.
அப்போதிருந்து, அவர் தனது மகன் சுரங்கப்பாதையில் இருந்து வெளிவருவதைப் பார்க்க வெளியே காத்திருந்தார்.
“நான் இங்கு வந்தபோது, அதிகாரிகள் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தும் குழாய் மூலம் என் மகனிடம் பேசினேன்,” என்று தரம் சிங் கூறினார். அவர் தனது மகனின் குரலைக் கேட்டவுடன் நிம்மதியடைந்தார்.
“நான் அவனிடம், ‘மகனே, அப்பா உனக்காக வெளியே கத்திருக்கிறேன். நீ சீக்கிரம் வெளியே வந்துவிடுவாய். கவலைப்படாதே’ எனக் கூறினேன்,” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
“என் மகன் என்னை ஆற்றுப்படுத்த முயன்றான், எல்லாம் சரியாகிவிடும் என்று என்னிடம் சொன்னான்,” என்று அவர் மேலும் கூறினார்.
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை, அம்மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற இந்துப் புனிதத் தலங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தும் மத்திய அரசின் நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பல இமாலய சிகரங்கள் மற்றும் பனிப்பாறைகள் அமைந்துள்ள உத்தராகண்ட் மாநிலம், இந்துக்களின் புனிதத் தலங்களைக் கொண்டுள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
