தென் கொரியா: பெண்கள் ஒரு குழந்தை கூடப் பெற்றுக்கொள்ளத் தயங்குவது ஏன்? என்ன பிரச்னை?

தென் கொரியா: பெண்கள் ஒரு குழந்தை கூடப் பெற்றுக்கொள்ளத் தயங்குவது ஏன்? என்ன பிரச்னை?

தென் கொரியா

பட மூலாதாரம், JEAN CHUNG

படக்குறிப்பு,

மின்சங் (வலது) ஒரே பாலின துணையைக் கொண்டுள்ளார். அவர் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்புகிறார் – ஆனால் கருத்தரிக்க விந்தணு தானத்தைப் பயன்படுத்த முடியாது.

அது ஒரு மழைக்கால செவ்வாய்க்கிழமையின் மதியம். யெஜின் தனது அபார்ட்மெண்டில் தன் தோழிகளுக்காக மதிய உணவை சமைத்துக் கொண்டிருந்தார். தெனொரியத் தலைநகர் சியோலின் புறநகர் பகுதியில் அவர் தனியாக வசித்து வருகிறார்.

சாப்பிடும் போது அவர்களில் ஒருவர் தனது மொபைலில் கார்ட்டூன் டைனோசரின் கேலி சித்திரத்தை காட்டினார். “கவனமாக இருங்கள். நீங்களும் எங்களைப் போல் உங்களை அழிய விட்டுவிடாதீர்கள்,” என்று டைனோசர் அதில் சொல்கிறது.

எல்லா பெண்களும் இதைப்பார்த்து சிரிக்கிறார்கள்.

“இது வேடிக்கைக இருக்கிறது. ஆனால் அது உண்மையும் கூட. ஏனென்றால் நமது அழிவை நாமே ஏற்படுத்திக்கொள்ளப்போகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று 30 வயதான தொலைக்காட்சி தயாரிப்பாளரான யெஜின் கூறுகிறார்.

அவரோ அல்லது அவருடைய தோழிகளோ குழந்தை பெற்றுகொள்வதாக இல்லை. குழந்தை இல்லாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும், பெண்கள் சமூகத்தின் ஒரு பகுதியாக அவர்கள் உள்ளனர். இதுபோன்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தென் கொரியா உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும் அந்த விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த வீழ்ச்சி அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது.

2023-இல் இது மேலும் 8% குறைந்து 0.72 ஆக ஆகியுள்ளது என்று புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையை இது குறிக்கிறது. மக்கள்தொகை நிலையாக இருக்க அந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும்.

இந்த நிலை தொடர்ந்தால் 2100-ஆம் ஆண்டுக்குள் தென் கொரியாவின் மக்கள்தொகை பாதியாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தென் கொரியா

பட மூலாதாரம், JEAN CHUNG

‘இது ஒரு தேசிய அவசரநிலை’

உலக அளவில் வளர்ந்த நாடுகளில் பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகின்றன. ஆனால் எதுவுமே தென் கொரியா போல இவ்வளவு மோசமாக இல்லை.

தென்கொரியா குறித்த கணிப்புகள் கவலை அளிப்பதாக உள்ளன.

50 ஆண்டுகளில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை பாதியாகக் குறையும். நாட்டின் கட்டாய ராணுவ சேவையில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள் 58% சுருங்குவார்கள். மேலும் மக்கள்தொகையில் சுமார் பாதி பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள்.

இது நாட்டின் பொருளாதாரம், ஓய்வூதிய நிதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் மோசமானதாக இருக்கும். எனவேதான் அரசியல்வாதிகள் இதை ‘தேசிய அவசரநிலை’ என்று அறிவித்துள்ளனர்.

ஏறக்குறைய 20 ஆண்டுகளாக அடுத்தடுத்து வந்த அரசுகள் இந்தப் பிரச்சனையை சமாளிக்கப் பெருமளவு தொகையை செலவழித்துள்ளன. சரியாகச் சொல்வதானால் 379.8 டிரில்லியன் KRW (286 பில்லியன் டாலர்கள்; 226 பில்லியன் பவுண்டுகள்).

குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு ரொக்கப்பணம், மாதாந்திர பணச்சலுகை, மானிய விலையில் வீடுகள் மற்றும் இலவச டாக்சிகள் என்று பல வசதிகள் அளிக்கப்படுகின்றன.

திருமணமானவர்களுக்கு மட்டும் மருத்துவமனை கட்டணங்கள் மற்றும் செயற்கைமுறையில் கருவுறல் IVF சிகிச்சைக்கான பணமும் வழங்கப்படுகிறது.

ஆனால் இத்தகைய நிதிச்சலுகைகள் பலனளிக்கவில்லை. எனவே தென்கிழக்கு ஆசியாவிலிருந்து ஆயாக்களை பணியமர்த்துவது, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்திற்குக் குறைவாக சம்பளம் வழங்குவது மற்றும் 30 வயதிற்குள் மூன்று குழந்தைகள் இருந்தால் ராணுவ சேவையில் இருந்து ஆண்களுக்கு விலக்கு அளிப்பது போன்ற ‘ஆக்கப்பூர்வமான’ தீர்வுகளை அரசியல்வாதிகள் தேட இது வழிவகுத்தது.

ஆச்சரியப்படத்தக்க வகையில், இளைஞர்கள் குறிப்பாக பெண்களுக்கு என்ன தேவை என்பதை கொள்கை வகுப்பாளர்கள் கேட்கவில்லை என்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு வருடமாக நாங்கள் நாடு முழுவதும் பயணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள பெண்களிடம் பேசினோம்.

யெஜின் தனது 20-களில் தனியாக வாழ முடிவு செய்தபோது அவர் சமூக விதிமுறைகளை மீறினார். கொரியாவில், தனியாக வாழ்வது என்பது பெரும்பாலும் ஒருவரின் வாழ்க்கையில் ஒரு தற்காலிக கட்டமாக கருதப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டாம், குழந்தைகள் வேண்டாம் என்று முடிவு செய்தார்.

“கொரியாவில் டேட்டிங் செய்யக்கூடிய ஒருவரை கண்டுபிடிப்பது கடினம். அதாவது எல்லா வேலைகளையும், குழந்தை பராமரிப்பையும் நம்மோடு சமமாகப் பகிர்ந்துகொள்பவர்,” என்று அவர் என்னிடம் கூறினார். “தனியாக இருக்கும் ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொண்டாலும் சமூகம் அவர்களை மரியாதையுடன் பார்ப்பதில்லை,” என்றார் அவர்.

2022-இல் தென் கொரியாவில் 2% பிறப்புகள் மட்டுமே திருமணத்திற்கு வெளியே நிகழ்ந்தன.

தென் கொரியா

பட மூலாதாரம், JEAN CHUNG

படக்குறிப்பு,

தனது வாழ்க்கை முறை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஏற்றதாக இல்லை என்கிறார் ஸ்டெல்லா.

மிக அதிகமன வேலைப்பளு

அதற்கு பதிலாக யெஜின் தொலைக்காட்சியில் தனது வேலை மீது கவனம் செலுத்த முடிவு செய்தார். “ஒரு குழந்தையை வளர்க்க போதுமான நேரத்தை இந்த வேலை அனுமதிக்காது,” என்று அவர் குறிப்பிட்டார். கொரியாவில் வேலை நேரம் மிகவும் நீளமானது.

யெஜின் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான வேலையில் (9-5 க்கு சமமான கொரிய வேலை) உள்ளார். ஆனால் வழக்கமாக இரவு 8 மணி வரை அலுவலகத்தை விட்டு வெளியே போக முடிவதில்லை என்றும், அதற்குமேல் ஓவர்டைமும் செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார். வீட்டிற்கு வந்தவுடன் வீட்டை சுத்தம் செய்ய அல்லது படுக்கைக்கு செல்வதற்கு முன் உடற்பயிற்சி செய்ய மட்டுமே அவருக்கு நேரம் கிடைக்கும்.

“நான் என் வேலையை விரும்புகிறேன், அது எனக்கு மிகவும் நிறைவைத் தருகிறது,” என்று அவர் கூறுகிறார். “ஆனால் கொரியாவில் வேலை செய்வது கடினமானது, நீங்கள் நிரந்தரமான வேலை சக்கரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தனது வேலையில் சிறந்து விளங்க ஓய்வு நேரத்தில் படிக்க வேண்டிய அழுத்தமும் இருப்பதாக யெஜின் கூறுகிறார். ”நீங்கள் தொடர்ந்து சுய முன்னேற்றத்திற்காக உழைக்கவில்லை என்றால் நீங்கள் பின்தங்கிவிடுவீர்கள், தோல்வி அடைந்தவராக மாறிவிடுவீர்கள் என்ற மனநிலை கொரியர்களுக்கு உள்ளது. இந்த பயம் எங்களை இரண்டு மடங்கு கடினமாக உழைக்க வைக்கிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“சில நேரங்களில் வார இறுதி நாட்களில் நான் குளுக்கோஸ் ட்ரிப்ஸ் (drips) எடுத்துக்கொள்வேன். திங்கட்கிழமை மீண்டும் வேலைக்குச் செல்வதற்கு போதுமான சக்தியை அது தருகிறது,” என்றார் அவர்.

மிகவும் சாதாரணமான வார இறுதி நடவடிக்கை போல அதை அவர் வர்ணிக்கிறார்.

நான் பேசிய ஒவ்வொரு பெண்ணும் வெளியிட்ட அதே அச்சத்தை யெஜினும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். குழந்தையை பெறுவதற்காக பணியிடத்திலிருந்து விடுப்பில் சென்றால் தங்களால் ஒருபோதும் வேலைக்குத் திரும்ப முடியாது என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது.

“எங்களுக்கு குழந்தைகள் பிறந்தால் நாங்கள் எங்கள் வேலையை விட்டுவிட வேண்டும் என்று நிறுவனங்களிலிருந்து மறைமுக அழுத்தம் உள்ளது,” என்று அவர் கூறுகிறார். தனது சகோதரிக்கும், தனக்குப் பிடித்த இரண்டு செய்தி வழங்குநர்களுக்கும் நடந்ததை அவர் கண்கூடாக பார்த்திருக்கிறார்.

தென் கொரியா

பட மூலாதாரம், JEAN CHUNG

படக்குறிப்பு,

வீட்டின் விலை பலருக்கு குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது

‘வேலையா குழந்தையா’ என்பதே கேள்வி

மகப்பேறு விடுப்பு எடுத்த பிறகு தங்கள் வேலையை விட்டுவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட அல்லது பதவி உயர்வுக்காக பரிசீலிக்கப்படாத பல பெண்களை தான் பார்த்திருப்பதாக மனிதவளப்பிரிவில் பணிபுரியும் 28 வயதான பெண் ஒருவர் கூறினார். தனக்கு குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்ய அதுவே காரணம் என்றார் அவர்.

தங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதல் எட்டு ஆண்டுகளில் ஒரு வருட விடுப்புக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் 2022-ஆம் ஆண்டில் 70% புதிய தாய்மார்களுடன் ஒப்பிடுகையில், 7% புதிய தந்தைகள் மட்டுமே தங்கள் விடுப்பின் ஒரு பகுதியை பயன்படுத்தியுள்ளனர்.

கொரியப் பெண்கள் பொதுவாக உயர்ந்த கல்வியறிவு பெற்றவர்கள். ஆயினும் இப்போதும் அந்த நாட்டில் பாலின ஊதிய இடைவெளி மிக அதிகமாக உள்ளது. கூடவே ஆண்களுடன் ஒப்பிடும்போது வேலையில்லாத பெண்களின் எண்ணிக்கை சராசரி விகிதத்தை விட அதிகமாக உள்ளது.

‘வேலை செய் அல்லது குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்’ என்ற இரு வழிகளே பெண்களுக்கு இருப்பதை இது காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து அதிகம் பேர் வேலையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

நான் ஸ்டெல்லா ஷினை ஒரு ஆஃப்டர் ஸ்கூல் கிளப்பில் சந்தித்தேன். அங்கு அவர் ஐந்து வயது குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கிறார்.

“குழந்தைகளைப் பாருங்கள். அவர்கள் எத்தனை அழகாக இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார். ஆனால் 39 வயதான ஸ்டெல்லாவுக்கு குழந்தைகள் இல்லை. இது தாங்களாக எடுத்த முடிவு அல்ல என்று அவர் தெரிவித்தார்.

அவருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. ஸ்டெல்லாவும் அவரது கணவரும் ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் இருவருமே வேலையில் மும்முரமாக இருந்ததால் காலம் கடந்து விட்டது. தனது வாழ்க்கை முறை அதை ‘சாத்தியமற்றதாக’ ஆக்கிவிட்டது என்பதை இப்போது அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

“முதல் இரண்டு வருடங்கள் தங்கள் குழந்தையை முழுநேரமாகப் பார்த்துக்கொள்ள தாய்மார்கள் வேலையை விட வேண்டும். இது என்னை மிகவும் மனச்சோர்வடையச் செய்திருக்கும்,” என்று அவர் கூறினார். “நான் என் தொழிலை நேசிக்கிறேன். என்னை நான் கவனித்துக்கொள்கிறேன்,” என்றார் அவர்.

தென் கொரியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கே-பாப் நடனம்

கட்டுக்கடங்காத செலவுகள்

ஸ்டெல்லா தனது ஓய்வு நேரத்தில் வயதில் மூத்த பெண்களின் குழுவுடன் கே-பாப் நடன வகுப்புகளில் கலந்து கொள்கிறார்.

குழந்தை பிறந்தவுடன் பெண்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் வேலைக்கு விடுப்பு எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக காணப்படுகிறது. ‘பெற்றோர் விடுப்பை’ தன் கணவருடன் அவரால் பகிர்ந்து கொள்ள முடியாதா என்று நான் ஸ்டெல்லாவிடம் கேட்டபோது அதை ஒரு பார்வையால் அவர் நிராகரித்தார்.

“நான் அவரை பாத்திரம் கழுவுமாறு சொல்லும்போது அதையும் அவர் அவ்வப்போது செய்ய மாட்டார். என்னால் அவரை நம்ப முடியாது,” என்று அவர் கூறினார்.

தான் வேலையை விட்டுவிட விரும்பினாலும், அல்லது குடும்பம், வேலை என்று இரண்டையுமே சமாளிக்க நினைத்தாலும் அதைச் செய்யமுடியாது. ஏனென்றால் வீட்டின் விலை மிக அதிகமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலைநகர் சியோலில் அல்லது அதைச் சுற்றியே வாழ்கின்றனர். இங்குதான் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் உள்ளன. இது அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வளங்கள் மீது பெரும் அழுத்தத்தை உருவாக்குகிறது. ஸ்டெல்லாவும் அவரது கணவரும் தலைநகரிலிருந்து மெல்ல மெல்ல அண்டை மாகாணங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆயினும் கூட அவர்களால் சொந்த வீடு வாங்க முடியவில்லை.

சியோலின் பிறப்பு விகிதம் 0.55 ஆக குறைந்துள்ளது, இது நாட்டிலேயே மிகக் குறைவான விகிதமாகும்.

பின்னர் கல்விச் செலவு உள்ளது. கட்டுப்படியாகாத வீட்டு விலை உலகம் முழுவதும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. ஆயினும் இந்தச்செலவு தென் கொரியாவில் மிக மோசமாக உள்ளது..

நான்கு வயதிலிருந்தே குழந்தைகள் கட்டணம் அதிகமுள்ள கூடுதல் பாடத்திட்ட வகுப்புகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். கணிதம், ஆங்கிலம், இசை மற்றும் டேக்வாண்டோ போன்ற வகுப்புகளுக்கு அவர்கள் செல்கின்றனர்.

இந்த நடைமுறை மிகவும் பரவலாக உள்ளது. இதைச் செய்யாமல் இருப்பது குழந்தையை தோல்வியடையச் செய்வதாகக் கருதப்படுகிறது, அதிக போட்டி நிறைந்த கொரியாவில் இது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகும். இதன் மூலம் உலகிலேயே அதிக செலவு செய்து குழந்தையை வளர்க்கும் நாடு என்ற பெருமையை அந்த நாடு பெற்றுள்ளது.

2% பெற்றோர்கள் மட்டுமே தனிப்பட்ட கற்பித்தலுக்கு பணம் செலுத்தவில்லை என்று 2022-ஆம் ஆண்டின் ஆய்வு கூறுகிறது. அதே நேரத்தில் 94% பேர் இதை நிதிச் சுமை என்று கூறியுள்ளனர்.

இது போன்ற பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரியும் ஸ்டெல்லாவால் இந்த சுமையை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு குழந்தைக்கு ஒரு மாதத்திற்கு 700 பவுண்டுகள் (சுமார் 73,000 இந்திய ரூபாய்) வரை பெற்றோர்கள் செலவழிக்கின்றனர். அவர்களில் பலருக்கு இது கட்டுப்படியாகாத ஒன்று.

“ஆனால் இந்த வகுப்புகள் இல்லாமல், குழந்தைகள் பின்தங்குகிறார்கள்,” என்று அவர் கூறினார். “நான் குழந்தைகளைச் சுற்றி இருக்கும்போது எனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் விளைவுகள் எனக்கு தெரியும்,” என்றார் அவர்.

இந்த அதிகப்படியான தனிப்பட்ட கற்பிப்பு செலவு சிலருக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியா

பட மூலாதாரம், JEAN CHUNG

படக்குறிப்பு,

கொரிய குழந்தைகள் நான்கு வயதிலிருந்தே பாடநெறிக்கு வெளியே கூடுதல் வகுப்புகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்

‘மின்ஜி’ தனது அனுபவத்தைப் பகிர விரும்பினார். ஆனால் தனக்குக் குழந்தைகள் பிறக்காது என்பதை பெற்றோர் தெரிந்துகொள்வதை அவர் விரும்பவில்லை. “அவர்கள் மிகவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைவார்கள்,” என்று அவர் கூறினார். அவர் தனது கணவருடன் கடற்கரை நகரமான புசானில் வசிக்கிறார்.

தனது குழந்தைப் பருவமும், 20-களின் பருவமும் மகிழ்ச்சியற்றதாக இருந்தது என்று மிஞ்சி கூறினார்.

“நான் என் முழு வாழ்க்கையையும் படிப்பதில் செலவழித்தேன்,” என்று அவர் சொன்னார். முதலில் ஒரு நல்ல பல்கலைக்கழகத்தில் சேரவும், பின்னர் அரசு ஊழியர் தேர்வுக்காகவும், 28 வயதில் முதல் வேலையைப் பெறவும் படித்ததாக அவர் குறிப்பிட்டார்.

“ஒரு கலைஞராக வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால் நான் வெறுத்த மற்றும் எனக்கு வராத கணிதத்தை படிக்க இரவு வெகுநேரம் வரை வகுப்பறைகளில் கழித்த என் குழந்தைப் பருவம் எனக்கு நினைவுக்கு வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“நான் முடிவில்லாமல் போட்டியிட வேண்டியிருந்தது. என் கனவுகளை அடைவதற்காக அல்ல. ஆனால் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்காக,” என்று அவர் கூறினார்.

32 வயதாகும் மிஞ்சி இப்போதுதான் சுதந்திரமாக உணர்கிறார். பயணம் செய்வதில் விருப்பமுள்ள அவர் இப்போது டைவ் செய்ய கற்றுக்கொள்கிறார்.

ஆனால் தான் அனுபவித்த அதே போட்டித் துயரத்தில் ஒரு குழந்தையைத்தள்ள அவர் விரும்பவில்லை.

“கொரியா குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய இடம் அல்ல,” என்று அவர் சொல்லி முடித்தார். அவரது கணவர் குழந்தை வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் இது பற்றி தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டனர். ஆனால் இறுதியில் அவர் மிஞ்சியின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். எப்போதாவது தனது இதயம் குழந்தைக்காக ஆசைப்படுகிறது என்பதை ஒப்புக்கொண்ட அவர் அது ஏன் முடியாது என்பதை அப்போது நினைவுபடுத்திக்கொள்கிறேன் என்று சொன்னார்.

தென் கொரியா

பட மூலாதாரம், JEAN CHUNG

படக்குறிப்பு,

உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு விகிதம் உள்ள நாடு தென் கொரியா. இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது

மன உளைச்சல் ஏற்படுத்தும் சமூக நிகழ்வு

டேஜான் நகரில் வசிக்கும் ஜங்யோன் சுன், தான் ‘ஒற்றை பெற்றோர் திருமண பந்தத்தில்’ இருப்பதாகக் கூறுகிறார். தனது ஏழு வயது மகளையும் நான்கு வயது மகனையும் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு அருகில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்குச் சென்று, கணவர் வேலையில் இருந்து திரும்பும் வரை பல மணிநேரங்களை கழிக்கிறார். அவரது கணவர் இரவு நேரம் கழித்தே வேலையிலிருந்து வீடு திரும்புவார்.

“குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்தபோது நான் ஒரு பெரிய முடிவை எடுப்பதாக உணரவில்லை. விரைவாக வேலைக்குத் திரும்ப முடியும் என்று நினைத்தேன்,” என்று அவர் கூறினார்.

ஆனால் விரைவிலேயே சமூக மற்றும் நிதி அழுத்தங்கள் ஏற்பட்டன. ஒற்றை ஆளாக குழந்தைகளின் எல்லா வேலைகளையும்

செய்யவேண்டி வந்தது. தொழிற்சங்கவாதியான அவரது கணவர், குழந்தை பராமரிப்பு அல்லது வீட்டு வேலைகளில் உதவவில்லை.

“எனக்கு கோபம் வந்தது. நன்றாகப் படித்தவள் நான். ஆணும் பெண்ணும் சமம் என்று கற்பிக்கப்பட்டவள் நான். எனவே இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்றார்.

இதுவே மிகப்பெரிய பிரச்சனை.

தென் கொரியா

பட மூலாதாரம், JEAN CHUNG

படக்குறிப்பு,

அவர்கள் இருக்கும் ‘துயரகரமான சூழ்நிலை’ காரணமாக பெண்களுக்கு தாய்மையின் அற்புதம் மறுக்கப்படுவது வருத்தமளிப்பதாக ஜங்யோன் கூறுகிறார்.

கடந்த 50 ஆண்டுகளில் கொரியாவின் பொருளாதாரம் மிகவேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இது பெண்களை உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு இட்டுச்சென்றது. மேலும் அவர்களின் லட்சியங்களை விரிவுபடுத்தியது. ஆனால் மனைவி மற்றும் தாயின் பாத்திரங்கள் கிட்டத்தட்ட அதே வேகத்தில் வளரவில்லை.

விரக்தியடைந்த ஜங்யோன் மற்ற தாய்மார்களைக் கவனிக்கத் தொடங்கினார். “தன் குழந்தையை வளர்க்கும் என் தோழி மன உளைச்சலில் இருக்கிறார். எதிர் வீட்டில் உள்ள என் தோழிக்கும் மன உளைச்சல். இது ஒரு சமூக நிகழ்வு என்று நான் நினைக்க ஆரம்பித்தேன்,” என்று அவர் சொன்னார்.

தென் கொரியா

பட மூலாதாரம், JEAN CHUNG

படக்குறிப்பு,

தான் ஒற்றை பெற்றோர் திருமண பந்தத்தில் இருப்பதாக கூறுகிறார் ஜங்யோன்.

தனது அனுபவங்களை சித்திரங்களாக வரைந்து அவர் அதை ஆன்லைனில் வெளியிட ஆரம்பித்தார். “என்னுடைய கதைகளைக் கொட்டித்தீர்த்தேன்,” என்று அவர் சொன்னார். அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஏனெனில் நாடு முழுவதும் உள்ள பெண்களால் அதனோடு தங்களை தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. ஜங்யோன் இதுவரை மூன்று காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

கோபம் மற்றும் வருத்தத்தின் நிலையை தான் கடந்துவிட்டதாக அவர் கூறுகிறார். “குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள யதார்த்தம் மற்றும் தாய்மார்களிடமிருந்து எவ்வளவு எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் பற்றி முன்னரே எனக்குத்தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்று அவர் கூறினார். “இப்போது பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றால், அதைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு துணிச்சல் இருக்கிறது,” என்றார் அவர்.

பெண்களுக்கு தாய்மையின் அற்புதம் மறுக்கப்படுவதாக அவர் கூறுகிறார். ஏனெனில் அவர்கள் “துக்ககரமான சூழ்நிலையில் தள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தன்னிடம் தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மிஞ்சி கூறுகிறார். “தேர்வு செய்யும் நிலையில் இருக்கும் முதல் தலைமுறை நாங்கள். இது கொடுக்கப்படுவதற்கு முன்பு நாங்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே ஆகவேண்டி இருந்தது. இப்போது எங்களால் முடியும் என்பதால் நாங்கள் குழந்தை வேண்டாம் என்று தெரிவு செய்தோம்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

‘என்னால் முடிந்தால் 10 குழந்தைகளை பெற்றுக்கொள்வேன்’

இப்போது யெஜினின் அப்பார்மெண்டிற்கு திரும்புவோம். மதிய உணவுக்குப் பிறகு அவளுடைய தோழிகள் அவளுடைய புத்தகங்கள் மற்றும் பிற பொருட்களின் விலை பற்றி பேசுகிறார்கள்.

கொரியாவில் தனது வாழ்க்கையால் சோர்வடைந்த யெஜின் நியூசிலாந்து செல்ல முடிவு செய்துள்ளார். தன்னை இங்கு வாழ யாரும் வற்புறுத்தவில்லை என்பதை ஒரு நாள் காலையில் அவர் திடீரென்று உணர்ந்தார்.

பாலினச் சமத்துவத்தில் எந்தெந்த நாடுகள் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளன என்பதை அவர் ஆய்வு செய்தார். நியூசிலாந்து தெளிவான வெற்றியாளராக உருவெடுத்தது. “அங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஊதியம் கிடைக்கிறது. ஆகவே அங்கு செல்ல முடிவுசெய்தேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

என்ன நடந்தால் அவர்கள் மனம் மாறும் என்று யெஜினிடமும் அவளுடைய தோழிகளிடமும் நான் கேட்டேன்.

மின்சுங்கின் பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. “நான் குழந்தைக பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். என்னால் முடிந்தால் 10 குழந்தை பெற்றுக்கொள்வேன்,” என்று அவர் சொன்னார். அவரை தடுப்பது எது என்று நான் கேட்டேன். 27 வயதான தான் ‘இரு பாலினத்தினர் மீதும் ஈர்ப்புள்ளவர் (bisexual)’ என்றும் தன்னுடைய பார்ட்னர் பெண்கள் மீது மட்டுமே ஈர்ப்புள்ளவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தென் கொரியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டவிரோதமானது. மேலும் திருமணமாகாத பெண்கள் பொதுவாக விந்து தானம் செய்பவர்கள் மூலம் கருத்தரிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

“ஒரு நாள் இது மாறும். நான் விரும்பும் நபரை திருமணம் செய்துகொண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

கொரியாவில் குறைந்துவரும் மக்கள்தொகை நிலைமை உள்ளபோதிலும் தாயாக விரும்பும் சில பெண்கள் அதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால் அரசியல்வாதிகள் நெருக்கடியின் ஆழத்தையும் சிக்கலையும் மெதுவாக புரிந்துகொள்வார்கள் என்று தோன்றுகிறது.

இந்த மாதம், தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் யோல், பிரச்சனையிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சிகள் ‘பலன் அளிக்கவில்லை’ என்றும், தென் கொரியாவில் ‘தேவைக்கு அதிகமான மற்றும் அளவுக்கு அதிகமான போட்டி’ இருப்பதையும் ஒப்புக்கொண்டார்.

குறைந்த பிறப்பு விகிதத்தை தனது அரசு இப்போது ஒரு ‘கட்டமைப்பு பிரச்சனையாக’ கருதும் என்று அவர் கூறினார். இருப்பினும் இது எவ்வாறு கொள்கையாக உருமாறும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த மூன்று மாதங்களாக நியூசிலாந்திலில் வசித்துவரும் யெஜினுடன் இந்த மாத தொடக்கத்தில் பேசினேன்.

தனது புதிய வாழ்க்கை, நண்பர்கள் மற்றும் ஒரு ‘பப்’பின் சமையலறையில் வேலை ஆகியவை பற்றி அவர் ஆர்வமாக விவரித்தார். “என் வேலை மற்றும் வாழ்க்கையின் சமநிலை மிகவும் சிறப்பாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

“பணியிடத்தில் நான் மிகவும் மதிக்கப்படுவதாக உணர்கிறேன். மேலும் இங்கு சமூகம் உங்களை ஆராய்வதில்ல்லை,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“தாய்நாட்டிற்கு திரும்பவேண்டாம் என்று அது என்னை நினைக்கத்தூண்டுகிறது,” என்கிறார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *