
பட மூலாதாரம், Getty Images
புனே நகரில் நடந்து வரும் உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி அதிரடியாகத் தொடங்கி, பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
ஒரு கட்டத்தில் 97 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயனித்த வங்கதேசம், 134 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதிரடித் தொடக்கம்
புனே ஆடுகளம் பேட்டர்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் நன்கு ஒத்துழைக்கக் கூடியது. இங்கு பலமுறை இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது, சேஸிங்கும் செய்துள்ளது.
இதனால் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் ஷாண்டோ யோசிக்காமல் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
அதற்கு ஏற்றாற்போல் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், தான்சித் ஹசன் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். சிராஜ் பந்துவீச்சை தொடக்கத்திலிருந்தே இருவரும் வெளுத்து வாங்கினர். பும்ரா பந்துவீச்சில் தான்சித் ஹசன் சிக்ஸர் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு காயம்

பட மூலாதாரம், Getty Images
இதையடுத்து, ஹர்திக் பாண்டியா பந்துவீச அழைக்கப்பட்டார். முதல் பந்தில் ரன் ஏதும் வழங்காத பாண்டியா அடுத்த இரு பந்துகளில் இரு பவுண்டரிகளை வழங்கினார்.
இதில் லிட்டன் தாஸ் அடித்த பந்தை காலால் தடுக்க முயன்று ஹர்திக் பாண்டியா காலை மடக்கி கீழே விழுந்தார். இதில் அவரது கனுக்காலில் காயம் ஏற்பட்டது, அவரால் நடக்க முடியவில்லை.
பந்துவீசிய விராட் கோலி
அதன்பிறகு உடலியக்கவல்லுநர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பாண்டியாவால் பந்துவீச முடியவில்லை.
இதையடுத்து, அவர் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார். பாண்டியா ஓவரின் கடைசி 3 பந்துகளை விராட் கோலி வீசினார்.
வள்ளல் ஷர்துல் தாக்கூர்
ஷர்துல் தாக்கூர் பந்துவீச வந்ததில் இருந்து வங்கதேச பேட்டர்களுக்கு கொண்டாட்டம் தொடங்கியது. வங்கதேச பேட்டர்கள் லிட்டன் தாஸ், ஹசன் இருவரும் ஷாட்களை அடிக்கும் வகையில் ஓவர்பிட்சாகவும், ஷார்ட் பிட்சாகவும் தாக்கூர் பந்து வீசினார்.
இதனால் தாக்கூர் ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரி உள்ளிட்ட 16 ரன்களை வெளுத்தனர். அதன்பின் ஷர்துல் தாக்கூர் ஓவரை குறிவைத்து வங்கதேச பேட்டர்கள் ரன்களை குவித்தனர்.
வங்கதேச அணி 10 ஓவர்களில் 63 ரன்களை குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 53 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய தான்சித் 41 பந்துகளில் உலகக்கோப்பையில் முதல் அரைசதம் எட்டினார்.
திருப்புமுனை பந்துவீச்சாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா பந்துவீச அழைக்கப்பட்ட பிறகு ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. குல்தீப் பந்துவீச்சுக்கு திணறிய வங்கதேச பேட்டர்கள், விக்கெட்டை இழந்தனர்.
குல்தீப் வீசிய 15வது ஓவரில் தான்சித் ஹசன்(51) ஸ்வீப்ஷாட் ஆட முற்பட்டு கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். 93 ரன்களுக்கு வங்கதேசம் முதல் விக்கெட்டை இழந்தது.
அதன்பிறகு, வங்கதேசத்தின் விக்கெட் சரிவு தொடங்கியது. ஜடேஜா பந்துவீச்சில் கேப்டன் ஷாண்டோ(8) ரன்களில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். சிராஜ் வீசிய 25வது ஓவரில் மெஹதி ஹசன் இடதுபுறம் சென்ற பந்தைத் தட்டிவிட, அதை கே.எல்.ராகுல் சூப்பர் டைவ் செய்து கேட்ச் பிடித்தார். இதனால் மெஹதி ஹசன் 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும் லிட்டன் தாஸ் அபாரமாக அரைசதம் அடித்தார். அடுத்த சிறிது நேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் லாங் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முற்பட்ட லிட்டன் தாஸ்(66) ரன்னில் சுப்மான் கில்லிடம் விக்கெட்டை இழந்தார். ஹிர்தாய் 16 ரன்கள் சேர்த்த நிலையில் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
விக்கெட் சரிவு

பட மூலாதாரம், Getty Images
விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் வரை பயணித்த வங்கதேசம், அடுத்த 13 ஓவர்களில் 44 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை மளமளவென இழந்து தடுமாறியது.
வங்கதேசம் அணி தொடக்கத்தில் பயணித்த வேகத்தைக் கணித்தபோது, 270 ரன்களுக்கு மேல் எடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டது. ஆனால், விக்கெட் இழந்தவுடன் ரன் குவிக்கும் வேகம் திடீரெனச் சரிந்தது.
1,000 ரன்கள் சாதனை
முஷ்பிகுர் ரஹிம், மகமதுல்லா இருவரும் நிதானமாக பேட் செய்து வருகிறார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இருந்து ஆடி வரும் முஷ்பிகுர் ரஹிம் இதுவரை ஐந்து உலகக்கோப்பைப் போட்டிகளில் 33 ஆட்டங்களில் விளையாடி 1000 ரன்களை எட்டியுள்ளார்.
வங்கதேசத்தின அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் சகிப் அல் ஹசன் 32 ஆட்டங்கள் ஆடியுள்ளார். ஆனால் முஷ்பிகுர் ரஹிம் 33 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
வங்கதேசம் அணி 42.1 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. 10 ஓவர்களில் 63 ரன்களை சேர்த்த வங்கதேசம், அடுத்த 32 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது. நிதானமாக பேட் செய்து வந்த முஷ்பிகுர் ரஹிம், 38 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்