IND vs SA முகமது சிராஜ் மிரட்டல்: தென் ஆப்ரிக்கா வெறும் 23.2 ஓவர்களில் 55 ரன்களில் சுருண்டது எப்படி?

IND vs SA முகமது சிராஜ் மிரட்டல்: தென் ஆப்ரிக்கா வெறும் 23.2 ஓவர்களில் 55 ரன்களில் சுருண்டது எப்படி?

55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

கேப்டவுனில் தொடங்கியுள்ள இரண்டாவது டெஸ்டின் முதல் நாளிலேயே தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் 55 ரன்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது. அந்த அணியை ஆல் அவுட்டாக்க இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்கள் மற்றும் இரண்டு மணி நேரமே தேவைப்பட்டது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

முதல் டெஸ்டில் வெறும் மூன்றே நாட்களில் சரணடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டை சிறப்பாக தொடங்கியுள்ளது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தென் ஆப்ரிக்க அணி எடுத்த 55 ரன்களே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும்.

இந்திய அணியில் அஸ்வின் நீக்கம்

பாக்சிங் டே டெஸ்டில் தோற்றுவிட்ட இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் வெல்ல முனைப்பு காட்டுகிறது. இந்திய அணியில் முழு உடல் தகுதியை எட்டிவிட்ட ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பியுள்ளார். இதனால், முதல் டெஸ்டில் விளையாடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டார்.

தென் ஆப்ரிக்க அணியில் அறிமுக வீரராக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இடம் பெற்றார். லுங்கி நிகிடி அணிக்குத் திரும்பினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கேஷவ் மகராஜ் தனது 50-வது டெஸ்டை விளையாடுகிறார். தென் ஆப்ரிக்க அணி 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் விளையாடுகிறது.

இந்தியா அசத்தல் தொடக்கம்

கேப்டவுனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சிராஜ் ஜோடி புதிய பந்தில் கலக்கலாக பந்துவீசி தென் ஆப்ரிக்க வீரர்களை திணறடித்தது.

பும்ரா 142 கி.மீ. வேகத்தில் இன்ஸ்விங்கர்களை வீச, மறுபுறம் முகமது சிராஜ் துல்லியமாக பந்தை பிட்ச் செய்தார். நான்காவது ஓவரில் ஆஃப் ஸ்டம்பிற்குள் பந்தை அவர் ஆங்கிள்-இன் செய்ய மார்க்ராம் விளையாடியே ஆக வேண்டிய கட்டாயம் வருகிறது. அவர் சற்று தாமதமாக ஆட, பந்து வெளிப்புற விளிம்பில் முத்தமிடு பின்னே செல்ல இளம் வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக டைவ் அடித்த கேட்ச் செய்தார். எய்டன் மார்க்ரம் 2 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார்.

55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

சிராஜ் பந்துவீச்சில் சரிந்த தென் ஆப்ரிக்கா

மார்க்ரம்மை காலி செய்த பிறகு, சிராஜ், கடந்த டெஸ்டில் சதம் அடித்து இந்தியாவை தோல்விக்கு தள்ளிய டீன் எல்கர் விக்கெட்டிற்கு குறி வைத்தார். எல்கரின் ஸ்டம்புகளையும் உடலையும் நோக்கி சிராஜ் பந்துவீசினார். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே டீன் எல்கருக்கு எட்ஜ் ஆகி பந்து மிட்விக்கெட்டுக்கு மேல் பறந்தது.

இம்முறை, சிராஜ் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை டீன் எல்கர் அடித்தாட முற்பட்டார். அவரது பேட்டில் பின்புறம் பட்ட பந்து ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால், தென் ஆப்ரிக்க அணி 8 ரன்களுக்கு இரண்டாவது விக்கெட்டை இழந்தது.

தொடக்கத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்க அணி, அந்த அதிர்ச்சியில் இருந்து கடைசி வரை மீளவே இல்லை. 8 ரன்னுக்கு 2வது விக்கெட்டை இழந்த தென் ஆப்ரிக்கா, மேலும் 7 ரன்களை எடுப்பதற்குள்ளாக அடுத்த 2 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா தன் பங்கிற்கு அறிமுக வீரர் டிரிஸ்டன் ஸ்டப்சை பெவிலியனுக்கு அனுப்ப, ஷோர்ஜியை சிராஜ் அவுட்டாக்கினார்.

55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

இதன் பிறகு தென் ஆப்ரிக்க வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ஒருவர் கூட களத்தில் நிலைக்கவிலைலை. இதனால் தென் ஆப்ரிக்க அணி 55 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கைல் வெர்னான் 15 ரன்கள் எடுத்தார்.

தென்னாப்பிரிக்காவை 55 ரன்களுக்குள் கட்டுப்படுத்த இந்தியாவுக்கு முதல் நாள் காலையில் வெறும் 23.2 ஓவர்களும் இரண்டு மணி நேரமுமே தேவைப்பட்டன. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பும்ராவுக்கு பிறகு 2-வது வீரர் சிராஜ்

2016-ம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் முகமது சிராஜ் ஆவார். முன்னதாக, ஜஸ்பிரித் சிங் பும்ரா இதனை சாதித்துள்ளார். சர்வதேச அளவில் டிரென்ட் போல்ட் (2 முறை), வெர்னான் பிலாண்டர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பிறகு 5-வது வீரர் சிராஜ் ஆவார்.

55 ரன்களில் சுருண்ட தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

தென் ஆப்ரிக்க அணியால் மீண்டு வர முடியுமா?

இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டை வென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இந்த டெஸ்டில் வென்றால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும். தென் ஆப்ரிக்க அணியால் முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர முடியுமா?

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *