பட மூலாதாரம், Getty Images
ஏய்டன் மார்க்ரம் 45வது ஓவரை வீசினார். ஆஸ்திரேலியா வெற்றிக்கான ரன்களை தேடிக் கொண்டிருந்தது. ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வலுவான பேட்டர்கள் இல்லை. களத்தில் நின்றது கேப்டன் பேட் கம்மின்ஸும் மிட்செல் ஸ்டார்க்கும்.
இருவருமே தடுப்பாட்டம் ஆடி ஒவ்வொரு ரன்னாய் சேர்த்துக் கொண்டிருந்தனர். மார்க்ரம் வீசிய 2வது பந்து அது. பேட் கம்மின்ஸ் பேட்டின் நுனியில் பட்டு ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் டி காக் வசம் சென்றது. ஆனால் அதை டி காக்கால் பிடிக்க முடியவில்லை.
ஆட்டத்தையே தலைகீழாக மாற்றும் வல்லமை அந்த கேட்சுக்கு இருந்தது. அதிர்ஷடம் தென்னாபிரிக்கா பக்கம் இல்லை என வர்ணணையாளர்கள் வர்ணித்தனர்.
ஏய்டன் மார்க்ரம் முகத்தில் சோகம் நிறைந்திருந்தது. கேப்டன் டெம்பா பவுமா நொந்து கொண்டார். ஒரேயொரு கேட்ச், ஆஸ்திரேலியாவை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும். அதைப் பயன்படுத்தி தென்னாப்பிரிக்கா தனது காயங்களுக்கு மருந்தளித்திருக்கும். ஆனால், அது நடக்கவில்லை.
தென்னாப்பிரிக்காவின் உலகக்கோப்பை கனவு கானல் நீராகிப் போனது. விக்கெட்டை விடாமல் போராடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸே, இறுதியில் வின்னிங் ஷாட் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.
20 ஆண்டுகளுக்குப்பின்…
பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று நடந்த பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 8வது முறையாக முன்னேறியுள்ளது. அரையிறுதியுடன் வெளியேறும் சோகம் ஐந்தாவது முறையாக தென் ஆப்பிரிக்காவை துரத்துகிறது..
1992ஆம் ஆண்டிலிருந்து…
ஆஸ்திரேலிய அணி 12 முறை உலகக்கோப்பையில் பங்கேற்று 8வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து அரையிறுதிப் போட்டியைக் கடக்க முடியவில்லை இறுதிப்போட்டி என்பது கனவாகவே இருந்து வருகிறது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.5 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
வரும் 19ஆம் தேதி ஆமதாபாத்தில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் 2 முறை சாம்பியன் இந்திய அணியை எதிர்கொள்கிறது 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலிய அணி. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலிய அணியும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
உலகக்கோப்பையின் தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 தோல்விகளைச் சந்தித்து ஆஸ்திரேலியா மோசமாகத் தொடங்கியது. ஆனால், மீண்டு வந்து அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி ஐந்து முறை சாம்பின் என்பதை நிரூபித்துள்ளது.
பந்துவீச்சில் நெருக்கடி
ஆடுகளம், காலநிலை, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை ஹேசல்வுட், ஸ்டார்க் பயன்படுத்திக்கொண்டு தொடக்கத்திலேயே தென் ஆப்பிரிக்க விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளித்தனர்.
அதன்பின் மில்லர், கிளாசன், கோட்ஸீ கூட்டணி ஓரளவுக்கு நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தபோதிலும் நிதானமாக பேட் செய்த மில்லர் சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்பிரிக்கா என்றாலே இதுதானா!
தென் ஆப்பிரிக்கா அணி என்றாலே, முக்கியமான போட்டிகளில், தருணங்களில் பதற்றப்படும், வாய்ப்பைத் தவறவிடும் என்ற கூற்றை இந்த முறையும் உண்மையாக்கியது.
ஆனால், போட்டியின் முடிவை தங்களுக்குச் சாதகமாக மாற்ற தென் ஆப்ரிக்கா போராடியது. ஆனால், 212 ரன்களை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்வது கடினமானது. இன்னும் கூடுதலாக 50 ரன்களை சேர்த்திருந்தால், ஆட்டம் தென் ஆப்ரிக்கா பக்கம் சாய்ந்திருக்கும்.
தோல்விக்கு காரணம் என்ன?
தென் ஆப்பிரிக்கா அணியில் ஷாம்ஸி, மகராஜ், கோட்ஸி, மார்க்ரம் ஆகிய 4 பேரும் மிகச் சிறப்பாகப் பந்துவீசி, ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனால், இவர்களின் பங்களிப்புக்கு வலுசேர்க்கப் போதுமான ஸ்கோர் இல்லை என்பது வருத்தமானது.
அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க அணி எதிர்பார்த்த அளவு ஃபீல்டிங்கை இதுபோன்ற முக்கியமான ஆட்டங்களில் வெளிப்படுத்தவில்லை. ஃபீல்டிங்கிற்கு பெயரெடுத்த தென் ஆப்பிரிக்க அணி இந்த ஆட்டத்தில் மட்டும் 4 கேட்சுகளை கோட்டைவிட்டது. கேப்டன் பவுமா, கிளாசன், டீகாக், ஷாம்ஸி என 4 முக்கிய கேட்சுகளை கோட்டைவிட்ட போதே ஆட்டம் கையைவிட்டுச் சென்றுவிட்டது.
அது மட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்க தோல்விக்கு கேப்டன் பவுமாவின் முடிவு முக்கியக் காரணம். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம், காலநிலை இருப்பது தெரிந்தும் டாஸ் வென்று ஏன் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன்
ஆனால், ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை அரையிறுதிப் போட்டி என்றவுடன் தங்களின் கடந்த கால அனுபவங்களை ஒன்று திரட்டி எவ்வாறெல்லாம் எதிரணிகளைக் குழப்புவது, சிதைப்பது, வீழ்த்துவது என்பதைத் திட்டமிட்டு செய்தனர். 213 ரன்களை எளிதாக சேஸிங் செய்ய நல்லத் தொடக்கம் தேவை என்பதை அறிந்து வார்னர், டிராவிஸ் ஹெட் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர்.
டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பணியை பாதி முடித்துவிட்டது. ஆட்டநாயகன் விருதும் டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. பந்துவீச்சிலும் தென் ஆப்பிரிக்காவின் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஹெட் ஏற்படுத்தினார்.
பந்துவீச்சில் துல்லியம்
பவுமா, டீகாக் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டார்க், ஹேசல்வுட் துல்லியமான லைன் லென்த்தில் பந்துவீசினர். இதனால் தென் ஆப்பிரிக்க பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியவில்லை.
அதிலும் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் பவுமா டக்-அவுட்டில் விக்கெட் கீப்பர் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வேன்டர் டூ சென் களமிறங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
பீல்டிங்கில் கலக்கிய வார்னர்
அடுத்தடுத்த ஓவர்களை ஹேசல்வுட், ஸ்டார்க் கட்டுப்கோப்பாகப் பந்து வீசியதால் டீகாக், டூசெனால் ரன் சேர்ப்பதே கடினமாக இருந்தது.
அது மட்டுமல்லாமல் தப்பித் தவறி ஏதாவது ஷாட்களை அடித்தாலும் அதையும் லாபுஷேன், வார்னர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் தடுத்து ஃபீல்டிங் செய்ததால் தென் ஆப்பிரிக்க அணியால் ரன்களை சேர்க்கவே முடியவில்லை.
ஒரு பவுண்டரி கூட இல்லை
ஆறு ஓவர்களாக தென் ஆப்பிரிக்க அணியிடம் இருந்து ஒரு பவுண்டரி கூட செல்லவில்லை. இதனால் டீ காக் பொறுமை இழந்தார். ஹேசல்வுட் வீசிய 6வது ஓவரில் சரியான லென்த்தில் வீசப்பட்ட பந்தை டீ காக் தூக்கி அடிக்க, கம்மின்ஸ் சிறிது தூரம் ஓடிச் சென்று கேட்ச் பிடித்தார். டீ காக் 14 பந்துகளைச் சந்தித்து 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மார்க்ரம் களமிறங்கி, டூசெனுடன் சேர்ந்தார்.
ஸ்டார்ஸ், ஹேசல்வுட் மிரட்டல்
மிட்செல் ஸ்டார்க் ஏற்கெனவே 5 ஓவர்கள் நிறைவு செய்துவிட்ட நிலையில் மீண்டும் ஓவரை வீச கேப்டன் கம்மின்ஸ் வாய்ப்பளித்தார். ஏனென்றால் ஆடுகளமும், காலநிலையும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், ஸ்டார்க்கிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
அதைச் சரியாகப் பயன்படுத்தி 11வது ஓவரை வீசிய ஸ்டார்க், 5வது பந்தில் மார்க்கரம்மை வெளியேற்றினார். பாயின்ட் திசையில் நின்றிருந்த வார்னரிடம் கேட்ச் கொடுத்து, மார்க்ரம் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
உலகக்கோப்பைத் தொடரில் 49 பந்துகளில் சதம் அடித்த மார்க்ரம், இன்றைய ஆட்டத்தில் ஒவ்வொரு ரன்னையும் சேர்க்க திணறி விக்கெட்டை இழந்தார். 12வது ஓவரை ஹேசல்வுட் வீச வந்தார்.
ஹேசல்வுட் தனது ஒவ்வொரு ஓவரையும் மிகத் துல்லியமான லைன் லென்த்தில் வீசியதால் அவரின் ஓவரில் ரன் சேர்க்கவே முடியவில்லை. இந்த ஓவரையும் ஹேசல்வுட் மிகத் துல்லியமாக வீசினார். 5வது பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து டூசென் 31 பந்துகள் சந்தித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி 28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருந்து.
பட மூலாதாரம், Getty Images
மில்லர், கிளாசன் பொறுமை
அடுத்து வந்த டேவிட் மில்லர், கிளாசனுடன் சேர்ந்தார். ரன் சேர்க்கத் திணறிய தென் ஆப்பிரி்க்க, கம்மின்ஸ் வீசிய 14வது ஓவரில் கிளாசன், மில்லர் தலா ஒரு பவுண்டரி அடித்தனர்.
கிளாசன், மில்லர் விக்கெட் இழந்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் நிதானமாக ஆடினர். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் சேர்த்திருந்து, அடுத்த 10 ஓவர்களில் மேலும் 2 விக்கெட்டுகளை இழந்து, 39 ரன்கள் சேர்த்திருந்தது.
ஸம்பா வீசிய 27-வது ஓவரில் கிளாசன் இரு சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை உயர்த்த முயன்றார். 28 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 100 ரன்களை எட்டியது. 30 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்திருந்தது.
அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்
டிராவிஸ் ஹெட் 31வது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் கிளாசன் பவுண்டரிகள் விளாசி 8 ரன்கள் சேர்த்தார். ஆனால் 4வது பந்தில் க்ளீன் போல்டாகி, கிளாசன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கிளாசன், மில்லர் இருவரும்தான் அணியை மீட்டெடுக்கும் வகையில் இந்த ஜோடி பிரிந்தது பெரிய பின்னடைவாகும்.
அடுத்து வந்த யான்சென் வந்த வேகத்தில் கால்காப்பில் வாங்கி டக்-அவுட்டில் வெளியேறினார். 31வது ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு119 ரன்கள் சேர்த்திருந்தது.
கோட்ஸீ, மில்லர் நிதானம்
ஆனால், ஸ்ட்ரைக்கே மில்லரிடம் வழங்கி கோட்ஸி பெரிதாக ஷாட்களை ஆடாமல் ஒதுங்கினார். ஆனால், மில்லர் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து ரன்களைச் சேர்த்தார். 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்து போராடியது.
கோட்ஸீ நிதானமாக பேட் செய்த நிலையில் கம்மின்ஸ் ஓவரில் விக்கெட்டை இழந்தார். கம்மின்ஸ் வீசிய 44வது ஓவரில் விக்கெட் கீப்பர் இங்கிலிஸிடம் கேட்ச் கொடுத்து கோட்ஸி 19 ரன்னில் பெவிலியின் திரும்பினார். 7வது விக்கெட்டுக்கு கோட்ஸீ, மில்லர் 53 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து களமிறங்கிய கேசவ் மகராஜ், மில்லருடன் சேர்ந்தார். 45 ஓவர்களுக்கு மேல் ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசி மில்லர் ரன் சேர்க்கப் போராடினார். டெய்லண்டரான கேசவ் மராஜை எளிதாக வெளியேற்றினார் ஸ்டார்க்.
பட மூலாதாரம், Getty Images
மில்லர் சாதனை சதம்
ஸ்டார்க் வீசிய 47வது ஓவரில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து மகராஜ் 4 ரன்னில் வெளியேறினார். கம்மின்ஸ் 48-வது வீசினார், முதல் பந்தில் சிக்ஸர் அடித்து, மில்லர் 115 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். தென் ஆப்பிரிக்க அணிக்காக நாக்-அவுட் போட்டிகளில் சதம் அடித்த முதல் பேட்டர் மில்லர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஆனால் சதம் அடித்து நீண்ட நேரம் மில்லர் நிலைக்கவில்லை. அதேஓவரில் டீப் ஸ்குயர் லெக் திசையில் தூக்கி அடித்த பந்த ஹெட் கேட்ச் பிடிக்க மில்லர் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரபாடா 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்ரிக்க அணி 49.4 ஓவர்களில் 212 ரன்களில் ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் கம்மின்ஸ், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளும், ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதிரடி ஆட்டம்
ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், வார்னர் ஆட்டத்தைத் தொடங்கினர்.
தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டு ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர்.
பட மூலாதாரம், Getty Images
விக்கெட் சரிவு
ஏழாவது ஓவரை மார்க்ரம் வீச வந்தார். முதல் பந்திலேயே வார்னர் க்ளீன் போல்டாகி 29 ரன்னில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு வார்னர், ஹெட்60 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து களமிறங்கிய மார்ஷ் ரன் ஏதும் சேர்க்காமல் வேன்டர் டூசெனிடம் கேட்ச் கொடுத்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தது. 14-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை எட்டியது.
டிராவிஸ் ஹெட் அரைசதம்
கோட்ஸீ வீசிய 12வது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஹாட்ரிக் பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நிறைவு செய்தார்.
மகராஜ் வீசிய 15-வது ஓவரில் க்ளீன் போல்டாகி 52 ரன்களில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித், ஹெட் 45 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியா திணறல்
நான்காவது விக்கெட்டுக்கு லாபுஷேன் களமிறங்கி, ஸ்மித்துடன் இணைந்தார். இருவரையும் பிரிக்க ஷாம்ஸி பந்துவீச அழைக்கப்பட்டார்.
ஷாம்ஸி, மகராஜ் பந்துவீச வந்தபின், ஆஸ்திரேலிய ரன்ரேட் சரிந்து, ஓவருக்கு 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.ஷாம்ஸி, மகராஜ் இருவரும் ஆஸ்திரேலிய ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
திருப்புமுனை ஷாம்ஸி, மகராஜ்
ஷாம்ஸி, மகராஜ் ஓவரில் ரன் சேர்க்க லாபுஷேன் தடுமாறினார். பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டு அது பவுண்டரியாகத்தான் முடிந்தது. ஷாம்ஸி வீசிய 22-வது ஓவரில் லாபுஷேன் கால்காப்பில் வாங்கி 18 ரன்களில் வெளியேறினார்.
5-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் களமிறங்கி ஸ்மித்துடன் சேர்ந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் மேக்ஸ்வெல் களமிறங்கி ஒரு ரன்னில் ஷாம்ஸி வீசிய 24-வது ஓவரில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
மேக்ஸ்வெல் சராசரி
இதுவரை தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக சர்வதேச அளவில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர்கூட அடித்தது இல்லை என்பது இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது.
ஆஸ்திரேலிய அணி 106 ரன்கள்வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், அடுத்த 31 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துட்ப தடுமாறியது.
ஆறாவது விக்கெட்டுக்கு இங்கிலிஸ் களமிறங்கி, ஸ்மித்துடன் சேர்ந்தார். மகாராஜ், ஷாம்ஸி இருவரும் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சவாலாக இருந்தனர். கோட்ஸி வீசிய 34வது ஓவரில் ஸ்மித் 30 ரன்னில் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் ஸ்டார்க், வந்து இங்கிலிஸுடன் இணைந்தார். தேவைப்படும் ரன்களைவிட, பந்துகள் அதிகம் இருந்ததால் ஆஸ்திரேலிய பேட்டர்கள் பந்துகளை வீணடிப்பதில் கவலைப்படவில்லை.
ஆனால், 39வது ஓவரை கோட்ஸி வீசினார். கோட்ஸி வீசிய 5வது பந்து யார்கராக வீசவே இங்கிலிஸ் கிளீன் போல்டாகி 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
போராட்டம் வீண்
பட மூலாதாரம், Getty Images
நாற்பது ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய வெற்றிக்கு 60 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
ஆஸ்திரேலிய வெற்றிக்கு கடைசி 48 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. மார்க்ரம் 43-வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் 3வது பந்தை கம்மினிஸ் லெக்திசையில் தூக்கி அடிக்க அது மில்லரிடம் கேட்சாகும் என எதிர்பார்க்கப்பட்டு முன்கூட்டியே தரையில் பட்டு வந்தது.
மார்க்ரம் 45வது ஓவரை வீசினார். 2வது பந்து கம்மின்ஸ் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது, ஆனால் அந்தப் பிடிக்க டீகாக் தவறிவிட்டார். ஆனால், ஸ்டார், கம்மின்ஸ் கடைசி வரை போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 215 ரன்களை எட்டி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கம்மின்ஸ்14ரன்களுடனும், ஸ்டார்க் 16 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
தென் ஆப்ரிக்கா தரப்பில் கோட்ஸி, ஷம்ஸி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
