பட மூலாதாரம், Ravi Teja/Twitter
வாழ்க்கை வரலாறுகளை ஒரு வெற்றிகரமான கதைக்களமாக திரையுலகம் காலங்காலமாக அங்கீகரித்து வருகிறது. நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள் எனப் பல வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வந்துள்ளன.
அவையனைத்தும் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறாவிட்டாலும் வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு என ஒரு மோகம் இருந்துகொண்டே இருப்பது புரிகிறது. தற்போது மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் வந்துள்ளது.
ஆனால், இந்த முறை ஒரு திருடனின் கதையைச் சொல்ல முயன்றுள்ளார்கள். அவர்தான் ‘டைகர் நாகேஸ்வர ராவ்.’
படத்தின் கதை என்ன?
ஆந்திராவின் ராபின்ஹூட் என்று இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள டைகர் நாகேஸ்வர ராவ் குறித்துப் பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளன. அவையெல்லாம் ஒரு கமர்ஷியல் படத்திற்குப் போதுமானதாக இருக்கும் என்று ரவி தேஜா நினைத்திருக்க வேண்டும்.
அதன் காரணமாகத் தற்போது டைகர் நாகேஸ்வர ராவின் கதையை வெள்ளித்திரையில் பார்க்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது. சரி, ‘டைகர்’ எப்படி இருக்கிறது?
ஸ்டூவர்ட்புரத்தில் 1970களில் ஒருவரது பெயர் சத்தமாகக் கேட்டது. அவர்தான் டைகர் நாகேஸ்வர ராவ். பணம் இருப்பவர்களிடம் திருடி, இல்லாதவர்களுக்குக் கொடுப்பதே அவரது வாழ்க்கை முறை.
அதிகமாகச் சொல்வதும் செய்வதும் அவருடைய பொழுதுபோக்கு. காவல்துறைக்கு சவாலாக மாறிய நாகேஸ்வர ராவ், ஏன் திருடனாக மாறினார்? ஸ்டூவர்ட்புரம் மக்களுக்கு அவர் என்ன செய்தார்?
இதுதான் படத்தின் கதை.
சினிமா சுதந்திரம் அதிகம்
பட மூலாதாரம், RAVITEJA_2628
ஸ்டூவர்ட்புரம் திருடன் டைகர் நாகேஸ்வர ராவ் பற்றி முழுமையான தகவல்கள் இல்லை. செய்தித்தாள்களில் வந்த கட்டுரைகளும் வதந்திகளும் மட்டுமே உள்ளன.
அதனால்தான் இயக்குநர் வம்சியும் ‘சில கதைகள் மற்றும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்ட கதை’ என்று முன்பே அறிவித்தார். இந்தக் கதையில் உண்மை இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் என்பதை அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்டார் என்பதே இதன் அர்த்தம்.
என்னதான் வாழ்க்கை வரலாறு குறித்த படமாக இருந்தாலும் சினிமா சுதந்திரம் தவிர்க்க முடியாதது. டைகர் நாகேஸ்வர ராவில் இந்தச் சுதந்திரம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது.
வரலாற்றில் திருடன் என்று சொல்லப்படும் மனிதனை ராபின்ஹூட்டாகவும், சராசரி கமர்ஷியல் ஹீரோவாகவும் காட்ட முயலும் படம் இது.
டைகர் நாகேஸ்வர ராவ் டெல்லியில் ஒரு அதிகாரியால் (அனுபம்கேர்) இழுக்கப்படுவதில் இருந்து படம் தொடங்குகிறது. வழக்கமாக நம் படங்களில் ஹீரோவை சீரியஸாக அறிமுகப்படுத்துவது போலவே ஸ்டூவர்ட்புரம் திருடனும் வெள்ளித்திரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
ஒரு ரயில் கொள்ளை சுமார் 10 நிமிடங்கள் இருந்தால், அதில் த்ரில்லைவிட விஷுவல் எஃபெக்ட்களில் கவனம் செலுத்தப்படும். கப்பல் கட்டும் தளத்தில் தங்கம் எடுக்கப்படும் காட்சியும் முழுக்க கமர்ஷியல் பார்வையில் உள்ளது.
‘இந்த நாற்காலி வேண்டும்’ என்று கூறி, படிப்படியாக திருடர் கும்பலுக்குத் தலைவனாக மாறுகிறான் ஒரு சாமானியன். இதுவெல்லாம் ‘புஷ்பா’, ‘கேஜிஎஃப்’ படங்களின் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பாகத் தெரிகிறது என்றால், அது படம் பார்ப்பவர்களின் தவறு அல்ல.
பிரதமரின் வீட்டில் திருட்டு
பட மூலாதாரம், Ravi Teja/Twitter
ஸ்டூவர்ட்புரம் திருடனைப் பற்றிப் பலர் பலவிதமான கதைகளைப் படித்திருப்பார்கள். வதந்திகளைக் கேட்டிருப்பார்கள். அப்போது ‘டைகர் நாகேஸ்வர ராவ் இப்படிச் செய்தாரா? இப்படி தப்பித்தாரா?’ என்ற கேள்விகள் எழுந்திருக்கும். ஆனால், அந்தப் பரபரப்பும் தீவிரமும் திரையில் தெரியவில்லை.
டைகர் நாகேஸ்வர ராவ், இந்திரா காந்தியின் வீட்டிற்குச் சென்று திருடப் போவதாக போலீசாரிடம் முன்கூட்டியே கூறியதாக ஒரு வதந்தி பரவியது. அது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. அந்தக் காட்சியும் படத்தில் உள்ளது.
இது ராபின்ஹூட்டின் கதை. நாகேஸ்வர ராவ் ஒரு குண்டர். நல்ல மனிதர், சமூக சேவகர் என நினைத்து மக்கள் திரையரங்குகளுக்குச் செல்வதில்லை. அப்படியிருக்க, மூடி மறைக்கும் வேலையை இயக்குநர் செய்ய வேண்டியதில்லை.
முதல் காட்சியில் கண்ணனின் தந்தை பணத்திற்காகத் தலையை வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். கடைசி வரை இதே வேகத்தைப் பின்பற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
படத்தின் இடைப்பகுதியில், கிராமத்தின் முன்னேற்றத்துக்காக, குழந்தைகளின் படிப்புக்காக, வேலைக்காக டைகர் தன் உயிரை பணயம் வைப்பது என்று படம் வணிகப் பாதையில் செல்வதாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
பொறுமையைச் சோதிக்கும் இரண்டாம் பாதி
பட மூலாதாரம், ABHISHEK AGARWAL ARTS/YT
இரண்டாம் பாதி படம் பார்ப்பவர்களின் பொறுமையைச் சோதிக்கும். இயக்குநர் காட்சிகளை நகர்த்திக்கொண்டே போகிறார். ஆனால், அவை பார்வையாளர்களைத் தொட்டதா, கதையில் அவர்கள் மூழ்கினார்களா என்பது பற்றி இயக்குநர் யோசிக்கவில்லை.
டைகர் நாகேஸ்வர ராவுக்கு ஒரு காதல் கதையை உருவாக்கி, தேவையில்லாமல் நேரத்தை வீணடித்துள்ளார். இரண்டாம் பாதியில் மரதாலு கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி, அது போதாதென்று ஒரு பாலியல் தொழிலாளியையும் அறிமுகப்படுத்தினார்.
படத்தில் வரும் மூன்று நாயகிகளும் அவர்களின் கதாபாத்திரங்களில் படத்திற்கு கவர்ச்சியைச் சேர்க்கும் விதமாக நடித்திருந்தாலும், கதைக்கு எந்தப் பயனும் இல்லை.
வாழ்க்கை வரலாற்றை எடுக்கும்போது சினிமா சுதந்திரத்தைக் கையில் எடுப்பதில் தவறில்லை. ஆனால் உண்மையைப் புறக்கணிக்கக்கூடாது. காட்சிகளில் ரத்தம் வழிந்தோடுகிறது. எத்தனை தலைகள் உருண்டன என்பதைக் கணக்கிடுவது கடினம். அந்த வன்முறைகளைப் பார்க்கவே முடியாது.
ஹீரோ மீது தோட்டா மழை பொழிந்தாலும், அவருக்குக் கொடுக்கப்பட்ட வசனங்கள் அனைத்தையும் பொறுமையாக உட்கார்ந்து அவர் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், வாழ்க்கை வரலாற்றை எடுத்தாலும், கமர்ஷியல் சினிமா போக்கில் இருந்து நம்மால் வெளியே வர முடியாது எனத் தோன்றுகிறது.
படம் வெளியாவதற்கு முன்பே ஹேமலதா லவணத்தின் வேடம் கவனிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. அந்தக் கதாபாத்திரம் அறிமுகம் ஆவதற்குள் திரையரங்கில் இருப்பவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும். அதனால்தான், ஹேமலதா லவணத்தால் கூட தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
படத்தில் தெள்ளெனத் தெரிந்த பிழை
பட மூலாதாரம், RAVITEJA_2628
ரவி தேஜா வாழ்க்கை வரலாறு படங்களுக்குப் புதியவர். இரு பக்கங்களிலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ரவி தேஜா தனது அனுபவத்தால் தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.
இளமையாகத் தோன்றுவதற்கான அவரது மெனக்கெடல் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ரவி தேஜாவை அந்தத் தோற்றத்தில் பார்ப்பது கடினமாக இருந்தது.
ஹேமலதா லவணம் வேடத்தில் ரேணுதேசாய் நடிப்பதால், அந்தக் கதாபாத்திரம் எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தால் அப்படி எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களது கதாபாத்திரங்கள் மட்டுமே முக்கியம். அனுபம் கெர், நாசர் போன்ற கதாபாத்திரங்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.
இன்றைய டிரெண்டில், படம் முழுக்க ஹீரோவையே சுற்றினால் மட்டும் போதாது. ஹீரோவுக்காக சில கதாபாத்திரங்களை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் கதை நிற்காது. இந்தப் பிழை டைகர் நாகேஸ்வர ராவ் படத்திலும் தெள்ளெனத் தெரிந்தது.
சண்டைக் காட்சிகள் எப்படி இருந்தன?
பட மூலாதாரம், ABHISHEK AGARWAL ARTS/YT
ஒரு காலகட்டத்தின் கதைச் சூழலை திரையில் உருவாக்குவது எளிதான காரியமல்ல. கலைத்துறை, புரொடக்ஷன் டிசைன், ஒளிப்பதிவு இவையனைத்தும் 1970களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
ஆடை வடிவமைப்பும் அதற்கேற்ப கச்சிதமாக உள்ளது. ‘ரயில் சண்டை’ சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தக் காட்சிகளில் இயல்புத்தன்மை குறைகிறது.
சண்டைகளில் ரத்தம் சிந்துகிறது. சில இடங்களில் ஹீரோ ஆட்சேபனைக்குரிய வசனங்களைப் பேசுகிறார். சென்சாரில் அவை பீப் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த வார்த்தைகள் தெளிவாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன.
பாடல்களுக்கு அதிக ஸ்கோப் இல்லை. ‘ஏக் தம்’ பாடல் நன்றாக இருந்தது. மீதமுள்ள பாடல்களும் பின்னணி இசையும் மனதில் பதியவில்லை.
சில கதைகள் மற்றும் வதந்திகளின் அடிப்படையில் இந்தக் கதையை இயக்குநர் எழுதியுள்ளார். இருப்பினும், அவற்றில் வணிகக் கோணம் அதிகமாக உள்ளது. சினிமா சுதந்திரம் காரணமாக ஒரு வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும் உணர்வே அற்றுப் போய்விட்டது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
