பட மூலாதாரம், Getty Images
திரைப்பட தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், ஸ்ரீதேவியின் மரணம் ‘இயற்கையானது’ அல்ல என்று கூறியுள்ளார்
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இன்னும் பலருக்கும் மர்மமானதாகவே உள்ளது.
ஆனால் அவரது கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான போனி கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதைப்பற்றி ஒரு ரகசியத்தைத் தெரிவித்திருக்கிறார்.
2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஸ்ரீதேவி காலமானபோது அவர், ‘குளியல் தொட்டியில் மூழ்கியதால்’ இறந்ததாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறியிருந்தனர். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர், அவர் தனது ஹோட்டல் அறையின் குளியலறையில் மூழ்கி இறந்ததாகத் தகவல் வந்தது.
ஆனால் சமீபத்தில் அவரது கணவர் போனி கபூர் ஒரு நேர்காணலில், மருத்துவர்கள் அவர் நீரில் மூழ்கியதில் கவனம் செலுத்தினர், என்றும், ஸ்ரீதேவியின் உணவு பழக்கமும், அவர் உப்பு உட்கொள்வதைத் தவிர்த்ததுமே அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
‘ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை மரணம் அல்ல’
‘தி நியூ இந்தியன்’ என்ற யூடியூப் சேனலின் பத்திரிக்கையாளர் ரோஹன் துவாவுடனான உரையாடலில், திரைப்பட தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், ஸ்ரீதேவியின் மரணம் ‘இயற்கையானது’ அல்ல என்றும், அது ஒரு ‘விபத்து’ என்றும், ‘ஸ்ரீதேவியை அவர் கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தன்னைத் தொந்தரவு செய்ததாகவும்’ கூறியிருக்கிறார்
இதுகுறித்து போனி கபூர் கூறுகையில், “இது இயற்கை மரணம் அல்ல. விபத்து. மரணத்திற்குப் பிறகு நடந்த விசாரணையின் போது சுமார் 24 முதல் 48 மணிநேரம் இதைப் பற்றியே பேசியதால் அதன்பிறகு இதைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்தேன். உண்மையில், அதிகாரிகள் என்னிடம் கூறுகையில், இந்திய ஊடகங்களின் அழுத்தத்தின் பெயரில் தான் அவர்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்று கூறினர். பிறகு ஸ்ரீதேவி கொல்லப்படவில்லை என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்,” என்று கூறியிருக்கிறார்.
அதிகாரிகள் தன்னை உண்மை கண்டறியும் சோதனைக்கும் உட்படுத்தியதாகக் கூறுகிறார் போனி கபூர்.
பட மூலாதாரம், SOCIAL MEDIA
ஸ்ரீதேவியிடம் கணவர் போனி கபூர் மேலும் கூறுகையில், அவரிடம் தான் உணவில் உப்பை விட வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகக் கூறினார்
‘ஸ்ரீதேவிக்கு அடிக்கடி பசியெடுத்தது’
போனி கபூர் மேலும் கூறுகையில், தான் ஸ்ரீதேவியிடம் உணவில் உப்பை விட வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகக் கூறினார். அவர் குளியலறையில் கீழே விழுந்ததால் அவரது முன்பல் ஒன்று உடைந்தது என்றும், அதற்குச் செயற்கை கேப் ஒன்று வைத்திருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
அவர் கூறுகையில், ஸ்ரீதேவி திரையில் தனது உருவத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுபவராக இருந்ததாச் சொன்னார். அவர் இறப்பதற்கு முன்பு டயட்டில் இருந்ததாகவும் கூறினார்.
“அவருக்கு அடிக்கடி பசியெடுத்தது. அவர் எப்போதும் திரையில் அழகாக இருக்க விரும்பினார்,” என்றார்.
திருமணத்திற்குப் பிறகு பல சந்தர்ப்பங்களில், ஸ்ரீதேவிக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், அவருக்கு ‘குறைந்த ரத்த அழுத்தம்’ இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாகவும் போனி கபூர் கூறினார்.
போனி கபூர் மேலும் கூறுகையில், “உப்பு உடலில் தண்ணீரைத் தக்கவைத்து, உங்களை குண்டாகக் காட்டுவதாக பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருந்தது. உப்பை முழுவதுமாக கைவிட வேண்டாம் என்று நான் சொன்னேன். சாலட் சாப்பிடும் போது அதில் சிறிது உப்பு தூவி சாப்பிடச் சொன்னேன். ஆனால் அவர் அப்போது தான் நடித்துக் கொண்டிருந்த படங்களுக்காக அப்படிச் செய்வதாகச் சொன்னார்,” என்றார்.
இதுபற்றி பிபிசி உருதுவிடம் மருத்துவர் நாசர் நசீம் பேசியபோது, உடலில் உப்பு இல்லாததாலோ, சோடியம் சத்து குறைவதாலோ தலைசுற்றல் மயக்கம் போன்ற சம்பவங்கள் ஏற்படும், ஆனால் அது மரணத்தை ஏற்படுத்தும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, என்றார்.
பட மூலாதாரம், Getty Images
இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில், 1976இல் வெளியான, ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் உள்ளிட்டோர் நடித்த, ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை
ஸ்ரீதேவி கடந்த 1963-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தின் மீனம்பட்டியில் பிறந்தார்.
நான்கு வயதில் ‘துணைவன்’ திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில், 1976இல் வெளியான, ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் உள்ளிட்டோர் நடித்த, ‘மூன்று முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர் அதன் பின்னர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, இந்தியிலும் 1970களின் பிற்பாதியிலும், 1980களிலும் முன்னணி வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வந்தார்.
இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை 1996இல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி, 1997இல் வெளியான ‘ஜூடாய்’ எனும் இந்தி திரைப்படத்தில் நடித்த பின்னர் நடிப்பதிலிருந்து நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டார்.
பதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் நடித்து, இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ திரைப்படம் குறிப்பிடத்தகுந்த வெற்றி பெற்றது. 2017இல் வெளியான ‘மம்’ எனும் இந்தி திரைப்படத்தில் அவர் கடைசியாக நடித்தார். அது அவரது 300வது திரைப்படமாகும்.
பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற ஸ்ரீதேவி, 2013இல் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
