
பட மூலாதாரம், WTO
உலக வர்த்தக சபையின் கூட்டத்தில் அரிசி விவகாரத்தில் இந்தியா மீது குற்றஞ்சாட்ட தாய்லாந்து முயன்றது. இது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
’இந்தியா பொது விநியோக முறைக்காகக் குறைந்த விலையில் அரிசியை வாங்கி, சர்வதேச அரிசி ஏற்றுமதி சந்தையை ஆக்கிரமிப்பதாக’ உலக வர்த்தக அமைப்பிற்கான தாய்லாந்தின் தூதர் பிம்சானோக் வோன்கோர்போன் பிட்ஃபீல்ட், குற்றம் சாட்டினார்.
தாய்லாந்தின் இந்தக் கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட சில குழு உரையாடல்களில் பங்கேற்கவும் இந்திய பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தாய்லாந்தின் கருத்தை சில செல்வந்த நாடுகளின் பிரதிநிதிகள் வரவேற்றனர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி குறிப்பிடுகிறது.
அரிசி விவகாரத்தில் என்ன சர்ச்சை?

பட மூலாதாரம், Getty Images
உண்மையில் பொதுமக்களுக்கான உணவு கையிருப்பிற்கு வரம்பு உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இதற்கான நிரந்தரத் தீர்வை பலமுறை நிறுத்திவிட்டன.
உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டிலுள்ள மொத்த அரிசி உற்பத்தியில் 40 சதவிகிதத்தைக் குறைந்தபட்ச ஆதரவு விலையில் இந்தியா கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள விளைபொருட்கள் சந்தை விலையில் விற்கப்படுகின்றன.
“பொது விநியோக முறைக்கு அதாவது PDSக்கு கொள்முதல் செய்ய இந்தியா MSP அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்குகிறது. PDSக்காக வாங்குவதற்கான ’பப்ளிக் ஸ்டாக் லிமிட்டில்’ இந்தியா விலக்கு பெற்றுள்ளது. அதாவது இந்திய அரசு பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக கொள்முதல் செய்யும் அரிசியின் மீது சேமிப்பு வரம்பு பொருந்தாது,” என்று மூத்த பத்திரிக்கையாளரும் வேளாண்மை நிபுணருமான ஹர்வீர் சிங் கூறினார்.
தாய்லாந்தின் இத்தகைய குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று அவர் கருதுகிறார்.
“பதிவுகளின்படி அப்படி இல்லை. பொது விநியோக முறைக்காக வாங்கும் அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்வதில்லை. மாறாக இந்திய ஏற்றுமதியாளர்கள் அரிசியை சந்தை விலையில் வாங்கி அதை ஏற்றுமதி செய்கிறார்கள் என்று இந்திய அரசு கூறுகிறது. இந்தியா மலிவு விலையில் அரிசியை வாங்கி ஏற்றுமதி செய்து அதன் மூலம் சந்தையை சீர்குலைப்பதாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு உண்மை அல்ல,” என்று அவர் கூறினார்.
அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்திருந்தது

பட மூலாதாரம், Getty Images
உள்நாட்டு சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியா படிப்படியாக அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியது. 2022இல் உள்நாட்டுச் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்தபோது இந்தியா கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது.
முதலில் உடைந்த அரிசிக்குத் தடை விதித்தது. பின்னர் வெள்ளை அரிசி ஏற்றுமதியை நிறுத்தியது. சில அரிசி வகைகளுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது. இது தவிர உள்நாட்டு சந்தையில் விலையைக் கட்டுப்படுத்த பாஸ்மதி அல்லாத அரிசிக்கும் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டது.
அரசு தனது கையிருப்பில் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை விற்றது. இந்தியா இந்தத் தடைகளை விதித்தபோது தாய்லாந்து அதை ஒரு வாய்ப்பாகக் கருதியது. இந்தச் சூழ்நிலையை தாய்லாந்து பயன்படுத்திக் கொள்ள முயலும் என்று தாய்லாந்து அரசின் அப்போதைய நிதி அமைச்சர் கூறியிருந்தார்.
ஆயினும் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவிகிதம். தாய்லாந்தும் ஒரு பெரிய அரிசி ஏற்றுமதியாளராக உள்ளது. இந்தியா தனது சந்தையைக் கைப்பற்றுவதாக தாய்லாந்து நினைக்கிறது.
உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் தாய்லாந்து அரிசி ஏற்றுமதி விவகாரத்தை எழுப்பியதற்கான காரணத்தை விளக்கிய ஹர்வீர் சிங், “உலக வர்த்தக அமைப்பில் விவசாய அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த மேடையில் இந்த விவகாரத்தை எழுப்பலாம் என்று தாய்லாந்து உணர்ந்திருக்க வேண்டும். தாய்லாந்து இந்த வாய்ப்பைp பயன்படுத்திக்கொண்டது. அரிசி ஏற்றுமதியில் தாய்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா தனது ஏற்றுமதிக்கு போட்டி கொடுப்பதாக தாய்லாந்து கருதுகிறது,” என்று குறிப்பிட்டார்.
அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இருப்பினும் அரிசி ஏற்றுமதி மீது இந்தியா விதித்துள்ள ’பகுதி தடை’, மேற்கத்திய நாடுகளிடையே கோபத்தை அதிகரித்துள்ளது.
மானிய விலையில் கொள்முதல் செய்யப்படும் அரிசியை ஏற்றுமதி சந்தைக்கு அனுப்புவதன் மூலம் இந்தியா உலக வர்த்தகத்தில் செல்வாக்கு செலுத்த முயல்வதாக உலகின் வளர்ந்த நாடுகள் காட்ட முயன்றன.
ஆனால் சேமிப்பு வரம்பு விதிகள் பணக்கார நாடுகளுக்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த விதிகள் காரணமாக உற்பத்தியில் 10 சதவீதம் வரை மானியத்தில் வாங்கலாம் என்ற வரம்பை இந்தியா மீறுகிறது.
“இந்த விதிகள் கண்டிப்புடன் அமலில் இல்லை. மேலும் இந்தியா அதிலிருந்து விலக்கு பெறுகிறது. புதிய விதிகள் உருவாக்கப்படும் வரை விதி மீறலை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டன. இது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவு செய்யப்பட்டது. அப்போதிருந்து எந்த சீர்திருத்தமும் செய்யப்படவில்லை. ஏழை நாடுகளுக்கான மிக முக்கியமான பிரச்னையை மேற்கத்திய நாடுகள் கவனிக்கவில்லை என்று இந்தியா கருதுகிறது,” என்று ஹர்வீர் சிங் கூறினார்.
அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2022ஆம் ஆண்டில் உலக அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 40 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு சில அரிசி வகைகளின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், அரிசி ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 27 சதவீதமாக இருந்தது. இருப்பினும் 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி குறையக்கூடும்.
இந்தியாவின் போட்டி நாடான பாகிஸ்தான் தனது உற்பத்தியை அதிகரித்துள்ளதால் போட்டி விலையில் அரிசியை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் பாஸ்மதி ஏற்றுமதி இந்த ஆண்டு குறையலாம் என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.
நீளமான பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னணியில் உள்ளன. இரான், இராக், செளதி அரேபியா, ஏமன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த அரிசிக்கான கிராக்கி அதிகமாக உள்ளது.
இந்தியா 2023இல் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மூலம் 5.4 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளது. அதிக விலை காரணமாக, இந்தியா 2022ஐ விட 2023இல் 21 சதவீதம் அதிகமாக சம்பாதித்துள்ளது.
தாய்லாந்தின் குற்றச்சாட்டுகள் இந்தியாவின் வர்த்தக உறவுகளை பாதிக்குமா?

பட மூலாதாரம், @NOIWEALA
உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்.
உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில், உணவு சேமிப்பு வரம்புக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று இந்தியா கோரிய அதே நாளில் தாய்லாந்து தூதர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் கீழ் ’பொது உணவு கையிருப்பு’ என்பது “அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் அல்லது பிற பொது முகமைகள் மூலம் அரசுகள் உணவு தானியங்களை வாங்குதல், சேமித்தல் மற்றும் விநியோகித்தல்” என்பதாகும்.
தாய்லாந்தின் குற்றச்சாட்டுகள், ’பப்ளிக் ஸ்டாக் ஹோல்டிங்’ மற்றும் விவசாய மானியங்கள் தொடர்பான சிக்கல்களை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளன என்று ஹர்வீர் சிங் குறிப்பிட்டார்.
கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு முக்கியமான உலகளாவிய விஷயமாக மாறியுள்ளது. தேசிய பாதுகாப்புடன் உணவுப் பாதுகாப்பும் இணைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அத்தகைய சூழ்நிலையில் இந்தியா தொடர்பான தாய்லாந்தின் கருத்துகள் பரந்த வர்த்தக நலன்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
“மன்றத்தில் வாய்ப்பு கிடைத்தவுடன் தாய்லாந்து இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளது. இதன் காரணமாக விவசாயம் மற்றும் வர்த்தகம் தொடர்பான விஷயங்கள் பற்றிய விவாதம் தொடங்கும்,” என்று ஹர்வீர் சிங் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அபுதாபியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
“இந்தப் பிரச்னைக்கான தீர்வை யார் தடுக்கிறார்கள், ஏன் உலக வர்த்தக அமைப்பின் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்பதை உலகம் பார்க்க வேண்டும். இந்தியா இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை அடைய விரும்புகிறது. ஆனால் சில நாடுகள் இந்த ஒருமித்த கருத்தை உடைக்கின்றன,” என்றார் அவர்.
உலக வர்த்தக அமைப்பில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், இந்திய விவசாயிகளின் நலன்கள் மனதில் கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என்று பியூஷ் கோயல் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
உலக வர்த்தக அமைப்பின் அமெரிக்க பிரதிநிதி கேத்தரின் தாய் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’சர்ச்சையைத் தீர்க்கும் சீர்திருத்தம் ஒரு சிக்கலான விஷயம்” என்றார்.
இந்தத் திசையில் ஒரு நேர்மறையான, ஆக்கப்பூர்வமான மற்றும் நடைமுறைக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் விவசாயத்தில் விரிவான சீர்திருத்தங்களுடன் இதை இணைக்கின்றன. விவசாய மானியங்களைக் குறைப்பதும் இறக்குமதி வரிகளைக் குறைப்பதும் இதில் அடங்கும். சமீபத்திய மாதங்களில் பல ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள் காரணமாக மேற்கத்திய நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், தற்போது மானியங்களைக் குறைப்பது அல்லது இறக்குமதி வரிகளைக் குறைப்பது பற்றி விவாதிக்கத் தயாராக இல்லை. இதனால்தான் பொது சேமிப்பு வரம்பு விஷயமும் விவாதிக்கப்படாமல் உள்ளது.
கடந்த 2022இல் நடைபெற்ற உலக வர்த்தக சபைக் கூட்டத்தில், 2024ஆம் ஆண்டுக்குள் பயனுள்ள தீர்வு எட்டப்படும் என்று உறுப்பு நாடுகள் உறுதியளித்தன. இப்போது இந்த அமைச்சர்கள் கூட்டத்திலும் முடிவுகளை எட்டுவதற்குப் பதிலாக உறுதிமொழிகள் மட்டுமே வெளியாகும் என்று தெரிகிறது.
இந்தியா மற்றும் தாய்லாந்து இடையே வணிக உறவுகள்

பட மூலாதாரம், @NOIWEALA
இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டுமே தெற்காசிய நாடுகள். இரு நாடுகளுக்கும் அந்தமான் கடலில் நீர் எல்லைகள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே வரலாற்று ரீதியான மற்றும் கலாசார உறவுகளும் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே நல்ல வர்த்தக உறவும் உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் தாய்லாந்து இடையே 14.41 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் இருந்தது என்று ’அப்சர்வர் ஆஃப் எக்கனாமிக் காம்ப்ளெக்ஸிடி’ அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியா தாய்லாந்திற்கு 5.91 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. தாய்லாந்து இந்தியாவிற்கு 8.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான தயாரிப்பு வைரங்கள் ஆகும். அதே நேரத்தில் தாய்லாந்து இந்தியாவிற்கு அதிகபட்ச பாமாயிலை ஏற்றுமதி செய்கிறது.
கடந்த 2023 நவம்பரில் இந்தியா தாய்லாந்திற்கு 33.5 கோடி டாலர்களுக்கு ஏற்றுமதி செய்தது. தாய்லாந்து இந்தியாவுக்கு 80.6 கோடி டாலர்களுக்கு ஏற்றுமதி செய்தது. 2022 நவம்பருடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் ஏற்றுமதி 10.7 சதவிகிதம் குறைந்துள்ளது. தாய்லாந்தின் ஏற்றுமதி 13.3 சதவீதம் குறைந்துள்ளது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்