
நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த நபர்கள் குறித்துக் கேள்வி எழுப்பிய 15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த டெர்க் ஒ ப்ரனை முதல் நபராக மாநிலங்களவையில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஒழுங்கற்ற நடத்தைக்காக அவரை நீக்குவதாக மாநிலங்களவைத் தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் தெரிவித்தார். அவர் இதன் பிறகு, நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது.
நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்திய மேலும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பட மூலாதாரம், X/SENTHILKUMAR
மக்களவையில் ஏற்பட்ட கூச்சலுக்கு இடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள், கனிமொழி (திமுக), எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), கே சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட), எஸ். ஜோதிமணி (காங்கிரஸ்), மாணிக்கம் தாக்கூர் (காங்கிரஸ்) இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதேபோன்று கேரளாவை சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வி.கே.ஸ்ரீகந்தன் (காங்கிரஸ்), பென்னி பெஹனான் (காங்கிரஸ்), டீன் குரியகோஸ் (காங்கிரஸ்), ஹிபி ஈடன் (காங்கிரஸ்), டி.என்.பிரதாபன் (காங்கிரஸ்), ரம்யா ஹரிதாஸ் (காங்கிரஸ்) இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்கள் தவிர பிஹாரை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் முகமது ஜாவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
நேற்று(டிசம்பர் 14) நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்த இரண்டு பேர் திடீரென அவையில் குதித்து கையிலிருந்த பொருளைக் கொண்டு வண்ணப் புகை வெளியிட்டனர்.
இந்தச் சம்பவம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு வெளியே, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அதே நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகவை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையில் அனுமதி சீட்டு பெற்றவர்களே நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறிச் செயல்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மக்களவை உறுப்பினர்களுக்கு நேரடியாக வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால் ஏற்பட்ட கூச்சல், குழப்பத்தின்போது 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே வந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “உள்ளே வந்தவர்கள் வெளியிட்ட புகைகூட அடங்கவில்லை. அதற்குள், அவையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் ஒன்றுமே நடக்காதது போல் நடத்தப்படுகின்றன. சம்பவம் குறித்து விளக்கம் கேட்ட நாங்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளோம்.
அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்.பி இன்னும் அவையில் உள்ளார். இதுதான் உங்கள் நியாயமா?
இதேபோன்று வேறொரு சூழலில், எங்களை இடை நீக்கம் செய்துவிட்டு, அவையில் தொழிலாளர் விதிகள் (லேபர் கோட்) நிறைவேற்றப்பட்டது. திமுகவின் மற்றொரு நாடாளுமன்ற எஸ்.ஆர்.பார்த்திபன் இன்று அவைக்கு வரவே இல்லை. அவரையும் சேர்த்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தினார் என்று இடைநீக்கம் செய்துள்ளனர்.
யாரை வெளியனுப்ப வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்திருப்பார்கள். தென் மாநிலங்களைப் பார்த்தால் பொதுவாகவே பாஜகவுக்கு காழ்ப்புணர்ச்சி உண்டு. அவர்களால் கால் வைக்க முடியாத இடம் ஆயிற்றே,” என்றார்.
மக்களவையை ஒத்தி வைப்பதற்கு முன்பாகப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தச் சம்பவம் அனைவராலும் கண்டிக்கப்பட்டது என்றார்.
“நாம் அனைவரும் – ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் – நாடாளுமன்றத்துக்குள் நுழைய யாருக்கு அனுமதி வழங்குகிறோம் என்பது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் பழைய நாடாளுமன்ற கட்டடத்திலும் நிகழ்ந்துள்ளன,” என்றார்.

பட மூலாதாரம், JOTHIMANI SENNIMALAI / FACEBOOK
இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, “நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே இரண்டு பேர் நுழைந்த சம்பவம் இதுதான் முதல்முறை. 2001ஆம் ஆண்டு தாக்குதல் நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்தது.
இரண்டு சம்பவங்களின்போதும் பாஜகதான் ஆட்சியில் இருந்தது. நாங்கள் கேட்டதெல்லாம் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் வந்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதுதான்,” என்றார்.
அனுமதிச் சீட்டை வழங்கிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா மீது நடவடிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர். அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.
இதுகுறித்து இடைநீக்கம் செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பிபிசி தமிழிடம் பேசும்போது, “பிரதமர் விளக்கம் தரவேண்டும் என்று கேட்பது சட்டவிரோத செயலா? குறைந்தபட்ச நேர்மையாவது வேண்டாமா?
பதாகைகள் வைத்துள்ளதை குற்றமாகச் சொல்கிறார்கள். உரிய விளக்கம் அளித்தால் நாங்கள் ஏன் போராடப் போகிறோம்?
நாளை எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் உள்ளது. அதில் இது குறித்து ஆலோசிக்க உள்ளோம்,” என்றார்.

பட மூலாதாரம், @MKSTALIN TWITTER PAGE
“நாடாளுமன்றத்தில் விளக்கம் கேட்டால், இடைநீக்கம் செய்கிறார்கள். இதுபோன்ற கேள்விகளை எழுப்பும்போது பதில் சொல்வதற்காகத் தானே நாடாளுமன்றம் இருக்கிறது,” என்றார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மத்திய பாஜக அரசின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை கண்டனத்துக்குரியது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து உரிமையை நசுக்குவது நாடாளுமன்றத்தின் புதிய நடைமுறையா?
நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்துக் கேள்வி எழுப்பியதற்கு மக்கள் பிரதிநிதிகள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்? 15 உறுப்பினர்களும் மீண்டும் அவைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்