
பட மூலாதாரம், BRIAN HYNEK
பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழமையான புதைப்படிமம்
இது பூமியில் தோன்றிய முதல் உயிர் வடிவத்தின் பிரதிபலிப்பு.
அர்ஜென்டினாவில் உள்ள புனா டீ அட்டகாமாவில் உள்ள “உலகின் தனித்துவமான” உப்புநீர் தடாகம் போன்ற விசித்திரமான சுற்றுச்சூழல் அமைப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழு தாங்கள் கண்டுபிடித்ததாகக் கூறுவது இதைத்தான்.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பு கொலராடோ போல்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியலாளர் பிரையன் ஹைனெக் மற்றும் அர்ஜென்டினா நுண்ணுயிரியலாளர் மரியா ஃபரியாஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பகுதியின் செயற்கைக்கோள் படங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்த போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹைனெக் மற்றும் ஃபரியாஸ் ஆகிய இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தப் படங்களைப் பகுப்பாய்வு செய்து வந்துள்ளனர். அப்போது தான் பாலைவனத்தின் நடுவில் ஒரு குறிப்பிட்ட நீர்நிலை வலையமைப்பாக இருந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.
அதற்கு பின்னரே கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 4,500 மீட்டர் உயரத்தில் உள்ள மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இந்த பீடபூமியைப் பார்வையிட அவர்கள் முடிவு செய்தனர், அங்கு சென்ற பின்னர் தான் அவர்கள் ஸ்ட்ரோமாடோலைட்டுகளின் பச்சை மேடுகளால் மூடப்பட்டிருந்த மிகவும் உப்புத்தன்மையுள்ள, தெளிவான விசித்திரமான ஒரு டஜன் உப்புநீர் தடாகங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்ட்ரோமாடோலைட்டுகள் என்பவை உயிருள்ள பாறைகள் என்று அறியப்படுகின்றன. அவை கனிம தானியங்களால் உருவாக்கப்பட்ட நுண்ணுயிர் திட்டுகள் ஆகும். இவை பாக்டீரியா குழுவால் ஒன்றாக சேர்க்கப்பட்டு உருவாகின்றன.
நாசாவின் கூற்றுப்படி, இவை குறைந்தது 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியில் தோன்றிய உயிர்களின் மிகப் பழமையான புதைபடிவ ஆதாரம் என்று கூறப்படுகிறது.
அவை தோன்றியதிலிருந்தே , சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெற்று வளர்ந்துள்ளன. மேலும் இவை ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதால், பூமியின் வளிமண்டலத்தில் இந்த வேதியியல் தனிமத்தின் அளவை சுமார் 20% ஆக அதிகரித்துள்ளன. இதன் மூலம் பூமியில் உயிர்கள் செழிக்க இவை உதவியுள்ளன.
450 கோடி வருடங்களுக்கு முன்பு பூமி தோன்றியதாக மதிப்பிடப்படுகிறது.
அந்த சமயத்தில் பல ஆண்டுகளுக்கு, தற்போது இருக்கும் பூமியை விட மிகவும் வேறு மாதிரியான பூமி இருந்துள்ளது.

பட மூலாதாரம், BRIAN HYNEK
பூமியில் பதிவாகியுள்ள முதல் புதைப்படிம ஆதாரங்கள்
பூமியில் தோன்றிய முதல் புதை படிமம்
ஸ்ட்ரோமாடோலைட்டுகள் உருவான சமயத்தில் தான், ஒவ்வொரு கண்டங்களாக உருவாகி கொண்டிருந்தன. அதனால், அப்போது அதிகமான எரிமலை செயல்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.
இந்த நீர் முழுவதும் ஆர்சனிக் வேதிப்பொருள் நிறைந்துள்ளது மற்றும் தற்போதைய கடல்களை விட அதிக உப்புத் தன்மை வாய்ந்ததாக உள்ளது.
இந்த கண்டுபிடிப்பின் இணை ஆசிரியரான மரியா யூஜினியா ஃபரியாஸ் பிபிசி முண்டோவுக்கு அளித்துள்ள பேட்டியில், ஆக்ஸிஜன் அல்லது ஓசோன் படலம் எதுவும் அங்கு இல்லை என்று கூறியுள்ளார்.
“இந்த நிலைமைகளின் கீழ், முதல் உயிர் வடிவமான புரோட்டோ பாக்டீரியா உருவாகியுள்ளது. இது ஒன்றிணைந்து காலனிகளை உருவாக்கும் பாக்டீரியா” என்று கூறுகிறார் இந்த அர்ஜென்டீனா விஞ்ஞானி.
காலனிகளை உருவாக்கும் இந்த செயல்பாட்டின் போது, பாக்டீரியா கார்பன் டை ஆக்சைடை ஈர்த்து கொள்கிறது.
“இந்த கார்பன் டை ஆக்சைடில் சில பகுதி கரிமப் பொருள்களாக மாற்றப்படுகிறது, மற்ற பகுதி கால்சியம் பைகார்பனேட்டாக மாற்றப்படுகிறது. இந்த இரண்டாம் பகுதிதான் ஒரு வகை உயிருள்ள பாறையை உருவாக்குகிறது. அதுவே ஸ்ட்ரோமாடோலைட்டுகள்,” என்கிறார் ஃபரியாஸ்.
அவைதான் பூமியில் பதிவாகியுள்ள முதல் புதைப்படிம ஆதாரங்கள்.
350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்ற சூழல்
ஸ்ட்ரோமாடோலைட்டுகள் முதலில் ஆக்சிஜனை கடலுக்குள் வெளியிடுகின்றன. பிறகு வளி மண்டலம் மற்றும் அடுத்து ஓசோன் படலத்தை உருவாக்குகின்றன.
கேம்ப்ரியன் காலத்தில் ஏற்கனவே ஆக்ஸிஜனைக் கொண்டிருந்த பூமியில், யூகாரியோட்களின் வெடிப்பு நிகழ்ந்தது. “அப்போது ஸ்ட்ரோமாடோலைட்டுகளை சாப்பிட்டு இடம்பெயர்ந்த தாவரங்களும் விலங்குகளும் தோன்றின.” என்று கூறுகிறார் மரியா யூஜினியா ஃபரியாஸ்.
350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அந்த பழமையான பூமியின் நிலைமையிலேயே, ஸ்ட்ரோமாடோலைட்டுகள் இன்றும் காணப்படுகின்றன. அதில் பொதுவானதாக குறைந்த அளவு ஆக்ஸிஜன், அதிக புற ஊதா கதிர்வீச்சு, எரிமலை செயல்பாடு மற்றும் உப்பு நீர் உள்ள இடங்கள் உள்ளன.

பட மூலாதாரம், BRIAN HYNEK
பூமியில் செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதி
உலக அளவில் ஒரு சில உப்பு நீர் ஏரிகள் மற்றும் நீர்ப்பகுதிகளில் ஸ்ட்ரோமாடோலைட்டுகள் இன்னும் வாழ்ந்து வருகின்றன. அவையெல்லாம் இவற்றை உண்ண கூடிய வேறெந்த உயிரியும் இல்லாத இடங்கள்.
அதில் ஆஸ்திரேலியா அதன் பல்வேறு வகையான ஸ்ட்ரோமாடோலைட் வாழ்விடங்களுக்காக தனித்துவமாக பார்க்கப்படுகிறது. அங்கு வாழும் மற்றும் புதைப்படிவ ஸ்ட்ரோமாடோலைட்டுகள் உள்ளன.
மேற்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் ஷார்க் பே பகுதி அதன் மிகப்பெரிய வாழ்விடங்களில் ஒன்றாகும்.
ஆனால், ஃபரியாஸின் கூற்றுப்படி, கடல் மட்டத்திலிருந்து 3,600 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்திருப்பதால் ஆண்டிஸில் காணப்படும் சுற்றுச்சூழல் அமைப்பு விசித்திரமானது, வேறுபட்டது.
“அர்ஜென்டினா, சிலி மற்றும் பொலிவியாவில் உள்ள புனா டீ அட்டகாமாவில் காணப்படும் நிலைமைகள் சிறப்பு மிக்கவை. இந்த பகுதி எரிமலைகளால் சூழப்பட்டுள்ளது, இங்கு குறைந்த ஆக்ஸிஜன் அழுத்தம் மற்றும் அதிகமான புற ஊதா கதிர்வீச்சு, ஆர்சனிக் அதிகமுள்ள உப்பு தடாகங்கள் உள்ளன,” என்று கூறும் அவர் தொடர்ந்து பேசுகையில்..
“அவை உயிர் தோன்றலின் முதல் வடிவங்களின் போது பூமியில் இருந்த நிலைமைகளுக்கு மிகவும் ஒத்தவை.” இது பூமியில் செவ்வாய் கிரகத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறார்.
“பூமியில் ஒரு செவ்வாய் கிரகம்”
ஜிப்சம் ஸ்ட்ரோமாடோலைட்டுகளை தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக ஹைனெக் மற்றும் ஃபரியாஸ் விரைவில் புனா டீ அட்டகாமாவுக்குத் மீண்டும் செல்ல விருப்பப்படுகிறார்கள்.
“பொதுவாக ஸ்ட்ரோமாடோலைட்டுகள் கால்சியம் கார்பனேட்டால் உருவானவை, ஆனால் ஜிப்சத்தால் உருவான ஸ்ட்ரோமாடோலைட்டுகள் மிக அதிக உப்பு செறிவுள்ள கடல் சூழலின் கீழ் உருவாகின்றன. இவை செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலைக்கு மிகவும் ஒத்தவை” என்கிறார் ஃபரியாஸ்.
பூமியில் உறைந்து போகாத மிக அதிக உப்பு செறிவுள்ள நீர் கொண்ட உப்பு நீர் தடாகம் இருப்பதை சுட்டிக்காட்டும் இவர், “செவ்வாய் கிரகம் சென்று அங்கு உயிர்கள் உள்ளதா என்று ஆய்வு செய்ய முடியாத நிலையில், குறைந்தபட்சம் பூமியில் அதை பிரதிபலிக்கும் புனா டீ அட்டகாமாவை நம்மால் காண முடிகிறது.” என்று கூறுகிறார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்