
மதுரையில் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் கிரானைட் குவாரிகள் திறக்கப்படவுள்ளன.
மதுரையில் சகாயம் ஐ.ஏ.எஸ். அளித்த ஆய்வறிக்கை எதிரொலியாக மூடப்பட்ட கிரானைட் குவாரிகள் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயங்கவுள்ளன. தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுங்கத்துறையால் கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக ஆண்டுக்கு பெரும் வருவாயை அரசு ஈட்டுகிறது. இந்த கிரானைட் குவாரிகள் அரசு அனுமதித்த அளவைவிட அதிக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன என புகார்களும் எழுந்து கொண்டேதான் இருக்கிறது.
11 ஆண்டுகளுக்கு பின் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியின் சில கிராமங்களில் 20 ஆண்டுகளுக்கு வண்ண கிரானைட் குவாரிகள் அமைக்க குத்தகை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.
இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். மேலூர் சேக்கிப்பட்டி, அய்யாபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். கிராம மக்கள் கிரானைட் குவாரிகள் அமைப்பதை எதிர்ப்பது ஏன்?
கிரானைட் குவாரி வந்தால் மதுரைக்கு என்ன நிகழும்? மதுரையில் கிரானைட் குவாரிகள் மூடப்பட்ட காரணம் என்ன?
தமிழ்நாடு முழுவதிலும் 1000க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இவற்றில் பல குவாரிகள் தற்போது தமிழ்நாடு அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி ( EC- Environmental Clearance) பெறாததால் இயங்க முடியாத சூழலில் இருந்து வருகின்றன.
கிரானைட் ஆலைகளில், குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கிரானைட் மூலமாகவும் அந்த கிரானைட் கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலமாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்து வந்தது.

2012-ம் ஆண்டு 180 கிரானைட் குவாரிகள் மூடப்பட்டன.
கிரானைட் குவாரிகளால் 1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பா?
2014 ஆம் ஆண்டு டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரணை செய்ய விசாரணை அதிகாரியாக சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை நியமனம் செய்தது.
அதனைத் தொடர்ந்து மதுரை மேலூர் பகுதிகளில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து அதில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்து 1,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கிரானைட் குவாரிகள் அரசு விதிகளை மீறி கிரானைட் கற்கள் வெட்டி எடுத்துள்ளன, பல குவாரிகளில் விதிமுறைகளை மீறி அரசு பட்டா நிலங்களில் கிரானைட் கற்கள் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த கிரானைட் குவாரிகளால் தமிழ்நாடு அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள 180 கிரானைட் குவாரிகள் மொத்தமாக மூடப்பட்டன.

விதிகள் மீறி செயல்பட்ட குவாரிகளால் அரசுக்கு ஒருலட்சம் கோடி இழப்பு என சகாயம் ஐ ஏ எஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.
மதுரையில் 20 ஆண்டுகள் கிரானைட் குவாரி அமைக்க டெண்டர்
மதுரை மாவட்டத்தில் 11 ஆண்டுகளாக குவாரிகள் செயல்படாமல் இருந்தன. இந்நிலையில் கடந்த அக்டோபர் 11ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட சேக்கிபட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆகிய பகுதிகளில் உள்ள புறம் போக்கு நிலங்களில் வண்ண கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அமைப்பதற்கு டெண்டர்கள் கோரப்பட்டன.
பொது ஏலம் வரும் அக்டோபர் 31 ம் தேதி நடத்தப்படும், அதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கிரானைட் குவாரி டெண்டர் குறித்த அரசாணை அக்டோபர் 3ம் தேதியே அரசிதழில் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கிரானைட் குவாரிகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
கிரானைட் குவாரிகள் டெண்டர் தொடர்பான அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, மேலூர் சேக்கிபட்டி, அய்யாபட்டி, திருசுனை மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களது கிராமத்தில் கிரானைட் குவாரி அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
சேக்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், “இங்கு ஐந்து கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பகுதி அமைந்து உள்ளது.
அந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள மக்கள், விளை நிலங்கள், ஆடு மாடுகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இப்போதே எங்கள் கிராமத்தில் போர்வெல் போட்டால் 900 அடிக்கு கீழே செல்லும் நிலை உள்ளது. குவாரி அமைந்தால் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குடிநீரே இல்லாமல் போய்விடும்” என்று அச்சம் தெரிவித்தார்.

கிரானைட் குவாரி அமைத்தால் நீராதாரம் பாதிக்கப்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கிரானைட் குவாரி அமைக்க 2021-ல் அரசாணை
“மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே அரசாணை வெளியிடப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் நேரம் என்பதால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன்பு மீண்டும் இந்த அரசாணை புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
அதன்படி குடியிருப்பு பகுதிகள் இருக்கக் கூடிய பகுதியில் இருந்து 300 மீட்டர், சாலைகளிலிருந்து 60 மீட்டர் தொலைவு, காப்புக் காடுகள் இருந்தால் 1 கிலோ மீட்டரைத் தாண்டி கிரானைட் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்படும்”, என அதிகாரி ஒருவர் கூறினார்.

மக்கள் கிரானைட் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு தொழில் மந்தமாக இருக்கும் என குவாரி உரிமையாளர் சோனை கூறுகிறார்.
மதுரை மேலூர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக கிரானைட் குவாரி நடத்தி வந்த உரிமையாளர் சோனை, அரசின் இந்த முடிவு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றார். “ கிரானைட் குவாரி துவங்குவதால் அந்தப் பகுதியில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் அரசுக்கு வருவாய் அதிகாரிக்கும் வணிக வரி மற்றும் சீனியரேச் தொகை கிடைக்கும்.” எ ன்றார் அவர்.
மேலும், “இப்போது குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கினால் எங்களுக்கு உடனடியாக லாபம் கிடைக்காது, மக்கள் கடந்த 10 ஆண்டுகளில் கிரானைட்டை தாண்டி செராமிக் போன்ற பல்வேறு பொருட்களை பயன்படுத்த மக்கள் பழகி விட்டனர்” என்றார் அவர்.
கிரானைட் குவாரி இயற்கை வளத்தை அழிக்கும் – சகாயம்
பட மூலாதாரம், Facebook
குவாரிகள் மீண்டும் அமைந்தால் மலைகளுக்கும், விவசாயத்துக்கும் பாதிப்பு என முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் கூறுகிறார்.
மதுரை மேலூர் வட்டத்தின் சில பகுதிகளில் கிரானைட் குவாரிகள் நடத்த அரசு ஆணை வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மீண்டும் மதுரை மேலூர் பகுதியில் கிரானைட் குவாரிகள் துவங்கினால் அங்கு இருக்கும் பல்லுயிர் வளம் முற்றிலும் சீர்கெட்டுப் போகும் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
“மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள மலைகள் புவியியல் வல்லுனர்களின் ஆய்வின்படி 250 கோடி ஆண்டுகள் பழமையானவை. ஒரு பொருளை நம்மால் உருவாக்க முடியாத போது அதை அழிப்பதற்கான உரிமை நமக்கு இல்லை. விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு என கூறுகின்றனர். ஆனால், இன்று கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி தந்து வேளாண்மை தொழிலை அழிப்பதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.
வேளாண் மக்களை காப்பது மட்டுமே அரசு கடமையாக கொண்டு இருக்க வேண்டும். மலைகள், நீர் ஆதாரங்கள், விவசாய மெய்ச்சல் நிலம், கிராமிய பொருளாதாரம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.
தற்போது கிரானைட் குவாரி சட்டத்திற்கு உட்பட்டு துவங்கி இருப்பதாக கூறலாம். ஆனால் அது சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே செயல்படாது. இதனை கைவிட்டு அங்கு வாழக் கூடிய விவசாய ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அந்த மலைகளை விட்டு வைக்க வேண்டும் என்பதே எனது கருத்து”, என்றார்.

பொதுமக்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா பி.பி.சி தமிழுடன் பேசிய போது,
“கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கோரிக்கைகளை வழங்கியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் மூலம் விசாரணை செய்யக் கூறப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னரே கிரானைட் குவாரி அமைப்பது தொடர்பாக கூற முடியும்”, என தெரிவித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
