
பட மூலாதாரம், GETTY IMAGES
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அரசியல், சினிமா, தொழில் என பல தரப்பிலிருந்தும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 1990-களில் ராமர் கோவில் இயக்கத்தை வழிநடத்திய பாஜகவின் முகங்களும் அடங்கும்.
ஆனால், ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்த இயக்கத்தை வழிநடத்திய எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற பாஜக மூத்த தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை மற்றும் வயதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், பாஜக மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் விழாவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறினார்.
“இந்த விழாவில் அத்வானி முன்னிலையில் இருப்பது அவசியம். ஆனால், அவரை வர வேண்டாம் என நாங்கள் கூறியுள்ளோம். முரளி மனோகர் ஜோஷியுடன் நான் நேரடியாக பேசினேன். அவரை இந்த விழாவுக்கு வர வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர் ‘நான் வருவேன்;’ என தொடர்ந்து கூறினார். `உங்களுக்கு வயதாகி விட்டது, சளி தொந்தரவு உள்ளது. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையும் செய்துள்ளீர்கள்` என்று அவரிடம் நான் மீண்டும்மீண்டும் கூறினேன்” என தெரிவித்தார்.
இவர்கள் இருவரைத் தவிர உமாபாரதி, சாத்வி ரிதம்பரா, கல்யாண் சிங், அசோக் சிங்ஹால் போன்ற இந்து தலைவர்களும் ராமர் மந்திர் இயக்கத்தை வழிநடத்தினர்.
2014-ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்தபோது எழுந்த பிரச்னைகளுள் ராமர் கோவில் கட்டுவதும் முக்கியமானதாகும். இப்போது ராமர் கோவில் இயக்கம் ஜனவரி 22 அன்று முடிவுக்கு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோதி கும்பாபிஷேக விழாவுக்கு வரும்போது, அனைவரின் பார்வையும் அவர் மீதுதான் இருக்கும். ஆனால், ராமர் கோவில் இயக்கத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இருந்த அத்வானி, முருளி மனோகர் ஷோஷி உள்ளிட்ட அந்த முகங்கள் எங்கே?

பட மூலாதாரம், X/@NARENDRAMODI
அத்வானி, முரளி மோகர் ஜோஷியின் உடல்நிலை எப்படி?
எல்.கே. அத்வானிக்கு இப்போது 96 வயதாகிறது, முரளி மனோகர் ஜோஷிக்கு அடுத்த மாதம் 90 வயதாகிறது.
90-களில் விஷ்வ இந்து பரிஷத் அயோத்தி, காசி, மதுரா கோவில்களை ‘விடுவிக்க’ கோரியது. அதனை நோக்கமாகக் கொண்டு விஷ்வ இந்து பரிஷத் ஒரு பிரசாரத்தைத் தொடங்கியது. அதன்படி, எல்.கே. அத்வானி சோம்நாத்திலிருந்து அயோத்தி வரை ரத யாத்திரை நடத்தினார். ஆனால், அப்போதைய பிகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அவரை சமஸ்திபூர் மாவட்டத்தில் கைது செய்தார்.
மசூதியை இடிக்க சதி செய்ததாக அத்வானி மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, அத்வானியின் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோதி, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் போன்ற பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அத்வானியின் வீட்டுக்கே சென்று அவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அத்வானியுடன் தான் இருக்கும் படத்தைப் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோதி, “முன்னாள் துணைப் பிரதமரும் பாஜக முன்னாள் தலைவருமான எல்.கே. அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தேன்” என பதிவிட்டிருந்தார்.
ராமர் கோவில் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்ற அத்வானிக்குப் பிறகு பாஜகவின் இரண்டாவது பெரிய தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆவார்.
டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் போது சர்ச்சைக்குரிய வளாகத்திற்கு அருகில் முரளி மனோகர் ஜோஷி இருந்தார். குவிமாடம் இடிக்கப்பட்டபோது, முரளி மனோகர் ஜோஷியை உமாபாரதி ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முரளி மனோகர் ஜோஷி வாரணாசி, அலகாபாத், கான்பூர் ஆகிய தொகுதிகளில் இருந்து எம்.பி.யாக இருந்துள்ளார்.
இந்த இரு தலைவர்களும் தற்போது பாஜகவின் மார்க்தர்ஷக் மண்டலில் (கட்சி தலைமையை வழிநடத்துவதற்காக மூத்த தலைவர்கள் அடங்கிய குழு) உள்ளனர். ஆனால் இருவரும் இப்போது பொது வாழ்வில் சுறுசுறுப்பாக இருப்பதாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், GETTY IMAGES
உமாபாரதி
மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ராம் மந்திர் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் உமாபாரதியும் இருந்தார். இந்த இயக்கத்தின் மூலம் உமாபாரதிக்கு நாடு முழுவதும் அரசியல் அங்கீகாரம் கிடைத்தது.
பாபர் மசூதி இடிப்புக்குப் பத்து நாட்களுக்குப் பிறகு, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். லிபர்ஹான் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், உமா பாரதி தவறிழைத்ததாக கண்டறிந்தது. உமாபாரதி பாபர் மசூதியை இடிக்க அக்கும்பலைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், அந்த குற்றச்சாட்டை அவர் மறுத்திருந்தார்.
உமா பாரதி மத்தியில் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோதி ஆட்சியில் அமைச்சராக இருந்தார். உமாபாரதி 2003 முதல் 2004 வரை மத்தியப் பிரதேச முதலமைச்சராகவும் இருந்தார்.
இருப்பினும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அவர் விலகி இருந்தார். இதையடுத்து அவர் கட்சியில் ஓரங்கட்டப்படுவார் என்ற கருத்து நிலவியது.
சமீபத்தில் நடைபெற்ற மத்தியப் பிரதேசத் தேர்தலுக்காக பாஜக வெளியிட்ட நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பட்டியலில், உமாபாரதியின் பெயர் இல்லை.
மத்தியப் பிரதேசத் தேர்தலுக்கு முன்பு தான் உமாபாரதி மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், GETTY IMAGES
சாத்வி ரிதம்பரா
சாத்வி ரிதம்பரா ஒரு காலத்தில் இந்துத்துவ அரசியலில் தீவிரமாக இருந்தவர் ஆவார்.
பாபர் மசூதி இடிப்பில் அவர் சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அயோத்தி இயக்கத்தின் போது அவரது அனல் பறக்கும் பேச்சுகளின் ஆடியோ கேசட்டுகள் நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டிருந்தன, அதில் அவர் தனது எதிர்ப்பாளர்களை ‘பாபர் கி அவுலாத்’ (பாபரின் மகன்) என விமர்சிப்பது வழக்கம்.
சாத்வி ரிதம்பராவின் விருந்தாவனத்தில் வாத்சல்ய கிராமம் என்ற ஆசிரமம் உள்ளது.
ஜனவரி 22 நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைப் முதலில் பெற்றவர்களில் சாத்வி ரிதம்பராவும் ஒருவர்.

பட மூலாதாரம், GETTY IMAGES
வினய் கட்டியார், கல்யாண் சிங், எல்.கே. அத்வானி (இடமிருந்து வலமாக)
கல்யாண் சிங்
டிசம்பர் 6, 1992-இல் கல்யாண் சிங் உத்தர பிரதேச முதலமைச்சராக இருந்தார். அவரது ஆட்சியில் பாபர் மசூதியை இடிக்க கரசேவகர்களை காவல்துறையும் நிர்வாகமும் வேண்டுமென்றே தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டார்.
பின்னர் கல்யாண் சிங் பாஜகவில் இருந்து பிரிந்து ராஷ்டிரிய கிராந்தி எனும் கட்சியை உருவாக்கினார். ஆனால் அவர் மீண்டும் பாஜகவுக்கே திரும்பினார்.
மசூதியை இடிக்க சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் கல்யாண் சிங்கின் பெயர் இடம்பெற்றது.
கல்யாண் சிங் ஆகஸ்ட் 2021-இல் தனது 89 வயதில் இறந்தார்.
அசோக் சிங்ஹால்
ராம ஜென்மபூமி இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் அசோக் சிங்ஹாலும் ஒருவர்.
கோவில் கட்டும் இயக்கத்திற்கு மக்கள் ஆதரவை திரட்டுவதில் அசோக் சிங்ஹால் முக்கிய பங்கு வகித்தார். பலரது பார்வையில் அவர் ராமர் கோவில் இயக்கத்தின் ‘தலைமை கட்டடக் கலைஞர்’ என அறியப்பட்டார்.
2011 வரை வி.ஹெச்.பி-யின் தலைவராக இருந்த அவர், உடலநலக் காரணங்களால் அப்பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் நவம்பர் 17, 2015 அன்று இறந்தார்.
வினய் கட்டியார் மற்றும் பிரவீன் தொகாடியா
ராமர் கோவில் இயக்கத்திற்காக 1984-இல் ‘பஜ்ரங் தள்’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் தலைமைப் பொறுப்பை வினய் கட்டியாரிடம் ஆர்.எஸ்.எஸ். ஒப்படைத்தது.
இதனால், வினய் கட்டியாரின் அரசியல் அந்தஸ்து வளர்ந்தது மற்றும் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராகவும் அவர் ஆனார். பைசாபாத் (அயோத்தி) மக்களவைத் தொகுதியில் இருந்து மூன்று முறை வினய் கட்டியார் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். ஆனால், 2018-இல் அவரது பதவிக்காலம் முடிவடைந்தபோது, அவருக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில், விஷ்வ இந்து பரிஷத்தின் மற்றொரு தலைவரான பிரவீன் தொகாடியா, ராமர் கோவில் இயக்கத்தின் போது மிகவும் தீவிரமாக இருந்தார். ஆனால், வி.ஹெச்.பி-யில் இருந்து பிரிந்து சர்வதேச இந்து பரிஷத் என்ற அமைப்பை உருவாக்கினார். ராமர் கோவில் கட்டுவதற்கு முன், பிரதமர் மோதியை பலமுறை விமர்சித்து வந்தார்.

பட மூலாதாரம், GETTY IMAGES
அசோக் சிங் (வலது), பிரவீன் தொகாடியா (கோப்புப்படம்)
சம்பத் ராய் வேறு என்ன சொன்னார்?
விழாவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடாவை அழைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக சம்பத் ராய் தெரிவித்தார்.
“சங்கராச்சாரியார் மற்றும் ஆறு தரிசன மரபுகளை சேர்ந்த 150 முனிவர்கள் மற்றும் துறவிகள் இதில் பங்கேற்பார்கள். இவர்கள் தவிர, சுமார் 4,000 துறவிகள் மற்றும் 2,200 விருந்தினர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.,” என தெரிவித்தார்.
காசி விஸ்வநாதர், வைஷ்ணவ தேவி போன்ற பெரிய கோவில்களின் நிர்வாகத்திற்கும், மத மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சம்பத் ராய் கூறினார்.
மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் அமிர்தானந்தமயி, யோகா குரு ராம்தேவ், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், திரைப்பட இயக்குனர் மதுர் பண்டர்கர் மற்றும் பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி என பல பெரிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராய் கூறினார். பிரபல ஓவியர் வாசுதேவ் காமத், இஸ்ரோ இயக்குனர் நிலேஷ் தேசாய் உள்ளிட்டோரும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ராமர் சிலை பிரதிஷ்டை விழா முடிந்து, ஜனவரி 24-ம் தேதி முதல் அடுத்த 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும் என்றார். ஜனவரி 23ஆம் தேதி முதல் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
விருந்தினர்கள் தங்குவதற்கு அயோத்தியில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது தவிர, பல்வேறு மடங்கள், கோவில்களிலும் 600 அறைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்