பட மூலாதாரம், UGC
கீதாஞ்சலி
- எழுதியவர், சங்கர் வடிஷெட்டி
- பதவி, பிபிசி தெலுகு
-
ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த பெண் கீதாஞ்சலியின் மரணம் சர்ச்சையாக மாறியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டதால் அவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் கீதாஞ்சலியின் மரணத்தின் மீது அரசியல் சாயமும் பூசப்பட்டுள்ளது.
ஒய்எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்குதேசம் மற்றும் ஜனசேனா கட்சி ஊழியர்களின் சமூக வலைதள தொல்லையே கீதாஞ்சலி இறப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், இதுகுறித்து அந்த பெண்ணின் குடும்பம் மற்றும் காவல்துறை கூறுவது என்ன?

கீதாஞ்சலி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் சுறுசுறுப்பான பெண் என்று அவரது வீட்டார் தெரிவிக்கின்றனர்.
யார் இந்த கீதாஞ்சலி?
32 வயதான கீதாஞ்சலி, தெனாலியின் இஸ்லாம் பேட்டையைச் சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் பாலச்சந்தர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ஐந்தாம் வகுப்பும், இளைய மகள் யுகேஜியும் படித்து வருகின்றனர். இவர்களோடு கீதாஞ்சலியின் மாமியாரும் வாழ்ந்து வருகிறார்.
கீதாஞ்சலியின் கணவரும், தாய் மாமாவும் நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பாலச்சந்தர், ஒரு நாளைக்கு 600 ரூபாய் ஊதியம் பெறுவதாக தெரிவித்தார்.
கீதாஞ்சலி பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் சுறுசுறுப்பான பெண் என்று அவரது வீட்டார் தெரிவிக்கின்றனர்.
அவருக்கு இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் தெரியும் எனவும், அவரே குடும்ப விவகாரங்களை நிர்வகித்து வந்ததாகவும் தெரிவித்தார் அவரது கணவர்.
பட மூலாதாரம், MANA ANDHRA
கீதாஞ்சலி வைரலாக வீடியோ
ஒரே வீடியோவில் வைரலான கீதாஞ்சலி
கீதாஞ்சலியின் குடும்பம் இஸ்லாம்பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறது. இந்நிலையில் அரசால் ஏழைகளுக்கு வழங்கப்படும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டது.
மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற பயனாளிகளுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, தனது குடும்பம் சார்பாக மேடைக்கு சென்று வீட்டிற்கான ஆவணங்களை பெற்றுக்கொண்டார் கீதாஞ்சலி.
அப்போது தனியார் ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் புகழ்ந்து பேசினார். மேலும் நாங்கள் மீண்டும் ஜெகனுக்கே வாக்கு செலுத்துவோம் என்றும் கூறினார்.
அப்போது தொகுப்பாளர், “எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்தால்?” என்று கேட்டபோது,” யார் வந்தாலும் நாங்கள் ஜெகனை வெற்றி பெற செய்வோம்” என்று பதிலளித்தார் அவர்.
இந்த வீடியோ கடந்த மார்ச் 5ஆம் தேதி “நமது ஆந்திரா” என்ற யூட்யூப் சேனலில் வெளியானது. அதனை தொடர்ந்து ஆளும்கட்சியின் சமூக வலைதள அணி இந்த வீடியோவை வைரலாக்க முயற்சி செய்தது.
இதற்கு எதிர்வினையாக தெலுங்குதேசம் மற்றும் ஜன சேனா கட்சியை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை விமர்சனம் செய்யத் தொடங்கினர்.
ட்விட்டர், யூட்யூப் மற்றும் முகநூல் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் பலரும் அந்த பெண்ணை மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்துள்ளனர்.
இதன் காரணமாக மனரீதியாக உடைந்து போன கீதாஞ்சலி தற்கொலை செய்துக் கொண்டு இறந்ததாக காவல்துறை கூறியுள்ளது.

கீதாஞ்சலியின் மரணத்திற்கு காரணமாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கூட்டணி கட்சியின் தலைவர்கள் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
அரசியல் மோதல்
கீதாஞ்சலியின் மரணம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா ஆகிய கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
கீதாஞ்சலியின் மரணத்திற்கு காரணமாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கூட்டணி கட்சியின் தலைவர்கள் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
எதிர்க் கட்சிகளால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியவில்லை என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விமர்சித்து வரும் நிலையில், தெலுங்கு தேசம் கட்சி கீதாஞ்சலியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செயற்பாட்டாளர் என்று குற்றம் சாட்டியுள்ளது.
“இது தற்கொலை அல்ல, ரயில் விபத்து என்றே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இந்த மரணத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது” என்றும் தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில் தெலுங்கு தேசம் கட்சி “யார் கீதாஞ்சலியை தள்ளியது?” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக, ஒருவர் உயிரிழந்த வருத்தம் கூட இல்லாமல், போலியான வீடியோக்களை பரப்பி வருவதாக தெலுங்கு தேசம் கட்சியை விமர்சித்துள்ளது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி.
இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சமூக வலைதள போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கீதாஞ்சலியை கொன்றது யார்? மற்றும் கீதாஞ்சலிக்கு நீதி வேண்டும் ஆகிய ஹேஸ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் கீதாஞ்சலி மரணத்திற்கு இழப்பீடாக அவரது குடும்பத்திற்கு 20 லட்சம் நிதி உதவியை அறிவித்துள்ளது ஆந்திர அரசு.
பட மூலாதாரம், Getty Images
சமூக வலைத்தளங்கள்
சமூக வலைதள வீடியோக்கள்
கீதாஞ்சலியின் கணவர் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவருக்கு சமூக வலைத்தளங்கள் மீது ஆர்வமோ அல்லது அது குறித்த புரிதலோ பெரியளவில் கிடையாது. அவரது அம்மா அப்பாவுக்கும் அதே நிலைதான்.
கீதாஞ்சலிக்கு டிக்டாக் காலத்தில் இருந்தே சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவிடும் பழக்கம் இருந்துள்ளது. அதே போல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களையும் பதிவிடுவார். அவரது குழந்தையின் பெயரில் கூட ஒரு கணக்கு தொடங்கி, அதிலும் வீடியோக்கள் பகிரப்பட்டு வந்தது.
அவர் தனது கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரடு இணைந்து ரீல்ஸ் செய்து பகிர்ந்ததாகவும், அவரது சமையல், சிறு நடிப்பு மற்றும் நடனங்கள் ஆகிய வீடியோக்களுக்கு நேர்மறையான கருத்துக்கள் வந்ததால் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறுகின்றனர் அவரது குடும்ப உறுப்பினர்கள்.
பிபிசியிடம் பேசிய அவரது மாமியார் சத்யவதி, “இந்த வீடியோக்கள் மூலம் அவருக்கு உள்ளூரில் நல்ல வரவேற்பு கிடைத்தது. உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கூட அவரது வீடியோக்களுக்கு நேர்மறையான கருத்துக்களையே தெரிவித்தனர்” என்கிறார்.

கீதாஞ்சலியின் கணவர்
காயப்படுத்திய எதிர்மறை கருத்துக்கள்
இதுவரை சமூக வலைத்தளங்களில் நேர்மறை கருத்துக்களை மட்டுமே பெற்றுவந்த தனது மனைவி, முதல்முறையாக எதிர்மறை கருத்துக்களை பார்த்ததும் மனம் உடைந்து விட்டதாகக் கூறுகிறார் கீதாஞ்சலியின் கணவர் பாலச்சந்தர்.
காவல்துறையும், எதிர்மறை ட்ரோல்கள் காரணமாக கீதாஞ்சலி தீவிரமாக பாதிக்கப்பட்டதாகவே கூறுகிறது.
மேலும் பேசிய பாலசந்தர், இந்த எதிர்மறை கருத்துக்களால் கீதாஞ்சலி இரண்டு நாட்களாக சோகமான மனநிலையில் இருந்ததாக கூறினார்.
“நான் காலை மூன்று மணிக்கு எழுந்து கழிவறை செல்லும்போது கூட, அவர் தனது மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தார். ஏன் இந்த நேரத்தில் மொபைல் பார்த்துக் கொண்டிருக்கிறாய்? படுக்கைக்கு செல் என்று சொன்னவுடன் சரி என்று கூறிவிட்டு தூங்க சென்றுவிட்டார். பின்னர் 6 மணிக்கு எழுந்த அவர், எழுந்தவுடன் தனது மொபைலைதான் பார்த்தார். அதற்கு பிறகு சோகமாகவே காணப்பட்டார். அதை விட்டு விட சொல்லி நான் கூறினேன். ஆனால், அவர் எதுவுமே பதில் அளிக்கவில்லை” என்கிறார் பாலச்சந்தர்.
சம்பவ நாளன்று என்ன நடந்தது என்று விரிவாக நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார் அவர்.
“வீட்டில் நிலவிய பொருளாதார சூழல் காரணமாக அருகில் உள்ள தனியார் பள்ளியில் வேலைக்கு சேருவதற்காக மார்ச் 7ஆம் தேதி நேர்காணலுக்கு போக வேண்டியிருந்தது.”
“காலை 11 மணிக்கு நான் பள்ளிக்கு போக வேண்டியிருந்தது. அவருக்கு நான் போன் செய்தேன். தனக்கு உடம்பு சரியில்லை என்று என்னிடம் கூறினார். நானும் சரி என்று கூறினேன். 12 மணிக்கு அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. இனி எல்லாம் சரியாகி விடும் என்று அவர் சொன்னார்.”
“எனக்கு எதுவும் புரியவில்லை. அவர் பேசும்போது பின்னால் ரயில் ஓடும் சத்தம் கேட்டது. உடனே கீதாஞ்சலி போனை அணைத்து விட்டார். நான் மீண்டும் பல முறை அழைப்பு கொடுத்தும் அவர் எடுக்கவே இல்லை. சிறிது நேரம் கழித்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த பக்கம் பேசியவர்கள் ஏதோ பெங்காலியில் பேசினார்கள்.”
“விபத்து, ரயில், குண்டூர் என்ற வார்த்தைகள் மட்டும் எனக்கு புரிந்தது. பின் அங்கிருந்து அவரை தெனாலி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின்னர் சிகிச்சைக்காக குண்டூர் அழைத்து சென்றோம். ஆனால், எங்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை” என்றார்.
மார்ச் 11ஆம் தேதி கீதாஞ்சலியின் உயிர் பிரிந்தது.
முதலில், ரயில் விபத்து என முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்த காவல்துறை, பின்னர் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளையும் சேர்த்துக் கொண்டதாக கூறினார் பாலச்சந்தர்.
குற்ற எண். 65/2024 கீழ் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரித்து வருவதாக தெனாலி நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய குண்டூர் மாவட்ட எஸ்பி துஷார், “அந்த பெண் மிக மோசமாக ட்ரோல் செய்யப்பட்டுள்ளார். சிலர் தற்கொலைக்கு தூண்டும் வகையில் ட்ரோல் செய்துள்ளனர். இணையவழியில் பெண்களை துன்புறுத்துவதின் உச்சம் இந்த சம்பவம். இதை நாங்கள் மிக தீவிரமாக விசாரித்து வருகிறோம். ஏற்கனவே ஒரு சில சமூகவலைத்தள கணக்குகளை அடையாளம் கண்டுள்ளோம். மற்றவை போலி கணக்குகள். அவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திசை திருப்ப முயற்சி
கீதாஞ்சலியின் வழக்கை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தாமல், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் டி.பிரபாவதி, மூன்று நாட்களாக நடந்து வரும் நிகழ்வுகள் அனைத்துமே இந்த பிரச்னையை திசைதிருப்புவதாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், “இணைய வழியில் பெண்கள் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர். எத்தனையோ புகார்கள் கொடுத்தும் எந்த தீர்வும் இல்லை. கீதாஞ்சலி வழக்கில் குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும். காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் செயல்பாடுகள் வேறாக உள்ளது” என்கிறார் அவர்.
அதேபோல், இரண்டு கட்சிகளிலும் உள்ள பெண்களும் கூட இந்த ட்ரோலிங் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக இதை நிறுத்தும் நடவடிக்கையில் நாம் இறங்க வேண்டும் என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
குறிப்பு:
இணைய துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவிக்க தேசிய அளவிலான இணையதளம் உள்ளது.
www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலம் நேரடியாக காவல் நிலையத்திற்குச் செல்லாமலே புகார் அளிக்கலாம்.
மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம், சென்னை – 044 -2464000 (24 மணிநேர சேவை)
தமிழ்நாடு தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (224 மணிநேர சேவை)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019 (13 மொழிகளில் சேவைகள் கிடைக்கின்றன)
மனித நடத்தை மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம் – 9868396824, 9868396841, 011-22574820
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
