டிஜிட்டல் புத்தகங்களை வாசிப்பதால் உங்கள் மூளைக்கு ஆபத்து – ஏன்?

டிஜிட்டல் புத்தகங்களை வாசிப்பதால் உங்கள் மூளைக்கு ஆபத்து - ஏன்?

நூல்கள், வாசிப்பு, டிஜிட்டல் சாதனங்கள், குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

‘சயின்டிஃபிக் அமெரிக்கன்’ இதழின் கூற்றுப்படி, காகிதத்தில் வாசிப்பதைவிட, திரையில் வாசிக்கும்போது நமது மூளை அதிகமாக வேலை செய்கிறது. ஆனாலும் திரையில் நாம் வாசித்ததை நீண்ட நேரம் நினைவில் வைத்திருப்பது கடினம்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நூல் வாசிப்பு தான், தன்னையே தனக்குே அடையாளம் காட்டியதாகக் கூறுகிறார்.

படிக்கும் பழக்கம் மன அழுத்தத்தை குறைக்கிறது, மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது மற்றும் உங்கள் கற்பனையையும் மனிதத்துவத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, அறிவையும் வளர்க்கிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ‘தி நியூ ஸ்கூல் ஃபார் சோஷியல் ரிசர்ச்’ நடத்திய ஆய்வின்படி, புத்தகங்களைப் படிப்பது ஒரு நபரின் தனிப்பட்டக் கொள்கைகளையும் மாற்றும்.

ஆனால், இன்று, காகிதப் புத்தகங்களை வாசிப்பதிலிருந்து நகர்ந்து, மக்கள் கணினிகள், டேப்லெட்கள், மொபைல்கள் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் வாசிக்கத் துவங்கியிருக்கின்றனர். குறிப்பாக, கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, இது மிகவும் அதிகரித்திருக்கிறது.

டிஜிட்டல் சாதனங்களில் வாசிப்பது சில நன்மைகளைக் கொண்டுள்ளது. ஒரு புத்தகத்தின் பிரதியை விலைகொடுத்து வாங்குவதைவிட அதன் மென்பதிப்பை குறைந்த விலையில் வாங்க முடியும்.

ஆனால் பல, டிஜிட்டல் சாதனங்களில் வாசிப்பது பல தீமைகளையும் கொண்டுள்ளது. என்னென்ன தீங்குகள் இவை?

அதேவேளையில், நூல்களை வாசிப்பது ஒரு சிகிச்சை முறையாகவும் கையாளப்படுகிறது. கோபம், சோர்வு, மன அமைதியின்மை ஆகியவற்றைச் சரிப்படுத்த நூல் வாசிப்பை சிகிச்சையாகக் கையாள்கின்றனர் சில மனோவியல் வல்லுநர்கள். இது எப்படிக் கையாளப்படுகிறது?

நூல்கள், வாசிப்பு, டிஜிட்டல் சாதனங்கள், குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

திரையில் வாசிப்பதை எளிதில் நினைவில் வைத்திருக்க முடியுமா?

‘பிபிசி ஐடியாஸ்’ தளத்தில் ‘திரையில் வாசிப்பது நம் மூளைக்கு என்ன செய்கிறது’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி, டிஜிட்டல் மயமாக்கலின் தாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்தனர் என்கிறது.

இந்த ஆய்வில் கண்டறியப்பட்டவை குறித்து, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் பல்கலைகழகத்தின் பேராசிரியரும் ஆசிரியருமான ஆன் மேங்கன், “ஸ்மார்ட்ஃபோன்களில் நாம் படிக்கக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் சிறிய செய்தித் துணுக்குகள் போன்ற விஷயங்கள் உள்ளன. ஆனால் இந்த ஆராய்ச்சியின் மூலம் காகிதத்தில் படிக்கும் உள்ளடக்கத்தைவிட, திரையில் படிக்கப்படும் உள்ளடக்கம் எளிதில் புரிந்து கொள்ளப்படுவதில்லை என்று கண்டறியப்பட்டது,” என்கிறார்.

‘சேப்பியன் லேப்ஸ்’ என்ற அமெரிக்கத் தன்னார்வ நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை, குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே ஸ்மார்ட்ஃபோன் கொடுப்பதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் அவர்களின் இளமைப் பருவத்தில் தெரியும் என்கிறது.

‘சயின்டிஃபிக் அமெரிக்கன்’ இதழின் கூற்றுப்படி, காகிதத்தில் வாசிப்பதைவிட, திரையில் வாசிக்கும்போது நமது மூளை அதிகமாக வேலை செய்கிறது. ஆனாலும் திரையில் நாம் வாசித்ததை நீண்டநேரம் நினைவில் வைத்திருப்பது கடினம்.

நூல்கள், வாசிப்பு, டிஜிட்டல் சாதனங்கள், குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குறைந்தது 14 வயது வரை குழந்தைகளை கட்டாயம் புத்தகம் படிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குழந்தைகள் எப்போது நூல்கள் வாசிக்கத் தொடங்க வேண்டும்?

அஷ்விகா பட்டாச்சார்யா 9ஆம் வகுப்பு மாணவி. எப்பொழுதும் வகுப்பில் முதலிடத்தில் இருக்கும் அஷ்விகா, புத்தகங்கள் வாசிக்கிறார், ஆனால் டிஜிட்டல் சாதனங்களில்.

அவரது பெற்றோர் அவருக்கு மென்புத்தகங்கள் வாசிக்க கிண்டில் கருவியைக் கொடுத்திருந்தாலும், இப்போது அவரை முழுமையாக காகிதப் புத்தகங்கள் பக்கம் திருப்ப விரும்புகின்றனர்.

அஷ்விகாவின் தாய் அசிமா கூறுகையில், “அதிகப்படியான மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதால் கண்களில் பல பக்க விளைவுகள் ஏற்படுவதாக நாங்கள் தொடர்ந்து வாசிக்கிறோம். அதனால் எனது மகளை காகிதப் புத்தகங்களின் பக்கம் திருப்ப விரும்புகிறேன்,” என்கிறார்.

அஷ்விகாவின் தோழி ஆத்யா, பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் உறுப்பினராக இருக்கிறார். அவர், ஒவ்வொரு புத்தகத்தையும் வாங்கித்தான் படிக்க வேண்டும் என்பதில்லை, பள்ளியிலோ அல்லது அருகிலுள்ள நூலகத்திலோ உறுப்பினராகலாம், என்கிறார்.

இன்ஃபோசிஸ் குழுமத்தின் இயக்குநரும் எழுத்தாளருமான சுதா மூர்த்தியும் குழந்தைகளை புத்தகம் படிக்க ஊக்குவிக்க வேண்டும் என்கிறார்.

“இன்று குழந்தைகளின் கவனத்தைச் சிதறடிக்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பல உள்ளன. எலக்ட்ரானிக் சாதனங்களால் குழந்தைகளின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க வேண்டும்,” என்கிறார்.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ஒருமுறை சுதா மூர்த்தி பேசுகையில், “குறைந்தது 14 வயது வரை குழந்தைகளை புத்தகம் படிக்க வற்புறுத்துங்கள். இந்த காலகட்டத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்க முயல வேண்டும். குழந்தைகளுக்கு 16 வயது முடிந்தவுடன், அவர்கள் தொடர்ந்து புத்தகங்களைப் படிக்க விரும்புகிறார்களா இல்லையா என்பதை அவர்களிடமே விட்டுவிடுங்கள்,” என்கிறார்.

வாசிப்பால் ஏற்படும் நன்மைகள் என்ன?

டிஜிட்டல் புத்தகங்களை வாசிப்பதால் மூளையில் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

பிபிசி நிருபரான டேனியல் நைல்ஸ் ராபர்ட்ஸ் தயாரித்த ‘திரையில் வாசிப்பது நமது மூளைக்கு என்ன செய்யும்?’ என்ற காணொளியில் பேசியிருக்கும், பிரிட்டிஷ் எழுத்தாளரும் ஓவியருமான கிரெசிடா கோவல், வாசிப்பு மூன்று அற்புதமான குணங்களைக் கொண்டுவருகிறது என்கிறார்.

அவை, படைப்பாற்றல், அறிவு, மற்றும் மற்றவரின் மீதான பச்சாதாபம்.

“ஒரு குழந்தை புத்தகங்களை வாசித்தால், அதில் இரண்டு நன்மைகள் உள்ளன. அவரது அறிவின் வீச்சு அதிகரிக்கிறது, மேலும் அவர் எதிர்காலத்தில் நிதி ரீதியாகவும் வெற்றி பெற முடியும்,” என்கிறார்.

மேலும், வாசிப்பின் மூலம் பார்வை, மொழி, மற்றும் உணர்ச்சிப் பகுத்தறிவுகளுக்கு இடையே நமது மூளையில் புதிய இணைப்புகள் உருவாகின்றன.

மனிதர்கள் எப்போது வாசிக்க ஆரம்பித்தனர்?

மனிதர்களின் வாசிப்புப் பழக்கம் குறித்து ஆய்வு செய்யும் அறிஞர் மரியன் வுல்ஃப், வாசிப்பு என்பது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒரு கலை என்கிறார்.

“இது நம்மிடம் எத்தனை மதுபுட்டிகள் அல்லது செம்மறி ஆடுகள் உள்ளன என்பதைக் கணக்கிடுவதில் இருந்து தொடங்கியது. எழுத்துகள் உருவாக்கப்பட்டபோது, அதன் மூலம் மனிதர்கள் எதையாவது படித்து தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளும் கலையைக் கற்றுக்கொண்டனர்,” என்கிறார் அவர்.

நூல்கள், வாசிப்பு, டிஜிட்டல் சாதனங்கள், குழந்தைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சில சிகிச்சைகளில் கிரேக்க எழுத்தாளரான நிகோஸ் கஸாந்த்ஸகிஸ் எழுதிய ‘ஜோர்பா தி கிரீக்’ என்ற நாவலை வாசிக்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது. அந்த நாவலின் திரை வடிவத்திற்கான போஸ்டர்.

இந்தப் புத்தகத்தை வாசிப்பது உங்கள் சோர்வை குணப்படுத்துமா?

‘பிப்லியோதெரப்பி’ என்பது நூல் வாசிப்பின் மூலம் மனோவியல் சிகிச்சையளிக்கும் முறை.

இம்முறையின் மூலம் ஒரு நபரின் மனநிலை சிக்கல்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது மற்ற பாரம்பரிய சிகிச்சை முறைகளுடன் புத்தகங்களைப் படிப்பதை உள்ளடக்கியது.

இந்த முறையில் சிகிச்சையளிக்கும் நிபுணரான எல்லா பெர்தௌட், புத்தகங்கள் இல்லாவிட்டால், நாம் இன்றைய மனிதர்களாக வளர்ந்திருக்க மாட்டோம், என்கிறார்.

“நெருப்பை உருவாக்கும் ஆற்றல், வாசிக்கும் திறன்’ ஆகியவையே மனித வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்,” என்கிறார் அவர்.

பெர்தௌட், “ஒரு நல்ல கதையைப் படிப்பது நமக்குப் பொழுதுபோக்கு மட்டுமல்ல. வாசிப்பு ஒரு சிகிச்சையின் விளைவைக் கொண்டுள்ளது,” என்கிறார்.

“கிளாஸ்ட்ரோஃபோபியா’ எனப்படும் குறுகலான இடங்களில் இருக்கும்போது ஏற்படும் பயம் மற்றும் மூச்சுத்திணறல், பொதுவாக ஏற்படும் சோர்வு மற்றும் கோபம் போன்ற விஷயங்களால் அவதிப்படுபவர்களுக்கு, கிரேக்க எழுத்தாளரான நிகோஸ் கஸாந்த்ஸகிஸ் எழுதிய ‘ஸோர்பா தி கிரீக்’ என்ற நாவலை வாசிக்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது,” என்கிறார் அவர்.

அவர் மேலும், “அதை வாசிப்பதன் மூலம், உங்கள் மனம் தியான நிலைக்குச் செல்கிறது. இது இதயத் துடிப்பை சமன் செய்யும் செயல்முறை. இது உங்களை அமைதிப்படுத்துகிறது. உங்கள் மனக் கவலையைக் குறைக்கிறது,” என்கிறார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *