சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்: மு.க.ஸ்டாலின் செல்ஃபி எடுத்த இடம் சர்ச்சைக்குள்ளானது ஏன்?

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்: மு.க.ஸ்டாலின் செல்ஃபி எடுத்த இடம் சர்ச்சைக்குள்ளானது ஏன்?

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், mk stalin/X

தமிழ் சினிமா வரலாற்றில் காலம் கடந்து நிற்கும் பல படங்களை தயாரித்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். 1930-களில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (டி.ஆர்.எஸ்) என்பவர் உருவாக்கிய இந்நிறுவனம், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாக்கப்படும் படங்களுக்கு முன்மாதிரியான, காலம்கடந்த படங்களை தயாரித்திருக்கிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் – கருணாநிதி இருவரும் தங்களின் ஆரம்ப கால சினிமா பயணத்தில் இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த படங்கள் மூலமாகவே தடம் பதித்தனர். குறிப்பாக, எல்லீஸ் ஆர். டங்கன் 1950-இல் எம்ஜிஆர் நடித்து கருணாநிதி வசனம் எழுதிய `மந்திரி குமாரி` திரைப்படத்தைக் கூறலாம்.

எல்லீஸ் ஆர். டங்கன், பொம்மன் டி. இரானி போன்ற வெளிநாட்டு இயக்குனர்களை வைத்து பல படங்களை தயாரித்தது இந்நிறுவனம்.

மேலும், 1940-இல் பி.யூ. சின்னப்பா நடித்த `உத்தமபுத்திரன்` திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் இரட்டையர் வேட படமாகும். தமிழின் முதல் வண்ணப்படமான `அலிபாபாவும் நாற்பது திருடர்களும்` படத்தைத் தயாரித்ததும் `மாடர்ன் தியேட்டர்ஸ்` தான்.

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், mk stalin/X

“நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்”

இப்படி புகழ்பெற்ற ‘மாடர்ன் தியேட்டர்ஸ்’ திரைக்கூடம் சேலம் ஏற்காடு சாலையில் கன்னங்குறிச்சி எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது. மாடர்ன் தியேட்டர்ஸின் திரைக்கூடம் வேறோரு தனிநபருக்கு எப்போதோ விற்கப்பட்டு விட்டது. அதன் புகழ்வாய்ந்த வரலாற்றை கருத்தில்கொண்டு, மாடர்ன் தியேட்டர்ஸ்-இன் நுழைவுவாயில் வளைவு மட்டும் அப்படியே விடப்பட்டுள்ளது.

தற்போது இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில்தான் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. அந்த நுழைவுவாயிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிமையாளரிடம் கேட்டதாக செய்திகள் பரவின. இதனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் விமர்சித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, அந்த இடம் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்று கூறி நெடுஞ்சாலைத்துறை சார்பாக அளவீடு செய்து எல்லை கல்லும் நடப்பட்டது. இதற்கு முரணாக, இந்த இடம் தன்னுடையதுதான் என்றும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கல்லை நட்டுவிட்டதாகவும் இவ்விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பிரச்னை தருவதாகவும் கூறுகிறார் அந்த இடத்தின் உரிமையாளர் விஜயவர்மன். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் சேலம் சென்றிருந்தபோது, `மாடர்ன் தியேட்டர்ஸ்` நுழைவுவாயில் முன்பு செல்ஃபி எடுத்துக்கொண்டு அந்நிறுவனத்தை நினைவுகூர்ந்து பதிவொன்றை பகிர்ந்திருந்தார்.

அதில், “டி.ஆர். சுந்தரம் உருவாக்கிய நாற்றங்கால்; திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில், முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான அந்த சேலம் திரையரங்கத்தின் நுழைவுவாயிலைப் படம் பிடித்தேன். 9 மொழிகளில் 118 படங்களைத் தயாரித்து அழியா கலைப் படங்களை உருவாக்கிய அந்நிறுவனத்தின் இந்த நுழைவுவாயில், பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்” என பதிவிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், mk stalin/X

சர்ச்சை என்ன?

இந்த சம்பவம் நிகழ்ந்து பல மாதங்களான நிலையில் தான், அந்த இடம் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என, அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய அந்த இடத்தின் உரிமையாளர் விஜயவர்மன், “மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தை என் தந்தை வாங்கினார். தற்போது இந்த இடம் எனக்கு சொந்தமானது. சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் இங்கு வந்தபோது கூட, மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாக என்னிடம் சொல்லவில்லை. இந்த இடத்தில் என்ன செய்வதாக எண்ணம் இருக்கிறது என என்னுடைய விருப்பத்தைத்தான் கேட்டார்.

ஆனால், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தான் 6-7 முறை என்னை நேரில் அழைத்துப் பேசினார். எங்கள் இடத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் எனக்கூறி அந்த இடத்தைக் கேட்டார். நான் குடும்பத்தில் பேசி சொல்கிறேன் என கூறிவிட்டேன். உண்மையில் எனக்கு அதில் விருப்பம் இல்லை” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “அதன்பின், எனக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமலேயே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் அளவீடு செய்து அந்த இடம் அத்துறைக்கு சொந்தமானது என கல் நட்டும், அறிவிப்புப் பலகையும் வைத்துள்ளனர்” என்றார்.

`மாடர்ன் தியேட்டர்ஸ்` இடம் மொத்தமாக சுமார் 2,348 சதுர அடி கொண்டது. அதில் நுழைவுவாயில் வளைவு மட்டும் சுமார் 1,348 சதுர அடி. தற்போது இந்த நுழைவுவாயில் வளைவும் அதையொட்டிய இடமுமே விஜயவர்மனுக்கு சொந்தமாக இருக்கிறது. மீத இடம் வேறொரு தனிநபருக்கு விற்கப்பட்டு விட்டது.

விஜயவர்மனின் தந்தையிடம் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மூன்று முதலமைச்சர்களை உருவாக்கிய இடம், அதனால் அந்த வளைவு அப்படியே இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதால், அந்த இடம் அப்படியே விடப்பட்டிருப்பதாக விஜயவர்மன் தெரிவித்தார்.

கருணாநிதி

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP VIA GETTY IMAGES

சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமா?

சாலையை விரிவுபடுத்துவதாக கூறி நில அளவீடு செய்யும்போதுதான் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது என அத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விஜயவர்மன், “சாலையை விரிவுபடுத்துகிறார்கள் என்றால், அந்த சாலை முழுவதும் அளந்து கல் பதிக்க வேண்டும். திடீரென அதிகாரிகள் வந்து அங்கிருந்த என் பெயரை எடுத்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியரே நேரில் வந்திருக்கிறார்.

கருணாநிதிக்கு சிலை அமைக்க அந்த இடம் வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரனும் கேட்டனர். இவ்வளவு தூரம் அழுத்தம் வந்தபின்னர் சிலை அமைக்கும் எண்ணம் இல்லை என கூறியிருக்கின்றனர். என்னிடம் பட்டா, நில அளவை பதிவேடு (FMB) உள்ளிட்ட ஆவணங்கள் இருக்கின்றன.

2023, மார்ச் மாதம் இந்த இடத்தின் பட்டா என் பெயருக்கு மாறியது. 2017-இல் இருந்து இதை ஆக்கிரமிப்பு என எப்படி கூறுகின்றனர்?” என்றார் அவர்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை தனது வாகனங்களை கூட உள்ளே நிறுத்த அனுமதி தரவில்லை எனவும், இதுதொடர்பான வழக்கில் விதிகளை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறிய பிறகுதான் வாகனங்களை உள்ளே நிறுத்த அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“என்னுடைய இடத்திற்கு செல்வதற்கான பாதையையே மறைத்துவிட்டனர். இது அராஜகம், அத்துமீறல்.” என புகார்களை தெரிவித்தார்.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தை பலமுறை தொடர்புகொண்டும் அவரின் பதிலை பெற முடியவில்லை. சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ-வை தொடர்புகொண்டபோது தனக்கு ஏதும் இவ்விவகாரத்தில் தெரியாது என கூறினார்.

எ.வ. வேலு

பட மூலாதாரம், Facebook

நெடுஞ்சாலைத்துறை என்ன சொல்கிறது?

இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பரமரிப்பு கட்டுமான பொறியாளர் சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், “குறிப்பிட்ட இடம் மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு கன்னங்குறிச்சி கிராமம் புல எண்.8-ல் சாலை புறம்போக்கில் அமைந்துள்ளது. இச்சாலை ஏற்காடு நெடுஞ்சாலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் பேவர் பிளாக்குகளை அமைத்தும் கேட் அமைத்தும் விஜயவர்மன் தனது நிலத்திற்கு பாதை அமைக்கும் வகையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நெடுஞ்சாலை நில எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக மேற்கண்ட புல எண்ணில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் நில அளவையும் கூட்டு புலத்தணிக்கையும் செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இதன் தொடர்ச்சியாக மனுதாரரின் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எல்லை கற்கள் அமைக்கப்பட்டதாகவும் அதனை அமைக்கும்போது மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதாக உள்ளது உறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டம் 2001 மற்றும் தொடர்புடைய விதிகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள மனுதாரருக்கு தெரிவித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த இடம் அரசுக்கு சொந்தமானதுதான் என்றும் வேறு எவரும் அதற்கு உரிமை கோர முடியாது என்றும் அந்த அறிக்கையில் உறுதிபட தெரிவிக்கப்பட்டிருந்தது.

“சிலை அமைக்கும் திட்டம் இல்லை”

அதேபோன்று, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையிலும் இந்த கருத்துகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. மேலும், மாடர்ன் தியேட்டர் முகப்பைப் பாதுகாத்து பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்றும், வேறு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கோ சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலை அமைப்பதற்காக இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என அவர் கூறியுள்ளார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *